Published : 08 Sep 2014 10:00 AM
Last Updated : 08 Sep 2014 10:00 AM

குற்ற வழக்குகளில் நவீன தொழில்நுட்பம்: போலீஸாருக்கு நீதிமன்றம் யோசனை

ஆள் கடத்தல் உள்ளிட்ட குற்ற வழக்குகளில் மின்னஞ்சல் போன்ற நவீன தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி போலீஸார் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தியுள்ளது.

மதுரை புறநகர் பகுதியைச் சேர்ந்த திருமண வயதை எட்டாத முஸ்லிம் பெண்ணை, 10 நாட்களுக்கு முன் இளைஞர் ஒருவர் கடத்திச் சென்றுவிட்டார். அந்தப் பெண்ணின் தாய் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதிகள் எஸ். மணிக்குமார், வி.எம். வேலுமணி ஆகியோர் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸ் தரப்பில், ‘கடத்தப்பட்ட பெண் கொடைக்கானலில் இருப்பதாக தகவல் கிடைத்தது. தனிப்படை போலீஸார் கொடைக்கானல் செல்வதற்குள், அவர்கள் பழநி வழியாக வேறு இடத்துக்குச் சென்றுவிட்டனர். செல்போன் எண்ணை வைத்து கடத்தப்பட்ட பெண்ணை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்’ என்று தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘கடத்தல்காரர்களை பிடிக்க போலீஸார் வேறு மாவட்டத்துக்குச் செல்வதற்குள், அவர்கள் தப்பிச் செல்ல வாய்ப்புகள் உள்ளன. மேலும், இப்போதைய இளைஞர்கள் போலீஸாரிடம் இருந்து தப்பிப்பதில் திறமையாக உள்ளனர். எனவே, குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் போலீஸார் தொழில்நுட்ப வசதியை பயன்படுத்த வேண்டும்.

கடத்தல்காரர்களை பிடிக்கவும், கடத்தப்பட்ட நபர்களை மீட்கவும் தனிப்படை அமைப்பது, மாவட்டம் விட்டு மாவட்டம் சென்று விசாரணை நடத்துவது போன்ற முறைகளை போலீஸார் தற்போது கடைபிடிக்கின்றனர். இதற்குப் பதிலாக கடத்தப்பட்டவரின் புகைப்படத்தை மின்னஞ்சலில் மற்ற மாவட்ட போலீஸாருக்கு அனுப்பினால், கடத்தப்பட்டவரையும், கடத்தல் காரர்களையும் அந்த மாவட்ட போலீஸார் கண்டுபிடிக்க வாய்ப்பு ஏற்படும்.

எனவே, ஆள் கடத்தல் வழக்குகளில் மின்னஞ்சல் வசதியை பயன்படுத்துவதை போலீஸார் இப்போதே தொடங்க வேண்டும். இந்த வழக்கில் கடத்தப்பட்ட பெண்ணை மீட்க மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x