பாஜகவுக்கு வாக்கு கேட்டவர் அடித்துக் கொலை: தமிழிசை கண்டனம்

பாஜகவுக்கு வாக்கு கேட்டவர் அடித்துக் கொலை: தமிழிசை கண்டனம்
Updated on
1 min read

பாஜகவுக்கு வாக்கு கேட்ட கோவிந்தராஜ் அடித்துக் கொலை செய்யப்பட்டதற்கு, தமிழிசை  தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள தென்னமநாடு கிராமத்தைச் சேர்ந்தவர் சமூக ஆர்வலர் கோவிந்தராஜ். மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு ஆதரவாக தனியாகவே சென்று தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வந்தார்.

கோவிந்தராஜ் நேற்று முன்தினம் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் போது, கோபிநாத் என்ற பேருந்து ஓட்டுநர், ''எதற்கு மோடிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்கிறாய்?'' எனக் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த கோபிநாத், கோவிந்தராஜை அடித்து, உதைத்தாராம். இதனால் நெஞ்சவலி ஏற்பட்ட நிலையில், மயங்கி விழுந்த கோவிந்தராஜை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் கோவிந்தராஜ் இறந்தார். இது தொடர்பாக கோபிநாத்தை நேற்று போலீஸார் கைது செய்தனர்.

கோவிந்தராஜ் மறைவு குறித்து தமிழக பாஜக தலைவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''தஞ்சாவூரில் மோடி மற்றும் பாஜகவுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்த 75 வயது கூலித்தொழிலாளி கோவிந்தராஜன், திமுக/காங்கிரஸ் ஆதரவாளர்களால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளதற்கு எனது கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கோவிந்தராஜன் பாஜக உறுப்பினராக இல்லையென்றாலும், மோடி மீது இருக்கும் தனிப்பட்ட அன்பினால், தான் வசிக்கும் பகுதியில், பிரதமர் மோடிக்கு ஆதரவு திரட்டிக் கொண்டிருந்தார். மோடி படம் போட்ட சட்டையையும் அவர் அணிந்திருந்தார். இந்தக் கொலை அதிர்ச்சியைத் தந்துள்ளது. குற்றம் செய்தவர்கள் சட்டத்துக்கு முன் கொண்டுவரப்பட வேண்டும்'' என்று தமிழிசை வலியுறுத்தியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in