Published : 02 Apr 2019 11:36 AM
Last Updated : 02 Apr 2019 11:36 AM

ஏப்ரல் ஃபூல் தினத்தை ஏப்ரல் கூல் தினமாக கொண்டாடிய மதுரை இளைஞர்கள்: ஒரே நாளில் 20 ஆயிரம் மரக்கன்றுகள் விநியோகம் செய்து அசத்தல்

ஏப்ரல் ஃபூல் தினத்தை நேற்று மதுரை பசுமை நண்பர்கள் குழுவினர் ஏப்ரல் கூல் தினமாக கொண்டாடியதோடு, கல்லூரிகளுக்கு ஒரே நாளில் 20 ஆயிரம் மரக்கன்றுகளை விநியோகம் செய்து பசுமையின் அவசியம் பற்றி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

ஆண்டுதோறும் ஏப்ரல்-1வது நாள் முட்டாள்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. மதுரை பசுமை நண்பர்கள் ‘வாட்ஸ் அப்’ குழுவினர் கடந்த 2 ஆண்டாக இந்த ‘ஏப்ரல் ஃபூல்’ முட்டாள்கள் தினத்தை ‘ஏப்ரல் கூல்’ என்ற பசுமை நாளாக மாற்றி, மரக்கன்றுகள் நடுவதை வலியுறுத்தி வருகின்றனர்.

மரக்கன்றுகளைஇலவசமாக பொதுமக்களுக்கும், பள்ளிகளுக்கும் வழங்கி, பொது இடங்களில் நடவும் செய்கின்றனர். அவர்கள் நேற்று இந்த ஆண்டு ‘ஏப்ரல் ஃபூல்’ தினத்தில் மதுரை நகரில் 10 அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் கல்லூரிகளுக்கு ஒரே நாளில் 20 ஆயிரம் மரக்கன்றுகளை வழங்கி அசத்தியுள்ளனர். அவற்றைநடுவதற்கும் இவர்கள் உதவிகள் செய்தனர்.

இயற்கை மீது இளைஞர்களுக்கு பற்றை உருவாக்க மேற்கொண்டுள்ள இந்த இளைஞர்களின் ஏப்ரல் கூல் தினம் கொண்டாட்டம், பொதுமக்களிடமும், மாணவ, மாணவிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

இதுகுறித்து இந்த பசுமை நண்பர்கள் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பொன்குமார் கூறுகையில், ‘‘ஏப்ரல் ஃபூல் தினம் பொதுவாக கல்லூரி, பள்ளி மாணவர்களிடம்தான் பிரபலம்.

அதனால், இந்த தினத்தை ‘ஏப்ரல் கூல்’ தினமாக மாற்றும் சிந்தனையை மாணவர்களிடம் இருந்து ஆரம்பித்தால் மட்டுமே சாத்தியப்படும் என நினைத்தோம். அதனால், மதுரையில் 10 கல்லூரிகளை தேர்வு செய்து, இந்த 20 ஆயிரம் மரக்கன்றுகளை வழங்கி ஏப்ரல் ஃபூல் தினத்தை ஏப்ரல் கூல் தினமாக வெற்றிகரமாக கொண்டாடியுள்ளோம்.

சிவப்பு கொய்யா, வெள்ளை கொய்யா, மா மரம், மாதுளை, மலை நெல்லிக்காய், மருதம் மரம், ஆலமரம், அரசரம், வேம்பு, நாவல், தும்மை மரம் உள்ளிட்ட பல் வகை பழ மரங்கள், நிழல் தரும் மரக்கன்றுகளை வழங்கினோம்.

இந்த மரக்கன்றுகள் 1 ½ அடி முதல் 2 அடி வரை இருந்தது. பழக்கன்றுகளை கொடுத்தால் மாணவர்கள் ஆர்வமாக வீட்டிற்கு எடுத்து சென்று நடுவார்கள் என்பதால் அவர்களுக்கு பழமரக்கன்றுகளையும், கல்லூரி நிர்வாகத்திற்கு நிழல் தரம் மரக்கன்றுகளையும் வழங்கினோம்.

மாணவர்களிடம் ஏப்ரல் ஃபூல் தினத்தை மறக்கடிக்கும் வரையிலும், அவர்களுக்கு இயற்கை மீது பற்றை உருவாக்கும் வரையிலும் இந்த மரக்கன்றுகள் விநியோகிப்பதை தொடர்வோம், ’’ என்றனர். 

சின்ன பிள்ளைக்கு ரூ.10 ஆயிரம் உதவி:


பசுமை நண்பர்களின் இந்த ‘ஏப்ரல் கூல்’ தினத்தில் சிறப்பு விருந்தினராக பத்மஸ்ரீ விருது பெற்ற சின்ன பிள்ளை கலந்து கொண்டார். அவர் பேசுகையில், ‘‘நாட்டின் உயரிய விருதுகளை பெற்றாலும் நானும் என்னுடைய குடும்பமும் இன்னமும் வறுமையில்தான் வாழுகிறோம், ’’ என்று கண் கலங்கினார்.

உடனே பசுமை நண்பர்கள் குழுவினர், ரூ.10 ஆயிரம் ஏற்பாடு செய்து சின்ன பிள்ளைக்கு வழங்கினர். மேலும், அவரது குடும்பத்திற்கும், அவருக்கும் தொடர்ந்து உதவுவதாக உறுதியளித்த இந்த சம்பவம் கல்லூரி மாணவ, மாணவிகளிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x