Published : 12 Apr 2019 11:01 AM
Last Updated : 12 Apr 2019 11:01 AM

தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார் ராகுல்: பாதுகாப்பு ஏற்பாடுகள் பலம்

தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று (வெள்ளிக்கிழமை) காலை முதலில் கிருஷ்ணகிரி வருகிறார்.

காலை 11.35 மணியளவில் அவர் கிருஷ்ணகிரி தேவராஜ் மஹால் அருகே உள்ள காலி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள மேடைக்கு வருகிறார்.

அங்கு தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் வேட்பாளர்களை ஆதரித்துப் பேசுகிறார். தருமபுரி திமுக வேட்பாளர் எஸ். செந்தில்குமார், வேலூர்  திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் , கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் வேட்பாளர் செல்லக்குமாரை ஆதரித்துப் பிரச்சாரம் செய்கிறார்.

மூன்றில் இரண்டு தொகுதிகளில் திமுக வேட்பாளரும் ஒன்றில் காங்கிரஸ் வேட்பாளரும் போட்டியிடுகின்றனர்,

ராகுல் காந்தியின் வருகையை ஒட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

3 தொகுதிகளின் கள நிலவரம் என்ன?

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரியில்,  கே.பி.முனுசாமி (அதிமுக), ஏ. செல்லக்குமார் (காங்கிரஸ்), கணேச குமார் (அமமுக), ஸ்ரீ காருண்யா (மநீம), மதுசூதனன் (நாம் தமிழர்) உள்ளிட்டோர் முக்கிய வேட்பாளர்கள்.

பல வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் அதிமுக - காங்கிரஸ் இடையே இங்கு நேரடிப் போட்டி நிலவுகிறது. அதிமுகவின்  முனுசாமி உள்ளூர் வேட்பாளர் என்பதும், செல்லக்குமார் வெளியூரைச் சேர்ந்தவர் என்பதும் தேர்தல் பிரச்சாரத்தில் முக்கியமாக எதிரொலிக்கிறது. இதனால் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்று கணிக்க முடியாத அளவுக்கு பலத்த போட்டி நிலவுகிறது.

தருமபுரி:

தருமபுரியில், அன்புமணி ராமதாஸ் (பாமக), எஸ். செந்தில் குமார் (திமுக),  பழனியப்பன் (அமமுக) ராஜசேகர் (மநீம), ருக்மணிதேவி (நாம் தமிழர்) ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இந்தப் பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையான மொரப்பூர் ரயில்பாதை திட்டம் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அது எப்போது செயல்பாட்டுக்கு வரும் என்ற கேள்வியை மக்கள் முன் வைக்கின்றனர். அதிமுகவின் செல்வாக்குடன் வலிமையான போட்டியை ஏற்படுத்தியுள்ளார் அன்புமணி. இருப்பினும் 5 ஆண்டுகளாக எம்.பியாக இருந்த அவர் சாதித்தது என்ன? என்ற கேள்வியை எழுப்புகின்றனர் திமுகவினர். இதனால் அன்புமணியா, எஸ்.செந்தில் குமாரா என்று கணிக்க முடியாத அளவுக்கு போட்டி கடுமையாக உள்ளது.

வேலூர்:

தமிழகத்தில் தொடக்கத்திலேயே பரபரப்பான தொகுதி வேலூர். இங்கு திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மற்றும் அவரது தந்தை துரைமுருகன் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து பணத்தை கைப்பற்றியது பரபரப்பை ஏற்படுத்தியது.

ஏ.சி சண்முகம் மற்றும் கதிர் ஆனந்த் என இருவருமே வலிமையான வேட்பாளர்கள் என்பதால் களத்தில் போட்டி மிக கடுமையாக உள்ளது. சிறுபான்மை மக்களின் வாக்கு வங்கி இங்கு குறிப்பிட்ட அளவில் இருப்பது திமுகவுக்கு கூடுதல் பலமாகப் பார்க்கப்படுகிறது. அதேசமயம் ஏ.சி.சண்முகத்துக்கு தனிப்பட்ட முறையில் சமூக வாக்குகள் இருப்பது அவருக்கு வலிமையைத் தருகிறது. இருவரும் சமபலத்துடன் மோதும் சூழல் உள்ளது.

தேர்தல் ஆணையத்தின் அதிரடி நடவடிக்கைகளால் கோடை வெப்பத்தைக் காட்டிலும் அதிகம் கொதிப்பில் இருக்கிறது வேலூர் தொகுதி. வருமான வரித்துறையின் சோதனைகளால் பிரச்சாரத்துக்குக் கூட செல்ல முடியவில்லை என்று நீதிமன்றத்தை நாடினார் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்.

முன்னாள் அமைச்சர், திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் என்ற முகவரியும் முகமும் அவருக்கான அடையாளம் என்பதால் கருத்துக் கணிப்பில் மக்கள் ஆதரவுடன் முதலிடத்தில் உள்ளார். அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

கள நிலவரம் கணிக்க முடியாத சூழலில் உள்ள நிலையில் ராகுலின் பிரச்சாரம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x