

வன்னியர் கல்வி அறக்கட்டளை குறித்து அவதூறு பரப்பியதாகக் கூறி திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பாமக சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அரக்கோணம் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன், சோளிங்கர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் அசோகன் ஆகியோரை ஆதரித்து சோளிங்கரில் ஏப்ரல் 1-ம் பிரச்சார பொதுக்கூட்டம் நடந்தது. அதில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், ''வன்னியர் சங்க கல்வி அறக்கட்டளையின் பல்வேறு சொத்துகளை எல்லாம் தனது குடும்பச் சொத்துகளாக ராமதாஸ் மாற்றிக் கொண்டிருக்கிறார்.
குறிப்பாக, திருச்செந்தூர், தென்காசி, குற்றாலம், சிதம்பரம், சென்னையில் இருக்கும் வன்னியர் சொத்துகள் அனைத்தும் ராமதாஸின் துணைவியார் பெயரில் உள்ளது. இந்த விவரங்கள் அனைத்தும் முதல்வரிடம் உள்ளது. தமிழக அரசு நினைத்தால் அவற்றைக் கைப்பற்ற முடியும். இதில் இருந்து சொத்துகளைக் காப்பாற்றவே அதிமுக கூட்டணியில் சேர்ந்துள்ளார் ராமதாஸ். அவர் தன்னையும், குடும்பத்தையும் காப்பாற்றிக்கொள்ள எதையும் செய்யக்கூடியவர்'' என்று கூறியிருந்தார்.
இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ், வன்னியர் கல்வி அறக்கட்டளை குறித்த புகாரை நிரூபிக்க ஸ்டாலின் தயாரா? தவறினால் அரசியலை விட்டு விலகுவாரா? என சவால் விடுத்தார்.
இந்நிலையில் ''இது தொடர்பாக ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது வழக்கு விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்'' என்று கூறி அவருக்கு பாமக சார்பில் வழக்கறிஞர் க.பாலு மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.