Published : 26 Apr 2019 12:00 AM
Last Updated : 26 Apr 2019 12:00 AM

3 ஆண்டுகளில் 19,169 ரயில் பெட்டிகள் தயாரிக்க ரயில்வே இலக்கு: அந்த்யோதயா, ஹம்சபர், டபுள்டெக்கர் புதிய ரயில்கள் இயக்க திட்டம்

அடுத்த 3 ஆண்டுகளில் 19 ஆயிரத்து 169 ரயில் பெட்டிகளை தயாரிக்க ரயில்வே இலக்கு நிர்ணயித்துள்ளது. இதைப் பயன்படுத்தி அந்த்யோதயா, ஹம்சபர், டபுள்டெக்கர் வகைகளில் 300-க்கும் மேற்பட்ட புதிய ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வே சார்பில் நாடுமுழுவதும் இயக்கப்படும் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில்களில் தினமும் சராசரியாக 2.40 கோடி பேர் பயணம் செய்கிறார்கள். சென்னையில் உள்ள ஐசிஎஃப், உத்திரப்பிரதேசத்தின் ரேபரேலியில் உள்ள எம்சிஎஃப், பஞ்சாப்பின் கபுர்தலாவில் உள்ள ஆர்சிஎஃப், மேற்கு வங்காளத்தில் ஹால்டியா என 4 ரயில் பெட்டி தொழிற்சாலைகளில் ரயில்வேக்கு தேவையான ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த தொழிற்சாலைகளில் 2019-ல் 5,940, 2020-ல் 6,534, 2021-ல் 6,695 என மொத்தம் 19,169 ரயில் பெட்டிகளை உற்பத்தி செய்வதற்கான அட்டவணையை ரயில்வே வாரியத்தின் இயந்திரவியல் பொறியியல் இயக்குநர் கோவிந்த் பாண்டே சமீபத்தில் வெளியிட்டுள்ளார்.

மின்சார ரயில் பெட்டிகள், குளிர்சாதன வகை பெட்டிகள், படுக்கை மற்றும் இருக்கை வசதிகொண்ட முன்பதிவு பெட்டிகள், முன்பதிவில்லாத பெட்டிகள், சமையலறை பெட்டிகள், பார்சல் பெட்டிகள் என பல்வேறு வகைகளில் ரயில் பெட்டி தயாரிப்பு மற்றும் எண்ணிக்கை குறித்து அந்த அட்டவணையில் இடம்பெறுள்ளன. இதற்கு தேவையான நிதியை அரசு மத்திய அரசு பட்ஜெட்டுகளில் ஒதுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ரயில்வேயின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:மக்களின் போக்குவரத்து தேவைகள் பல மடங்கு அதிகரித்துள்ளதால், ரயில் போக்குவரத்தை மேலும் மேம்படுத்த ரயில்வே வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதலீட்டை அதிகரிக்கும் நோக்கில் சில பிரிவுகளில் தனியார் துறையுடன் இணைந்து பணியாற்றி வருகிறது. கட்டணத்தை உயர்த்தாமல் மாற்றுவழிகளில் வருமானத்தை பெருக்கிக்கொள்ள பல்வேறு தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்தஉள்ளது.

ரயில்வே வாரியம் ஒவ்வொரு ஆண்டுக்கான ரயில் பெட்டி தயாரிப்பு பட்டியலைத்தான் அனுப்பும். ஆனால், முதல்முறையாக 2019, 2020, 2021-ம் ஆண்டுக்கான ரயில் பெட்டி தயாரிப்பு இலக்கு பட்டியலை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அனுப்பியுள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 19,169 பெட்டிகள் தயாரிக்கப்படவுள்ளன. மின்சார, எல்எச்பி, ஏசி பெட்டி, ஹம்சபர், ரயில் 18 போன்ற இன்ஜினுடன் கூடிய ரயில்கள், சதாப்தி, தேஜஸ், டபுள்டெக்கர் உள்ளிட்ட ரயில் வகைகள் இதில் அதிகமாக இடம் பெறும். மற்ற தொழிற்சாலைகளை ஒப்பிடுகையில் சென்னை ஐசிஎஃப்-ல்தான் அதிகளவில் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. அதாவது, ஆண்டுக்கு 3,300க்கும் மேற்பட்ட பெட்டிகள் இங்கு தயாரிக்கப்படு கின்றன.

300-க்கும் மேற்பட்ட ரயில்கள்

தயாரிக்கப்படும் ரயில் பெட்டிகள்பழைய பெட்டிகளுக்கு மாற்றாகவும், புதிய ரயில்கள் இயக்கவும் பயன்படுத்தப்படும். தற்போதைய நிலவரப்படி, ஆண்டுக்கு சுமார் பழைய பெட்டிகளை புதுப்பிக்க ஆயிரம் பெட்டிகள் தேவைப்படுகின்றன. ஒரு ரயிலானது தலா 22 பெட்டிகள் கொண்டவையாக உள்ளன. குறைந்தபட்சமாக அடுத்த 3 ஆண்டுகளில் 500-க்கும் மேற்பட்ட ரயில்களை இயக்குவதற்கான பெட்டிகளை இதன்மூலம் பெற முடியும். முன்பதிவு இல்லாத அந்த்யோதயா விரைவு ரயில்கள், குறைந்த கட்டணத்தில் ஏசி வசதி கொண்ட ஹம்சபர் விரைவு, பயணிகள் ரயில்கள் வகைகளில் மட்டுமே 300-க்கும் மேற்பட்ட ரயில்கள் இதில் இடம் பெறலாம் என கருதுகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் (டிஆர்இயு) துணைப் பொதுச் செயலாளர் மனோ கரன் கூறியதாவது:ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள அடுத்த 3 ஆண்டுகளுக்கான ரயில் பெட்டிகள் தயாரிப்பு பட்டியலை பார்க்கும் போது, அதிகபட்சமாக 1,000 ரயில்களுக்கான பெட்டிகள் தயாராகும். குறிப்பாக, முன்பதிவில்லாத அந்த்யோதயா ரயில்களுக்கான 300 பெட்டிகள் தயாரிக்கப்பட உள்ளன. இந்த பெட்டிகளை மாற்று பெட்டிகளாக பயன்படுத்த போவதில்லை. எனவே, இதன்மூலம் 15-க்கும் மேற்பட்ட அந்த்யோதயா ரயில்கள் அறிமுகப்படுத்தலாம். இதுதவிர மின்சார ரயில் பிரிவில் 3,396 பெட்டிகளைத் தயாரிப்பதால், 400 குறுகிய தூர பயணிகள் ரயில்களை இயக்கலாம். இந்த வகை ரயில்களுக்கு குறைந்தது 6 பெட்டிகள் போதுமானது.

முன்பதிவு இல்லாத கூடுதல் வசதிகள் கொண்ட 1,663 தீனதயாளு பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. காலாவதியான பெட்டிகளை இந்த பெட்டிகள் கொண்டு புதுப்பிக்கலாம். எனவே, ஏறக்குறைய 300 விரைவு ரயில்களை அறிமுகப்படுத்த முடியும். ரயில்வே வாரியம் அறிவித்தபடி, ரயில் பெட்டிகள் தயாரிப்பு பணி நடப்பதால், 2021-ம் ஆண்டுக்குள் அதிகபட்சமாக 1,000 ரயில்களுக்கான பெட்டிகளை தயாரிக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மக்கள் சொகுசாக பயணம் மேற்கொள்ளவும், உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையிலும் 2019-ல் 160, 2020-ல் 240, 2021-ல் 240 என மொத்தம் 640 சொகுசு ரயில் பெட்டிகளைத் தயாரித்து சொகுசு ரயில்களில் இணைத்து இயக்கவும் ரயில்வே திட்டமிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x