Published : 01 Sep 2014 12:24 PM
Last Updated : 01 Sep 2014 12:24 PM

எது காந்திய வழி ஆட்சி?- தமிழக அரசுக்கு ராமதாஸ் கேள்வி

கல்வி முதல் மதுவிலக்கு வரை அனைத்திலும் காந்தியின் கொள்கைகளுக்கும், போதனைகளுக்கும் எதிராக தமிழக அரசு செயல்பட்டு வரும் நிலையில், காந்திய வழியில் அ.தி.மு.க. ஆட்சி நடப்பதாக எப்படி கூற முடியும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் "தேசத் தந்தை மகாத்மா காந்தியடிகளின் 146 ஆவது பிறந்தநாளையொட்டி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான பேச்சுப் போட்டி மற்றும் கவிதைப் போட்டிக்கு தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை ஏற்பாடு செய்திருக்கிறது.

வரும் 10 ஆம் தேதி சென்னை பாரதி மகளிர் கல்லூரியில் நடைபெறும் இப்போட்டிகளுக்கு ‘காந்திய வழியில் அம்மா ஆட்சி’ என்ற தலைப்பு வழங்கப்பட்டிருப்பதாக கல்லூரி கல்வி இயக்குனர் அலுவலகம் அறிவித்துள்ளது.

மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளையொட்டி அவர் ஆற்றிய அரும்பணிகளை நினைவு கூறும் வகையில் பேச்சுப் போட்டி மற்றும் கவிதைப் போட்டிகளை நடத்துவது வரவேற்கத்தக்கது தான். ஆனால், காந்தியடிகள் பற்றி நினைவு கூறுவதற்கு எவ்வளவோ சிறப்புகள் இருக்கும் நிலையில், அவை சார்ந்த தலைப்புகளில் போட்டிகளை நடத்துவதை விடுத்து தமிழக முதலமைச்சரின் புகழைப் பாடும் வகையில் ‘காந்திய வழியில் அம்மா ஆட்சி’ என்ற தலைப்பு வழங்கப்பட்டிருப்பது சரியா? என சம்பந்தப்பட்டவர்கள் சிந்திக்க வேண்டும்.

மக்களின் வரிப்பணத்தில் நடைபெறும் ஆட்சியில் அம்மா உணவகம், அம்மா உப்பு, அம்மா மருந்தகம், அம்மா சந்தை, அம்மா திரையரங்கம் என முதலமைச்சர் புராணம் பாடும் அவலம் தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அமைச்சர்களும், மேயர்களும் முதலமைச்சரை மகிழ்வித்து புதிய பதவிகளை அடையவும், அடைந்த பதவிகளை தக்க வைக்கவும் இத்தகைய செயல்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர். அரசியல்வாதிகள் தங்கள் சுயநலத்துக்காக இவ்வாறு செய்வதை புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால், நடுநிலையாக நடந்து கொள்ள வேண்டிய கல்லூரிக் கல்வித் துறை அதிகாரிகள் எதற்காக இப்படிப்பட்ட தலைப்புகளில் போட்டி நடத்தி வளரும் தலைமுறையினரை ‘புகழ் பாடும்’ புதைகுழியில் தள்ளத் துடிக்கிறார்கள் என்பது தான் புரியவில்லை. ஆளும்கட்சியிரைப் போலவே அதிகாரிகளும் செயல்பட முயல்வது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

நல்ல கருத்துக்களைக் கூறும் நூல்களை படிக்கும் வழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று மகாத்மா காந்தி கூறினார். ஆனால், 12,500 ஊராட்சிகள் உள்ள தமிழகத்தில் வெறும் 4370 நூலகங்களை மட்டுமே தமிழக அரசு திறந்திருக்கிறது; அதுமட்டுமின்றி, அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மூடத் துடிக்கிறது. அனைத்து வகையான கல்வியும் மாநில மொழியில் வழங்கப்பட வேண்டும் என்று தேசத் தந்தை போதித்தார்.

ஆனால், ஆங்கில வழிக் கல்வி வழங்கும் தனியார் பள்ளிகளை ஊக்குவிப்பதுடன், அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வியை திணிக்கும் செயலில் அரசு தீவிரம் காட்டுகிறது.

மது மனிதனை மிருகமாக்கும் என்று கூறி தமது வாழ்நாள் முழுவதும் மதுவை எதிர்த்து போராடினார்; மதுவிலக்கிற்காக பரப்புரை மேற்கொண்டார். ஆனால், தமிழ்நாட்டில் 6,800 மதுக்கடைகள் மற்றும் 4,271 குடிப்பகங்களை தெருவுக்கு தெரு திறந்து வைத்து மக்களை குடிக்க வைத்து சீரழிக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டிருக்கிறது.

இந்தியாவில் குஜராத், நாகாலாந்து ஆகிய மாநிலங்களிலும், லட்சத்தீவு யூனியன் பிரதேசத்திலும் முழு மதுவிலக்கு நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. மணிப்பூர் மாநிலத்தின் சில பகுதிகளில் மதுவிலக்கு நடைமுறையில் உள்ளது. படிப்படியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்தப்போவதாக அறிவித்துள்ள கேரள அரசு, வரும் 12ஆம் தேதி முதல் அனைத்து குடிப்பகங்களையும், காந்தியடிகள் பிறந்தநாளான அக்டோபர் 2 ஆம் தேதி முதல் 10% மதுக்கடைகளையும் மூட உத்தரவிட்டுட்டுள்ளது. மராட்டிய மாநிலத்தில் ஏதேனும் கிராமத்தில் மதுக்கடைகள் கூடாது என அப்பகுதி மக்கள் விரும்பினால், உடனடியாக அவர்களிடம் வாக்கெடுப்பு நடத்தி மதுக்கடைகளை மூடும் முறை வழக்கத்தில் உள்ளது.

ஆனால், தமிழகத்திலோ அரசே மதுக்கடைகளை நடத்துவதுடன், இலக்கு நிர்ணயித்து மது விற்பனை செய்து வருகிறது. மதுக்கடைகளுக்கு எதிராக ஏதேனும் கிராமசபைகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அந்த கிராமங்களில் உள்ள மதுக்கடைகள் உடனடியாக மூட வேண்டும்; குடியிருப்பு பகுதிகளில் உள்ள மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என்று வரலாற்று சிறப்பு மிக்க 2 தீர்ப்புகளை மதுரை உயர்நீதிமன்றம் அளித்துள்ள போதிலும் அவற்றையெல்லாம் தமிழக அரசு மதிக்க வில்லை.

கல்வி முதல் மதுவிலக்கு வரை அனைத்திலும் காந்தியின் கொள்கைகளுக்கும், போதனைகளுக்கும் எதிராக தமிழக அரசு செயல்பட்டு வரும் நிலையில், காந்திய வழியில் அ.தி.மு.க. ஆட்சி நடப்பதாக எப்படி கூற முடியும்? காந்தியடிகளின் பிறந்தநாள் விழா பேச்சுப் போட்டி மற்றும் கவிதைப் போட்டிக்காக இப்படி ஒரு தலைப்பைத் தேர்வு செய்ததன் மூலம் பொய்யாகவாவது முதலமைச்சரை புகழ்ந்து பரிசுகளை பெறும்படி மாணவர்களை அரசு தூண்டுகிறது. பொய்மைக்கு எதிராக போராடிய காந்தியடிகள் பிறந்தநாள் விழா போட்டியில் பொய் சொல்லும்படி மாணவர்களைத் தூண்டுவதைவிட, நாட்டின் விடுதலைக்காக போராடிய தேசத்தந்தைக்கு செய்யும் பெரிய துரோகம் என்னவாக இருக்க முடியும்?

எனவே, காந்தியடிகள் பிறந்தநாளையொட்டி ‘காந்திய வழியில் அம்மா ஆட்சி’ என்ற தலைப்பில் போட்டிகளை நடத்துவதைக் கைவிட்டு, காந்தியடிகளின் புகழ்பாடும் வகையிலான தலைப்பில் பேச்சுப் போட்டி மற்றும் கவிதைப் போட்டியை நடத்த வேண்டும். காந்தியடிகளை சிறுமைப்படுத்தும் வகையிலான தமிழக அரசின் இம்முயற்சிக்கு எதிராக காந்தியத்தில் நம்பிக்கை கொண்டோர் குரல் எழுப்ப வேண்டும்"

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x