Published : 30 Apr 2019 08:59 AM
Last Updated : 30 Apr 2019 08:59 AM

விருதுகளைக் குவிக்கும் திருக்குறள் ஓவியா

சிறிய குருவிக்கூடுபோல உள்ள ஓவியா வீடு நிறைய  விருதுகள். ஒரே நேரத்தில் 10 செயல்களைச் செய்யும் தசாவதானியாக  ஜொலிக்கிறார் ஓவியா, திருப்பூரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பயிலும் மாணவி.

தந்தை கார்த்திகேயன், அச்சகத்தில் அச்சுவடிவமைப்புக் கலைஞர். தாய் பாக்கியம். தந்தையின் தமிழார்வத்தால், 4-ம் வகுப்பு படிக்கும்போதே திருக்குறளை மனப்பாடம் செய்து, அதன் அர்த்தத்தை உணர்ந்து சொல்லத் தொடங்கினார் ஓவியா. தொடர்ந்து,  குறளின் முதல் சீர் சொன்னால், முழுக் குறளையும் சொல்லும் திறன் பெற்றார்.

திருச்சியில் திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளை சார்பில் நடந்த முற்றோதல் நிகழ்வில் 1,330 குறட்பாக்களையும் சொல்லி பரிசு பெற்றார். 2015-ல் மதுரையில் நடந்த திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில், 5000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இதில் தேர்வு செய்யப்பட்ட 133 பேரில் ஓவியாவும் ஒருவர். நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற விழாவில் ஓவியாவுக்கு ‘திருக்குறள் செல்வர்’ விருதும், அதற்கான சான்றிதழும் வழங்கப்பட்டது.

திருக்குறளில் இவரது ஆற்றலைக் கண்ட உலகத் திருக்குறள் பேரவையினர், அந்தஅமைப்பின் மாணவரணிப்  பொறுப்பாளராக ஓவியாவை  நியமித்தனர்.

திருக்குறள் தொடர்பான பல்வேறு போட்டிகள், கருத்தரங்குகள் உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்கேற்று, திருக்குறள் திருவருட்செல்வி, யுவஸ்ரீ கலாபாரதி, பாலரத்னஸ்ரீ, திருக்குறள் செல்வர், திருக்குறள் செல்வி  மற்றும்  கடந் தமாதம் மலேசியாவில் உள்ள மலாயா பல்கலைக்கழகத்தில் 

குழந்தை இலக்கிய விருது உட்பட 15-க்கும் மேற்பட்ட விருதுகளைக் குவித்துள்ளார் ஓவியா.இதேபோல, ஒரே நேரத்தில் பத்துவிதமான செயல்களை செய்யும் தசாவதானியாகவும் செயல்படத் தொடங்கியுள்ளார்.

இது தொடர்பாக ஓவியா கூறும்போது, “பல்லாயிரக்கணக்கான பெயர்களை ஞாபகத்தில் வைத்துச் சொல்லும் கவனகம், இரு கைகளில் இடமிருந்து வலமாக  எழுதுவது, கீழிருந்து மேலாக எழுதுவது, எழுதும்போது சம்பந்தம் இல்லாமல் பாடலைப் பாடுவது, எழுதும்போது பூவினால் ஒற்றி எடுத்தல், மணியோசை எழுப்புதல், எழுதும்போது 3 குறள் எண்களைக் கூறுதல், பிறந்த தேதி கூறினால் கிழமை கூறுதல், மாயக்கட்டம் ஆகிய 10 வகையான செயல்களை செய்த பின்னர், வரிசையாக பெயரைச் சொல்வது, எத்தனை முறை முதுகை பூவால்  தொட்டார்கள், எத்தனை முறை மணி எழுந்தது, கேட்ட 3 குறள்களைச் சொல்லுதல், பிறந்த தேதிக்கு கிழமை கூறுதல், மாயக்கட்டம் எழுதுதல் என தசாவதானம் செய்யத் தொடங்கியுள்ளேன். இதற்காக ஒரு மாதம் மட்டும் பயிற்சி எடுத்தேன்.

கடந்த பிப். 29-ம் தேதி மலேசியாவில் உள்ள  மலாயா பல்கலைக்கழகத்தில், தமிழ்த்தாய் அறக்கட்டளை நடத்திய முதல் உலகத் திருக்குறள் மாநாட்டில், ‘குழந்தை இலக்கிய விருதை’ பினாங்கு மாநில துணை முதல்வர் பி.ராமசாமி வழங்கினார்.

சிறு வயதில் ஒரு பத்திரிகையில் வந்த செய்தியை தந்தை காண்பித்தார். அதில்,  திருக்குறளை ஒப்புவிக்கும் ஒருவரைப் பற்றிய  செய்தி வெளியாகியிருந்தது. இதையடுத்து, நான்

திருக்குறள் பயின்று, ஒப்புவிக்கத் தொடங் கினேன். திருக்குறளை தொடர்ச்சி யாக பல்வேறு இடங்களுக்கு எடுத்துச் சென்றதால்தான், எனக்கு இத்தனை  விருதுகள் கிடைத்துள்ளன” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x