

நீலகிரி மாவட்டம் ஏக்குணி கிராமத்திலிருந்து பஞ்சாபில் குடியேறிய பெண்கள், வாக்களிக்க ஏக்குணி கிராமத்துக்கு வந்தனர்.
நீலகிரி மாவட்டம் உதகை அருகே ஏக்குணி கிராமத்தை சேர்ந்தவர்கள் அஞ்சனா மற்றும் அம்ரிதா. அம்ரிதா மற்றும் அஞ்சனா குடும்பத்தினர் தொழில் காரணமாக பஞ்சாபில் குடியேறி உள்ளனர்.
இந்நிலையில், தேர்தலில் தங்கள் வாக்கைப் பதிவு செய்வதற்காக இருவரும் ஏக்குணி கிராமத்துக்கு வந்தனர். ஏக்குணியில் உள்ள வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.
ஜனநாயகக் கடமையை நிறைவேற்றியது பெருமைக்குரியது என பெருமிதம் தெரிவித்தனர். அஞ்சனா மற்றும் அம்ரிதா கூறும் போது, ''தேர்தலில் வாக்களிப்பது நமது அடிப்படை உரிமையாகும். ஏக்குணி கிராமத்தை சேர்ந்த எங்கள் குடும்பத்தினர் தொழில் காரணமாக பஞ்சாபில் குடியேறினோம். ஒவ்வொரு தேர்தலுக்கும் கட்டாயமாக சொந்த ஊருக்கு வந்து எங்கள் வாக்கைப் பதிவு செய்வோம். இந்தத் தேர்தலிலும் வாக்களிக்க, கடந்த இரு நாட்களுக்கு முன்பு ஏக்குணி வந்தோம். தேர்தலில் வாக்களித்ததைப் பெருமையாகக் கருதுகிறோம்'' என்றனர்.