Last Updated : 25 Apr, 2019 09:26 AM

 

Published : 25 Apr 2019 09:26 AM
Last Updated : 25 Apr 2019 09:26 AM

கொலுசே... கொலுசே... பெண்களை கவரும் சேலம் கொலுசுகள்!

சங்க காலத்திலிருந்தே முக்கிய ஆபரணங்களில் ஒன்றாக கால் சிலம்பு இருந்துள்ளது. சிலப்பதிகாரம் என்ற மாபெரும் காப்பியம் உருவாகக் காரணமே ஒரு சிலம்புதான். அதன் நவீன வளர்ச்சியே கொலுசு. பெண்களால் தவிர்க்க முடியாத ஆபரணமாகிவிட்ட வெள்ளிக் கொலுசுகளை நுண்ணிய வேலைப்பாடுகளுடன்,  நவீன ரகங்களில் உற்பத்தி செய்யும் பெருமையைத் தக்க வைத்துள்ளது சேலம் மாவட்டம்.

மாங்கனியைப் போல, சேலம்  வெள்ளிக் கொலுசுகளும் சிறப்பு மிக்கவை. சேலம் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் வெள்ளிக் கொலுசுகள், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் மட்டுமின்றி, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா என பல்வேறு மாநிலங்களிலும் உள்ள பெண்களால்  விரும்பி அணியப்படுகிறது. நாளொன்றுக்கு சுமார் 10 லட்சம் ஜோடி கொலுசுகள் சேலத்தில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் மூலமாக, கொலுசுக் கலாச்சாரம் அங்கும் பரவி விட்டது. இதனால், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகள், வளைகுடா நாடுகளிலும் வெள்ளிக் கொலுசுகளுக்கு வரவேற்பு அதிகம் உள்ளது. இதனால், சேலத்து வெள்ளிக் கொலுசுகளுக்கு கடல் கடந்து தேவை அதிகரித்து வருகிறது.

வெள்ளிக் கொலுசு உற்பத்தி மையமாகவே சேலம் மாவட்டம் மாறிவிட்டது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது. சேலத்தில் உற்பத்தி செய்யும் வெள்ளிக் கொலுசுகளுக்கு மட்டும் அப்படியென்ன சிறப்பு? தங்க நகைகளில் நுணுக்கமான வேலைப்பாடுகளை செய்வதில் தமிழர்கள் தலைசிறந்தவர்கள். அதேபோல,  நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் வெள்ளிக்கொலுசு உற்பத்தியில் சிறந்து விளங்குகின்றனர் சேலம் மாவட்டத்தினர். இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களில் பெரும்பாலானோர்,  குடும்பத் தொழிலை விட்டுவிடாமல், வழிவழியாகத் தொடர்ந்து வருபவர்கள். அதனால், அன்று தொடங்கி, இன்று வரை சேலம் வெள்ளிக் கொலுசு என்றாலே, நுணுக்கமான வேலைப்பாடுகள் மிகுந்தது என்ற பெருமை நீடித்து வருகிறது.

சேலம் செவ்வாய்ப்பேட்டை, குகை, மணியனூர், அன்னதானப்பட்டி, சிவதாபுரம், சித்தர்கோயில், ஆத்தூர் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளிக் கொலுசு உற்பத்தி மற்றும் அதைச் சார்ந்த தொழிலில் ஆண்கள், பெண்கள் என 5 லட்சம் பேர் நேரடியாக ஈடுபட்டுள்ளனர். கொலுசுத் தொழிலில் அடிப்படை பணிகளில் பெரும்பாலானவை தற்போது இயந்திரத்தின் உதவியுடன் நடைபெறுகிறது. எனினும்,கொலுசுகளுக்கு அழகு சேர்க்கும் நுணுக்கமான வேலைப்பாடுகள் தொழிலாளர்களின் கையில்தான் இருக்கிறது.

சேலத்தைச் சேர்ந்த வெள்ளிக் கொலுசுத்  தொழி லாளர்கள் பியாரே ஜான் (51),காளியப்பன் (42), கண்ணன்(43) ஆகியோர் கூறும்போது, “முதலில் வெள்ளிக் கட்டியை தடிமனான கம்பிகளாக்கி, பின்னர் அவற்றை மெல்லிய கம்பிகளாக்குவது முதல்படி. அடுத்து, மெல்லிய கம்பியை இயந்திரம் மூலமாக கூந்தல் பின்னல்போல, சிறு பின்னல்களாக மாற்றுவது இரண்டாம்படி. இதேபோல, வெள்ளிக் கட்டியை ஓலைச்சுவடிபோல சிறுசிறு பட்டைகளாக மாற்றுவோம். அவை ஒவ்வொன்றும் ஒரு கொலுசின் அளவுக்கேற்ற நீளத்துடன் இருக்கும். இந்தப் பட்டைகள் மீது சின்னஞ்சிறு பூ வடிவ உருவங்கள் பதிக்கப்படுவது அடுத்தபணி.

குஷ்புவும், வெள்ளிக் கொலுசும்...

ஒரு கொலுசின் நீளம் கொண்ட ஒரு பட்டைக்கு ‘குஷ்பு சிங்கிள்’ என்றும் இரண்டு பட்டைகள் கொண்டதற்கு ‘குஷ்பு டபுள்’ என்றும் பெயருண்டு. பின்னர், பட்டைகளின் மீது சின்னஞ்சிறு வளையங்களை தீயைக் கொண்டு வரிசையாக பதிக்கின்றனர். இந்த

வளையத்தில் முறுக்கப்பட்ட செயின் துண்டுகளையும், அவற்றுடன் சலங்கை ஒலியை எழுப்பக்கூடிய சிறுசிறு குமிழ்களையும் இணைக்கின்றனர். வெள்ளியில் இருக்கும் ஒவ்வொரு சிறு வடிவங்களையும் தீயில் உருக வைத்து, இணைக்கின்றனர்.

இதன் பின்னர், டிசைன்களுக்காக கூடுதலாக முறுக்கப்பட்ட செயின் துண்டுகள், சிறு குமிழ்கள் இணைக்கப்படுகின்றன. இறுதியாக, கொலுசுகள் பாலீஷ் போடப்பட்டு, பளபளவென ஜொலிக்கும் வெள்ளிக் கொலுசுகளாக வடிவம் பெறுகின்றன” என்றனர்.

நம்பிக்கையே அடிப்படை!

பாரம்பரியமாக வெள்ளிக் கொலுசுத் தொழிலில் ஈடுபட்டுள்ள செவ்வாய்ப்பேட்டை பாபுலால் (51) கூறும்போது, “வெள்ளிக் கொலுசு உற்பத்தித் தொழிலுக்கு அடிப்படைத் தேவை நேர்மை, நம்பிக்கை மட்டுமே. ஏனென்றால், ஒரு வெள்ளிக் கொலுசு உருவாவதற்கு வெள்ளியை 10-க்கும் மேற்பட்ட இடங்களுக்கு அனுப்ப வேண்டும். ஒவ்வொரு இடத்திலும் வெள்ளியானது வெவ்வேறு உருவத்தைப் பெற்று,  இறுதியாக வெள்ளிக் கொலுசாக வடிவமெடுக்கும். பத்து இடங்களில் வெள்ளியைக் கொடுத்து, வாங்குவது முற்றிலும் நம்பிக்கையின் அடிப்படையில் தான். ஓரிடத்தில் வெள்ளி களவாடப்பட்டால், அது அடுத்தடுத்துள்ள அனைவரையும் பாதித்துவிடும். சேலத்தில் பலரும் பாரம்பரியமாக இத்தொழிலில் ஈடுபட்டுவருவதால், எல்லோருமே நுணுக்கமான திறன் கொண்டவர்கள். வெள்ளிக்கொலுசுகள் பல அடுக்குகளாக கூட்டப்படும். அதனடிப்படையில், குஷ்பு ஜால்ரா பின்னல், குஷ்பு வர்ஷா சலங்கை, பின்னல் ஜால்ரா என பல ரகங்கள் உள்ளன.

கொலுசுகள் 25 கிராம் எடையில் இருந்து கால் கிலோ எடை வரை வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப உற்பத்தி செய்யப்படுகின்றன.வெள்ளிக் கொலுசுத் தொழிலுக்கு வங்கிக்  கடனுதவி, இன்சூரன்ஸ் வசதிகள் உண்டு.  ஆனால், தொழிலில் ஏற்படும் திடீர் இழப்புகளை ஈடுகட்ட எவ்வித உதவியும் கிடைப்பதில்லை.

வெள்ளிக் கொலுசு தொழிலின் மூலமாக அரசுக்கு ஏராளமான வரி வருவாய் கிடைத்து வருகிறது. ஏற்றுமதிக்கான வாய்ப்புகளும் மிக அதிகம் உள்ளன. எனவே, இத்தொழிலின் வளர்ச்சிக்கு அரசு கவனம் செலுத்தினால், லட்சக்கணக்கானோரின் வேலைவாய்ப்புகள் பாதுகாக்கப்படும். சேலத்தின் தொழில் வளர்ச்சியும் நீடித்து இருக்கும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x