Published : 01 Apr 2019 12:37 PM
Last Updated : 01 Apr 2019 12:37 PM

அரசியல் கட்சிகளால் புறக்கணிக்கப்பட்ட அருந்ததியர்கள்!

தமிழகத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த அருந்ததியர்களுக்கு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போதிய அரசியல் பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை என விமர்சனம் எழுந்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் அச்சமூகத்தைச் சேர்ந்தவர்கள் குறிப்பிடத்தக்க அளவில் வேட்பாளர்களாக அறிவிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

அதிமுக மற்றும் அமமுக ஆகிய இரு கட்சிகள் மட்டும் நீலகிரி மக்களவைத் தொகுதியில் அருந்ததிய சமூகத்தைச் சேர்ந்தவர்களை வேட்பாளர்களாக களமிறக்கியுள்ளது. மற்ற முக்கியக் கட்சிகள் எதுவும் அச்சமூகத்திற்கு பிரதிநிதித்துவம் அளிக்கவில்லை. அதேபோன்று, பெரியகுளம் இடைத்தேர்தலில், அமமுக சார்பாக அருந்ததிய சமூகத்தைச் சேர்ந்த கதிர்காமு வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அதே தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த கதிர்காமு, கடந்த செப்டம்பர் மாதம், 2017-ல் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர் ஆவார்.

அதே சமூகத்தைச் சேர்ந்தவர்களான அருந்ததியர் மக்கள் கட்சியின் வளசை ரவிச்சந்திரன் மற்றும், ஆதித் தமிழர் முன்னேற்றக் கழகத்தின் நாகராசன் ஆகியோர் அடிப்படை வசதிகளில் அருந்ததியர் சமூகம் புறக்கணிக்கப்படுவதாக கருதுகின்றனர்.

அருந்ததிய சமூகத்தின் ஒட்டுமொத்த மக்கள் தொகை 50 லட்சம் என அவர்கள் கூறுகின்றனர். ஆனால், தமிழக அரசு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் சாதி ரீதியான வகைப்படுத்துதலின் போது அருந்ததியர் சமூகத்தின் மக்கள் தொகை, முன்னர் இருந்ததை விடக் குறைவாகக் கணக்கிடப்பட்டது.

அமமுகவை ஆதரிக்கும் ஆதி தமிழர் முன்னேற்றக் கழகத்தின் நாகராசன் இதுகுறித்து கூறுகையில், "சட்டப்பேரவையில் எங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் குறைந்தது 15 பேர் எம்எல்ஏக்களாக இருக்க வேண்டும். ஆனால், 2008-ல் வகைப்படுத்துதலின் போது அருந்ததியர்களின் மக்கள் தொகை குறைவாகக் கணக்கிடப்பட்டதால், எங்களின் பிரதிநிதித்துவம் குறைந்துவிட்டது. அருந்ததியர் சமூகம் அதிக அளவில் உள்ள மேற்கு மண்டலத்தில் 8 சட்டப்பேரவை தொகுதிகள் மட்டுமே தனித்தொகுதிகளாக உள்ளன. இதன் காரணமாக, முக்கியக் கட்சிகளும் எங்களுக்கு சீட் தருவதில் தயங்குகின்றனர்" என்றார்.

அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த எம்எல்ஏ தங்கள் கட்சியில் இல்லை என ஒப்புக்கொண்ட திமுகவின் துணை பொதுச் செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான வி.பி.துரைசாமி, தங்கள் கட்சி ஆட்சியிலிருக்கும் போது தான் அச்சமூகத்திற்கு உள் இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டதாகத் தெரிவித்தார். "அது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவு" என்கிறார்.

முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர் இல்லையென்ற போதிலும், அவர் நீலகிரி மக்களுக்கும், கட்சிக்கும் ஆற்றிய பணிகள் பாராட்டத்தக்கவை என்கிறார் வி.பி.துரைசாமி. இவர், 2016 சட்டப்பேரவை தேர்தலில் ராசிபுரம் தொகுதியில் தோல்வியடைந்தவர். நீலகிரி மக்களவைத் தொகுதியில் இருந்து 2009-ல் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆ.ராசா, 2014-ல் தோற்கடிக்கப்பட்டார். எனினும், தொகுதி மக்களுடன் அவர் தொடர்பில் இருப்பதாக, வி.பி.துரைசாமி தெரிவிக்கிறார்.

ஆ.ராசா தோல்வியடைந்தாலும், அவர் மீண்டும் நீலகிரியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக திமுகவினர் எழுப்பிய விமர்சனங்களுக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

அருந்ததியர் சமூகத்தின் வாழ்க்கை நிலையை மேம்படுத்த இன்னும் பல நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு ஒப்புக்கொள்கிறார்.

ஒட்டுமொத்தமாக தலித் சமூகத்தினரை முன்னிலைப்படுத்துவதற்கே முக்கியத்துவம் கொடுக்கும்போதும், தேர்தல் நேரங்களில் சாத்தியமாக இருக்கும் போதெல்லாம் அச்சமூகத்தைச் சேர்ந்தவர்களை விசிக வேட்பாளர்களாக களமிறக்குவதாக வன்னி அரசு தெரிவித்தார்.

பட்டியலினத்தைச் சேர்ந்த மற்ற சமூகத்தினருடன் ஒப்பிடுகையில், அருந்ததியர் சமூகம் இன்னும் முன்னேற்றத்தை அடையாததற்கு இன்னும் வேறு பல காரணங்கள் உள்ளன.

அம்பேத்கர் கல்வி நூற்றாண்டு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில செயற்குழு உறுப்பினருமான பரதன், அருந்ததியர் சமூகத்தினருக்காக போராடுவதாகக் கூறும் தலைவர்கள், மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளும் அவலத்தை நீக்கவில்லை என்றும் அவர்களுக்கான உள் இடஒதுக்கீட்டை முறையாகச் செயல்படுத்தவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டுகிறார்.

தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவரான பரதன், அருந்ததியர்களின் பிரச்சினைகளை தாம் முன்னிலைப்படுத்துவதாகக் கூறுகிறார். "என்னுடைய சமூகப் பிரிவைச் சேர்ந்தவர்கள், நான் செய்யும் இந்த பணிகளால் மகிழ்ச்சியடைவதில்லை" என்கிறார்.

அதிமுகவை ஆதரிக்கும் அருந்ததிய மக்கள் கட்சியின் வளசை ரவிச்சந்திரன், அருந்ததியருக்கென வழங்கப்பட்டுள்ள உள் இடஒதுக்கீட்டைக் கண்காணிக்க குழு அமைக்க வேண்டும் எனக் கோருகிறார். நகர்ப்புறங்களில் வாழும் இச்சமூக மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறார்.

90 ஆண்டுகளுக்கு முன்பு இச்சமூகத்தினருக்கு முறையான கல்வி வேண்டும் என்பதை வலியுறுத்திய எல்.சி.குருசாமி மற்றும் ஹெச்.எம்.ஜெகன்னாதன் ஆகிய தலைவர்களுக்கு சென்னையில் சிலைகள் அமைக்க வேண்டும் எனவும் ரவிச்சந்திரன் வலியுறுத்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x