

தீட்சிதர்களுடனான சந்திப்பு வாக்குக்கான வேடம் அல்ல என விசிக தலைவரும் சிதம்பரம் மக்களவை தொகுதி வேட்பாளருமான தொல்.திருமாவளவன் தெரிவித்திருக்கிறார்.
அண்மையில் திருமாவளவன் சிதம்பரம் கோயிலில் தீட்சிதர்களை சந்தித்தது பரவலாக விமர்சனத்துக்குள்ளானது. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இருந்து கொண்டு கோயிலுக்குச் சென்று தீட்சிதர்களை சந்திப்பதா என்று கேள்விகள் எழுப்பப்பட்டன.
இந்நிலையில் இது குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த திருமாவளவன், "என்னை ஏற்காதவர்கள் ஏற்க மனமில்லாதவர்கள் என்னை விமர்சித்துக் கொண்டேதான் இருப்பார்கள்.
சிதம்பரம் தொகுதியில் எல்லா சமுதாயத்தைச் சேர்ந்தவர்களையும் சந்தித்ததைப் போல் தீட்சிதர்களை சந்திப்பது எனது விருப்பம். இதற்கு முன்னதாக 1994, 2004, 2009, 2014 எல்லாத் தேர்தல்களின் போதும் இத்தகைய சந்திப்பை நடத்தியிருக்கிறேன்.
அந்த வகையில் திமுகவினர் இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்து கொடுத்தார்கள். இது வெறும் வாக்குக்கான வேடம் அல்ல. அவர்களின் உணர்வுகளை மதிக்கிறேன் என்ற அளவில் இதைப் பார்க்கிறேன்" என்றார்.
தொகுதியில் கள நிலவரம் குறித்த கேள்விக்கு, "2009-ம் தேர்தலில் இருந்த எழுச்சியும் ஆதரவு அலையும் இப்போது வெளிப்படையாகத் தெரிகிறது. சாதாரண மக்களிடம் கூட மோடிக்கு எதிரான மனநிலை இருக்கிறது. சிதம்பரம் மக்களிடம் எனக்கு மிகுந்த ஆதரவு இருக்கிறது" என்றார்.
இறுதியாக, சிதம்பரம் தொகுதியில் விசிக பிரமுகர் காரில் நூதன முறையில் மறைத்துவைக்கப்பட்டிருந்த பணம் குறித்து கேள்வி எழுப்பப்பட அதற்கு, "அந்த வாகனத்தில் இருந்தவர்கள் விசிகவினர் என்பது உறுதியாகியுள்ளது. அந்த வாகனத்தின் உரிமையாளரும் விசிகவில் பொறுப்பில் இருப்பவரே. ஆனால், தனிப்பட்ட முறையில் அவர் ஒரு தொழிலதிபர். வியாபாரத்தில் இருப்பவர். அதனால் அந்தப் பணம் பற்றி எனக்கு வேறு ஏதும் தெரியாது.
எதிர்க்கட்சியினரை குறிவைத்து சோதனை என்ற பெயரில் நெருக்கடி அளிக்கப்படுகிறது. என்னை குறிவைக்கிறார்கள். என் வெற்றியை தடுக்க முயல்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், மக்களின் ஆதரவோடு வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது" என்றார்.