Published : 09 Apr 2019 01:28 PM
Last Updated : 09 Apr 2019 01:28 PM

8 வழிச்சாலை திட்டத்திற்கு தடை: முதல்வர் பழனிசாமி அரசின் முகத்திரை கிழிக்கப்பட்டிருக்கிறது; வேல்முருகன்

சென்னை - சேலம் எட்டு வழிச் சாலை தீர்ப்பின் மூலம், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசின் முகத்திரை கிழிக்கப்பட்டிருக்கிறது என, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வேல்முருகன் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "சென்னை - சேலம் 8 வழிச்சாலைத் திட்டம்; ரூ.10 ஆயிரம் கோடி செலவில் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்கள் வழியாகச் செல்லும் இந்தச் சாலை, திடீரென ஒரு நாள் அறிவிக்கப்படுகிறது. அடுத்த நொடியே அதற்காக 1,900 ஏக்கர் நிலம் கையகப்படுத்தவும் தொடங்குகிறது அதிமுக அரசு.

அதிர்ச்சியில் உறைந்துபோகிறார்கள் விவசாயிகள். வாழ்வாதாரமாக இருக்கும் துண்டு நிலத்தையும் இழந்து சொந்த மண்ணிலேயே அகதியாகும் நிலை! போராடுவதைத் தவிர வேறு வழியில்லை. முதிர் வயது பெண்கள் தான் அதிகம் பேர் போராட்டத்தில் இறங்கியவர்கள். அவர்களைக் கூண்டோடு கைது செய்து வேனில் ஏற்றுகிறது தமிழக காவல்துறை. அவர்களின் நிலத்தை அளந்து கல் நடுகிறது வருவாய்த்துறை.

இப்படிப்பட்ட ஓர் அராஜகம் எந்தக் காலத்திலும் எந்த ஆட்சியிலும் நடந்ததில்லை. தமிழகமே இதை எதிர்த்துக் களமிறங்கியது. தமிழக வாழ்வுரிமைக் கட்சி உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் போராடினார்கள். ஆனால் போராட்டத்துக்கு மட்டுமல்ல; இந்தத் திட்டத்தைப் பற்றி பேசவே தடை விதித்தது தமிழக அரசு. அப்படி மீறிப் பேசினால் அவர்களைக் கைது செய்து பொய் வழக்குப் போட்டு சிறையிலும் அடைத்தது.

இந்த நிலையில் தான் மக்கள் நீதிமன்றத்தின் கதவைத் தட்டினார்கள். அரசாங்கமே செய்யும் அராஜகத்துக்கு நீதி கோரினார்கள்.

தமிழ் மண்ணில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் இடங்களிலெல்லாம், அதற்காகப் போராடும் இயக்கம், சட்ட நடவடிக்கை எடுக்கும் இயக்கம் பூவுலகின் நண்பர்கள் இயக்கம். அவர்கள் சார்பில் சுந்தர்ரராஜன் இதில் தக்க ஆதாரங்களுடன் வழக்குத் தொடுத்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியரால் 8 மாதங்களாக விசாரிக்கப்பட்டு வந்தது. திங்கள்கிழமை தீர்ப்பு வந்திருக்கிறது.

அந்தத் தீர்ப்பு பழனிசாமி அரசின் முகத்தில் ஓங்கி அறைந்திருக்கிறது. இந்த 8 வழிச்சாலைத் திட்டத்திற்காக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை மட்டுமல்லாமல், திட்ட அறிக்கையையே ரத்து செய்து உத்தரவிட்டிருக்கிறது. இந்தத் திட்டத்திற்கு தமிழக அரசு நிலம் கையகப்படுத்தியது செல்லாது என்றதுடன், 15 நாட்களுக்குள் பறித்த நிலத்தை சம்பந்தப்பட்டவர்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருக்கிறது.

இந்தத் தீர்ப்பின் மூலம் இது ஒரு சட்ட விரோத, மக்கள் விரோத, சுற்றுச்சூழல் விரோத திட்டம் என்று தக்க ஆதாரங்களுடன் பூவுலகின் நண்பர்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த வாதம் ஏற்கப்பட்டிருக்கிறது. பழனிசாமி அரசின் முகத்திரை கிழிக்கப்பட்டிருக்கிறது.

சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சினைகள் மட்டுமல்லாது, மக்களின் உரிமை-நலன் சார்ந்த பிரச்சினைகளுக்காகவும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தமிழக வாழ்வுரிமைக் கூட்டமைப்பில் இணைந்து போராடி வரும் இயக்கம்தான் பூவுலகின் நண்பர்கள் இயக்கம். 8 வழிச்சாலைக்காக அடக்குமுறை மற்றும் அடாவடியால் பறிக்கப்பட்ட தமிழக மக்களின் வாழ்வுரிமையை மீட்டுத்தந்ததற்காக பூவுலகின் நண்பர்களுக்கு நன்றி தெரிவிப்பதுடன் அவர்களைப் பாராட்டவும் செய்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.

அதே நேரம், தங்கள் 'டாடி' மோடி மேலே இருக்கும் தைரியத்தில், வழக்கை மேல்முறையீடு செய்வோம் என்று கூறும் தமிழக அமைச்சருக்கு கண்டனத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம்" என, வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x