

மதுரையில் மக்களவைத் தேர்தலை நிறுத்தக்கோரி சுயேச்சை வேட்பாளர் கே.கே.ரமேஷ் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
மதுரையில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடுகிறார் கே.கே.ரமேஷ். அதிமுக சார்பில் ராஜன் செல்லப்பா மகன் ராஜ் சத்யன், திமுக கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன், அமமுக சார்பில் டேவிட் அண்ணாதுரை ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இவர் தாக்கல் செய்துள்ள மனுவில், "அண்மையில் மதுரையில் அதிமுகவினர் சார்பில் சவுராஷ்டிரா சமூக மக்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் கூட்டத்திற்கு வந்தவர்களுக்கு உணவு, ஸ்ட்வீட் பாக்ஸ் தவிர ரூ.500 வழங்கப்பட்டது.
வேட்பாளர்கள் செலவுக் கணக்கு போலியாக சமர்ப்பிக்கப்படுகிறது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை.
எனவே தேர்தலை நியாயமாக நடத்த வாய்ப்பில்லாத சூழல் இருப்பதால் மதுரையில் மக்களவைத் தேர்தலை நிறுத்திவைக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு தொடர்பாக 'தி இந்து தமிழ் திசை' சார்பில் கே.கே.ரமேஷிடம் தொலைபேசியில் பேசியபோது, "ஆமாம். மதுரை மக்களவைத் தேர்தல் இப்போதைய சூழலில் நிறுத்திவைக்கப்பட வேண்டும் என நான் விரும்புகிறேன். சுயேச்சை வேட்பாளராக நான் போட்டியிடுகிறேன்.
ஆனால், பணபலம் அதிகார பலம் உள்ள கட்சிகள் செலவுக் கணக்கை பொய்யாக காட்டிவிட்டு கோடிக்கணக்கில் பணத்தை இறைக்கின்றனர்.
தொகுதியில் ஓட்டுக்குப் பணம் தாராளமாகப் புழங்குகிறது. இதற்கு என்னிடம் ஃபோட்டோ ஆதாரங்கள் இருக்கின்றன.
இத்தகைய சூழலில் தேர்தல் நிறுத்திவைக்கப்படுவதே சரியானதாக இருக்கும். தேர்தல் நியாயமாக நடைபெறுவதற்கான சூழல் இங்கில்லை" என்றார்.