பொள்ளாச்சி வழக்கு விசாரணையில் தாமதம் ஏன்? - டிடிவி தினகரன் கேள்வி

பொள்ளாச்சி வழக்கு விசாரணையில் தாமதம் ஏன்? - டிடிவி தினகரன் கேள்வி
Updated on
2 min read

பொள்ளாச்சி வழக்கு விசாரணையில் தாமதம் ஏன் என, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக டிடிவி தினகரன் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவங்களால் நூற்றுக்கும் மேற்பட்ட இளம்பெண்கள் தங்கள் வாழ்க்கையைத் தொலைத்த நிகழ்வு வெளியே வந்து தமிழகத்தையே உலுக்கியது. பெண் குழந்தைகளைப் பெற்ற தாய்மார்கள் நெஞ்சமெல்லாம் பதறியது.

கிட்டத்தட்ட ஓராண்டுக்கும் மேலாக நடந்துவந்த இந்த வன்கொடுமை பற்றி வெளி உலகுக்குத் தெரிந்து சில மாதங்கள் கடந்த பின்பும் இந்த வழக்கு எந்த திசையில் செல்கிறது, இந்த வழக்கின் தற்போதைய நிலை என்ன என்பது புரியாமல் இருக்கிறது.

அரசியல் பின்புலம் காரணமாக உண்மையான குற்றவாளிகளை தப்ப வைக்க ஆரம்பத்தில் முயற்சிகள் நடைபெற்றன. அதற்கு போலீஸ் உயரதிகாரிகள் சிலரும் துணை போனார்கள். இதனால் குற்றவாளிகள் தப்பிவிடக்கூடாது என்பதால்தான் சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்தப்பட்டது.

அந்த அடிப்படையில் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி நாற்பது நாட்களுக்கு மேல் ஆகியும் எந்த முன்னேற்றமும் இருப்பதாகத் தெரியவில்லை. பாதிக்கப்பட்ட பெண்களின் பெயரை வெளியில் சொல்லக்கூடாது என்று நடைமுறை இருந்தும் மாவட்ட எஸ்பி அந்தத் தவறை செய்தார்.

அதே தவறை தமிழக அரசும் செய்து, சிபிஐக்கு விசாரணையை மாற்றி பிறப்பிக்கப்பட்ட அரசாணையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரையும் குறிப்பிட்டு அரசாணை வெளியிட்டது. அதைத் திருத்தி புதிய அரசாணை வெளியிடுங்கள் என்று நீதிமன்றம் சொன்ன பிறகும் இந்த வழக்கை முறைப்படி சிபிஐயிடம் ஒப்படைத்து விசாரணையைத் தொடர்வதில் ஏன் இத்தனை தாமதம் என்பது புரியவில்லை.

மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் பாஜகவும் அதிமுகவும் அரசியல் ரீதியாக கூட்டணி வைத்திருப்பதற்கும் இந்த வழக்கு விசாரணையை சிபிஐ விசாரிப்பதில் ஏற்படும் தாமதத்திற்கும் தொடர்பு இருக்கிறதா என்பதும் தெரியவில்லை. அதுவரை இங்குள்ள சிபிசிஐடி போலீஸார் நடத்திவரும் விசாரணை எந்த அளவில் இருக்கிறது என்பதும் மர்மமாக இருக்கிறது.

பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மட்டுமின்றி அவர்களின் குடும்பத்தாரும் உரிய நீதி கிடைக்காமல் எந்தளவுக்கு மனஉளைச்சலில் இருப்பார்கள் என்பதை நம்மால் உணர முடிகிறது. ஆனால் அரசு இதைப்பற்றிக் கவலைப்படுகிறதா என்று தெரியவில்லை.

தனக்கு மேல் உள்ள ஐஜி அந்தஸ்திலான அதிகாரி பாலியல் தொல்லை கொடுத்தார் என்று பெண் எஸ்பி ஒருவர் புகார் கொடுத்து ஓராண்டாகியும், அது தொடர்பாக ஒரு வழக்கைப் பதிந்து விசாரணை நடத்தாதது மட்டுமின்றி, குற்றச்சாட்டுக்கு ஆளான அதிகாரியை பெயரளவில் கூட பணியிட மாற்றம் செய்ய எடப்பாடி பழனிசாமியின் அரசு ஆர்வம் காட்டவில்லை.

பெண்களின் பாதுகாப்பில் இந்த அரசு காட்டும் அலட்சியம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. பொள்ளாச்சி சம்பவத்திலும் இப்படி அலட்சியமாக இருந்து குற்றத்தை மூடி மறைக்க முயலாமல் தற்போது அந்த வழக்கின் விசாரணை யார் வசம் இருக்கிறது? எந்த நிலையில் இருக்கிறது? சிபிஐக்கு மாற்றுவதில் என்ன நடைமுறை சிக்கல்? என்பதை எல்லாம் தெளிவுபடுத்தி, காரணம் எதுவாக இருந்தாலும் விரைவான விசாரணைக்கு இனிமேலாவது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த வழக்கில் அரசியல் பின்னணிகள் இருப்பதால் சிபிஐ நடத்தவுள்ள விசாரணையை நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் என்று ஏற்கெனவே வலியுறுத்தியிருந்தேன். அதை மீண்டும் வலியுறுத்தி, விசாரணையைத் துரிதப்படுத்தி, குற்றவாளிகளை விரைவாகத் தண்டிக்க வேண்டும்" என, டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in