சிலைகளை பாதுகாக்க முடியவில்லை என்றால், அனைத்து கோவில்களையும் மூடிவிடலாமே: உயர் நீதிமன்றம் அதிருப்தி

சிலைகளை பாதுகாக்க முடியவில்லை என்றால், அனைத்து கோவில்களையும் மூடிவிடலாமே: உயர் நீதிமன்றம் அதிருப்தி
Updated on
1 min read

வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட தமிழக கோவில் சிலைகளை மீட்க சிறப்புக் குழு அமைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு மத்திய - மாநில அரசுகள், தொல்லியல் துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெகன்னாத்,  உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில்

“இந்தியாவில் இருந்து, குறிப்பாக தமிழகத்தில் இருந்து கடந்த 50 ஆண்டுகளாக சிவன், விஷ்ணு, விநாயகர், ராஜேந்திர சோழன் உள்ளிட்ட சிலைகள், அமெரிக்கா, ஜெர்மனி, நெதர்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு கடத்தப்படுகிறது,  இந்த சிலைகளை மீட்க மத்திய - மாநில அரசுகள் இணைந்த சிறப்பு கூட்டு மீட்பு குழுவை அமைக்க உத்தரவிடவேண்டும்” எனக்கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுசம்பந்தமாக மத்திய - மாநில அரசுகளுக்கு அனுப்பிய மனுவுக்கு எந்த பதிலும் இல்லை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மனுவுக்கு பதிலளிக்கும்படி, மத்திய கலாச்சார துறை, தொல்லியல் துறை, வெளியுறவுத்துறை,  தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதற்கிடையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தேவையான உள்கட்டமைப்பு ஏற்படுத்துவது, நிதி ஒதுக்குவது தொடர்பாக உத்தரவுகளை நிறைவேற்றவில்லை என பொன் மாணிக்கவேல் ஆஜராகி குற்றம் சாட்டினார்.

இதுதொடர்பாக ஒரு வாரத்தில் அரசாணை பிறப்பிக்கப்படும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் திருச்சுழி திருமேனிநாதர் கோவிலில் உள்ள மயில் சிலை வழக்கில் 1300 ஆண்டு பழமையான சிலை மாயமானது குறித்து நடவடிக்கை எடுக்காததற்கு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்து, சமந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தினர்.

மேலும், கோடிக்கணக்கான ரூபாயை பக்தர்கள் கோவிலுக்கு செலுத்தும் நிலையில், சிலைகளை பாதுகாக்க முடியவில்லை என்றால், அனைத்து கோவில்களையும் மூடவிடலாமே என வேதனை தெரிவித்தனர்.

திருமேனிநாதர் கோவில் சிலை மாயம் குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 29-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in