Published : 13 Apr 2019 15:15 pm

Updated : 13 Apr 2019 15:18 pm

 

Published : 13 Apr 2019 03:15 PM
Last Updated : 13 Apr 2019 03:18 PM

மீன்வளத்துறை அமைச்சகம்; கிசான் கிரெடிட் கார்டு சலுகைகள் மீனவர்களுக்கும் விரிவாக்கம்: ராமநாதபுரம் பிரச்சாரத்தில் மோடி உறுதி

மத்தியில் மீண்டும் பாஜக அமைந்தவுடன் மீன்வளத்துறை அமைச்சகம் அமைக்கப்படும் என ராமநாதபுரத்தில் பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தார்.

ராமநாதபுரம் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், தூத்துக்குடி பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், சிவகங்கை வேட்பாளர் எச்.ராஜா ஆகியோரையும் நெல்லை அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியனையும் ஆதரித்து வாக்கு சேகரித்து பிரச்சாரம் செய்தார்.


அவரது பேச்சை பாஜக தேசிய செயலர் எச்.ராஜா மொழிபெயர்த்து வழங்கினார்.

பிரதமர் பேசியதாவது:

''நான் காசியின் வேட்பாளர். இன்று ராமநாதபுரத்தில் பிரச்சாரம் செய்கிறேன். காசியும் ராமநாதபுரம் உணர்வுப்பூர்வமாக இணைக்கப்பட்டிருக்கிறது. முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் கனவுகளைப் பூர்த்தி செய்து இந்தியாவை புதிய உச்சத்துக்கும் புகழுக்கும் எடுத்துச் செல்ல வேண்டும்.

இன்று கலாம் இருந்திருந்தால் செயற்கைக்கோள்களை அழிக்கும் ஏவுகணைகளைத் தடுத்து அழிக்கும் ஏ சாட் சோதனையை, மிஷன் சக்தியைக் கொண்டாடி மகிழ்ந்திருப்பார். அனைவரோடும் இணைந்து அனைவருக்கும் மேம்பாடும் என்ற திட்டத்தின் மூலம் கலாம் கனவை நாம் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்.

2019 -ல் உள்ள இந்தியா 2014-ல் இருந்த இந்தியாவைவிட மாறுபட்டது. ஆனால், இந்தியா வறுமையை வேகமாக ஒழித்துக் கொண்டிருக்கிறது. ஏழைகளுக்கு வங்கிக் கணக்கு தொடங்கிக் கொடுத்தது பாஜகவே. ஏழை குடும்பங்களுக்கு எல்பிஜி சிலிண்டர் வழங்கி ஏழைப் பெண்கள் புகை இல்லாமல் சமைத்துப் பயனடைந்து வருகிறார்கள். மாபெரும் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை ஆயுஷ்மான் பாரத் மூலம் பாஜக வழங்கியிருக்கிறது. இதனால், 50 கோடி இந்தியர்களுக்கு தரமான வைத்தியம் சுலபமான விலையில் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்கு மக்களின் ஆசியே காரணம்.

சுற்றுலாத்துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ராமேஸ்வரம் - தனுஷ்கோடி ரயில் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. பாம்பன் பாலம் 100 ஆண்டுகால வரலாற்றின் உதாரணமாக இருக்கிறது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் நதிநீரை இணைக்க, நீர்வளத்தைப் பாதுகாக்க ஜல் சக்தி என தனி அமைச்சகம் அமைக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல் மே 23-ல் பாஜக ஆட்சி மீண்டும் அமைந்த பின்னர் மீனவர்களுக்கு தனி அமைச்சகம் அமைக்கப்படும். கிசான் கிரெடிட் கார்டு பலன்கள் மீனவர்களுக்கும் நீட்டிக்கப்படும்.

மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்லும்போது அவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய நவீன கருவி அளிக்கப்படும். உள்ளூர் மொழியில் அறிவுரைகள் கூறும் கருவிகள் இஸ்ரோ உதவியுடன் அளிக்கப்படும். முகையூர் துறைமுகப் பணிகள் முடுக்கிவிடப்படும்.

பாரதிய ஜனதா கட்சி வளர்ச்சி, எல்லாத் துறைகளிலும் வளர்ச்சி, அனைவருக்கும் வளர்ச்சி என்ற கோட்பாட்டுடன் ஆட்சி நடத்துகிறது. ஆனால், காங்கிரஸ் அழிவு மனப்பான்மை கொண்டு தேசத்தைப் பின்னோக்கி இழுத்துச் செல்கிறது.

காங்கிரஸ் - திமுக கூட்டணி ஒரு கலப்படக் கூட்டணி. இந்தக் கூட்டணிக்கு தொலைநோக்குப் பார்வை இல்லை. அத்தகைய பார்வை இல்லாததால் அல்லும் பகலும் மோடியை அகற்றுவோம், மோடியை அகற்றுவோம் என்று மட்டும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

என்னை அவமதிப்பதாக நினைத்து நாட்டின் அமைப்புகளை அவமானப்படுத்துகிறார்கள். ராணுவத்தை அசிங்கப்படுத்தினார்கள். ஆனால், இந்தியா ஜிகாதியை பொறுக்காது. தீவிரவாதிகள் எங்கிருந்தாலும் கண்டுபிடித்து ஒழிக்கும்.

நாங்கள் முஸ்லிம் பெண்களின் மாண்பைப் பேண முத்தலாக் தடை சட்டம் கொண்டுவந்தோம். ஆனால், காங்கிரஸும் திமுகவும் முஸ்லிம் லீக் இஸ்லாமியப் பெண்களின் மாண்பை மதிக்கவில்லை. அதற்காகவே அவர்கள் அந்த மசோதாவை எதிர்த்தன. வாக்கு வங்கி அரசியல் காரணமாக காங்கிரஸ் தேசத்தின் கலாச்சாரத்துக்கு எதிராகச் செயல்படுகிறது.

அதேபோல் சபரிமலை விவகாரத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகள் ஆபத்தான விளையாட்டை விளையாடின. பாஜக இருக்கும் வரை நமது நம்பிக்கையை யாரும் அழிக்க முடியாது. நாடே முதன்மை என்பது பாஜகவின் பார்வை. குடும்பமே முதன்மை என்பது காங்கிரஸ் கட்சியின் பார்வை.

காங்கிரஸுக்கு மக்கள் பல ஆண்டுகள் வாய்ப்பு அளித்தனர். ஆனால் அவர்கள் அதை சுயநலத்துக்காகவே பயன்படுத்தினார்கள். இதுவரை தமிழகத்தைச் சேர்ந்த எந்த ஒரு குடியரசுத் தலைவருக்காவது தமிழகத்தில் காங்கிரஸ் நினைவு மண்டபம் நிறுவியிருக்கிறதா? இல்லை. ஆனால் நாங்கள் அப்துல் கலாமுக்கு நிறுவினோம்.

கலாமை அனைவரும் அறிய வேண்டும் என்பதற்காக நினைவு மண்டபம் நிறுவினோம். காங்கிரஸுக்கு திமுகவுக்கு முஸ்லிம் லீக் கட்சிக்கு வாக்கு அளிப்பது அதிக வரி குறைந்த வளர்ச்சி என்ற நிலையை ஏற்படுத்தும். தீவிரவாதத்தை ஊக்குவிக்கும்''.

இவ்வாறு மோடி பேசினார்.


தவறவிடாதீர்!

    மோடிமோடி பிரச்சாரம்மோடி ராமநாதபுரம் பிரச்சாரம்மக்களவைத் தேர்தல்நயினர் நாகேந்திரன்தமிழிசைஎச்.ராஜா

    Sign up to receive our newsletter in your inbox every day!

    More From This Category

    More From this Author

    x