Published : 27 Apr 2019 12:00 AM
Last Updated : 27 Apr 2019 12:00 AM

திருப்பரங்குன்றத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் அதிமுக: மும்மூர்த்திகளின் வியூகங்களை முறியடிக்குமா திமுக, அமமுக?

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் வெற்றிக்காக அதிமுக, திமுக, அமமுக கட்சிகள் மல்லுக்கட்டுவதால் வாக் காளர்களுக்கு பரிசு மழை பொழிய வாய்ப்புள்ளது.

கடந்த சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் திருப்பரங்குன்றத்தில் போட்டி யிட மதுரை மாநகராட்சி முன்னாள் மேயர் வி.வி.ராஜன் செல்லப்பா ‘சீட்’ கேட்டார். அது அவரது சொந்த தொகுதி என்பதோடு, அவரது புறநகர் மாவட்ட பகுதிக்குள் வருவதால் நிச்சயம் சீட் கிடைக்கும் என அவரது ஆதரவாளர்கள் நம்பியிருந்தனர். ஆனால், அவருக்கு சீட் தராமல், முன்னாள் எம்எல்ஏ சீனிவேலுக்கு திருப்பரங்குன்றத்தில் போட்டியிட ஜெயலலிதா ‘சீட்’ கொடுத்தார். எனினும் முயற்சியைக் கைவிடாமல், வடக்குத் தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எம்.எஸ்.பாண்டியன் மாற்றப்பட்டபோது, அந்த தொகுதியில் ராஜன் செல்லப்பா ‘சீட்’ பெற்று போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

ஆனால், திருப்பரங்குன்றத்தில் போட்டியிட்ட சீனிவேலு, உடல்நலக் குறைவு காரணமாக வாக்கு எண்ணிக் கைக்கு முன்னதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தான் வெற்றி பெற்றதை அறியாமலேயே சுயநினைவற்ற நிலையில் மரணமடைந்தார். அதன்பின்னர் அதிமுக சார்பில் திருப்பரங்குன்றத்தில் போட்டியிட்டு வென்ற ஏ.கே.போஸும் உடல் நலக்குறைவால் சிறிது காலத்துக்குப் பின் இறந்துவிட்டார். அதனால், தற் போது மீண்டும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த மூன்றரை ஆண் டுகளில் 3-வது தேர்தலை இத்தொகுதி சந்திக்கிறது. இம்முறை அதிமுக சார்பில் முனியாண்டி போட்டியிடுகிறார்.

ஏப்.18-ல் இடைத்தேர்தல் நடந்த 18 தொகுதிகள், வரும் மே 19-ல் தேர்தல் நடைபெறவுள்ள 4 தொகுதிகள் என மொத்தம் 22 தொகுதிகளில் குறைந்தப்பட்சம் 9 தொகுதிகளில் வெற்றிபெற்றால்தான் ஆட்சியை தக்க வைக்க முடியும் என்ற நிலையில் அதிமுக உள்ளது.

அதனால் 4 தொகுதிகளிலும் வெற்றிபெற அதிமுக தீவிர முனைப்பு காட்டி வருகிறது. அதுவும் திருப் பரங்குன்றத்தில் அதிமுக அதிக முறை வெற்றிபெற்றுள்ளதால், இம்முறையும் இங்கு வெற்றிபெற்றாக வேண்டும் என்று கட்சியினருக்கு மேலிடம் உத்தர விட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முனியாண்டி தனது ஆதரவாளர் என்பதால் அவரை வெற்றிபெற வைக்க ராஜன் செல்லப்பா பெரும் முயற்சி எடுத்து வருகிறார். அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் தொடர்ந்து பதவியில் நீடிக்க வேண்டுமென்றால் இத்தொகுதியில் அதிமுக வெற்றிபெற வேண்டியது அவசியம் என்பதால், அவர்களும் தங்களின் விருப்பு, வெறுப்புகளை தாண்டி தீவிர களப் பணியாற்ற உள்ளனர். அதனால், அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகிய மும்மூர்த்திகள், வெற்றிக்கான தேர்தல் வியூகத்தை அமைக்க ஆரம்பித்து விட்டார்கள் என அக்கட்சியினர் கூறுகின் றனர்.

இத்தொகுதிக்கு உட்பட்ட இடத்தில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டியது, ஏராளமான நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு கொண்டு போய் சேர்த்தது என தேர்தலை சந்திக்க ஏற்கெனவே சிறப்பான அடித்தளத்தை அதிமுக அமைத்துள்ளது. எனவே, தங்களுக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக அக்கட்சியினர் கருதுகின்றனர்.

ஆனால், இம்முறை அதிமுகவின் வாக்கு வங்கியை அமமுக பிரித்துவிட வாய்ப்பு உள்ளதால் வெற்றிபெற கடு மையாக போராட வேண்டியிருக்கும் எனக் கூறப்படுகிறது. சமீபத்தில் நடந்த அமமுக வேட்பாளர் அறிமுகக் கூட் டத்தில் பேசிய கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன், வாக்குகளை பிரிப்பது அல்ல, வெற்றி பெறுவதே தங்களின் முதல் நோக்கம் என்று தெரிவித்திருந்தார். அக்கட்சியினர் தேர்தல் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

திமுகவில் தங்களை கலந்து ஆலோசிக்காமலேயே சரவணனை வேட்பாளராக கட்சி மேலிடம் அறிவித்துவிட்டதே என்று உள்ளூர் நிர்வாகிகள் ஆரம்பத்தில் அதிருப்தி அடைந்திருந்தனர். ஆனால், ஸ்டாலின் நேரடியாக நிர்வாகிகளிடம் பேசியதால், தேர்தல் பணியைத் தொடங்கிவிட்டனர். ‘பூத்’ வாரியாக வாக்காளர் பட்டியலை பெற்று, அவர்களில் அதிமுக, அமமுக வாக்காளர்களைத் தவிர்த்து மற்றவர்களின் ஆதரவைப் பெறும் முயற்சியில் இறங்கியுள்ளனர். திமுக துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் எம்.எல்.ஏ., புறநகர் மாவட்டச் செயலாளர்கள் மணிமாறன், மூர்த்தி ஆகியோர் அதிமுக, அமமுகவின் வியூங்களை முறியடிக்க ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

வெற்றிக்காக மூன்று கட்சிகளும் வாக்காளர்களுக்குப் பரிசு மழை பொழிய காத்திருப்பதால் திருப்பரங்குன்றம் தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித் துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x