Last Updated : 15 Apr, 2019 12:00 AM

 

Published : 15 Apr 2019 12:00 AM
Last Updated : 15 Apr 2019 12:00 AM

அமமுகவின் போட்டியால் அதிமுகவின் வாக்குகள் சிதறி, திமுகவுக்கு லாபமாகி விடுமா?- அமமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி பேட்டி

பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவுக்கும், டிடிவி தினகரனுக்கும் நம்பிக்கை பாலமாக இருப்பவர் வா. புகழேந்தி. அமமுகவின் செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்ட பின்னர் தமிழகமெங்கும் கட்சி நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி விவாதங்கள் என ஓயாமல் ஒலித்து வந்த புகழேந்தி, இப்போது ஓசூர் தொகுதியின் வேட்பாளராக உருவெடுத்திருக்கிறார். பிரச்சாரத்தில் பிஸியாக இருந்தவரிடம் இந்து தமிழ் நாளிதழ் சார்பில் சில கேள்விகளை முன் வைத்தேன்.

கர்நாடக அதிமுகவின் முகமாக இருந்த நீங்கள், இப்போது திடீரென ஓசூரில் போட்டியிடுகிறீர்களே?

நான் பிறந்து வளர்ந்து படித்தது எல்லாம் கள்ளக்குறிச்சி தான். என் தந்தை வாசு திராவிட கழகத்தை சேர்ந்தவர். இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்று 6 முறை சிறைக்கு போனவர். தொழில் ரீதியாக பெங்களூருவுக்கு இடம்பெயர்ந்தாலும், தமிழகத்தோடு நெருங்கிய தொடர்பில் இருந்தேன். 20 ஆண்டுகளுக்கு மேலாக ஓசூரில் வலம் வருகிறேன். இங்கு ஆசிரியர் பயிற்சிப் பள்ளி தொடங்கி 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை உருவாக்கி இருக்கிறேன். எனக்கு வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டு உரிமம் எல்லாம் இங்கு இருக்கிறது. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஓசூர் தொகுதியின் பொறுப்பாளராக என்னை மூன்று முறை நியமித்திருக்கிறார். கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியின் பொறுப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறேன். ஓர் உள்ளூர்க்காரரைப் போல இந்த தொகுதியின் அத்தனை பிரச்சினைகளின் ஆணிவேரும் எனக்கு தெரியும். அதனால் டிடிவி தினகரன், ஓசூர் தொகுதியில் என்னை வேட்பாளராக நிறுத்தியிருக்கிறார்.

அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் மனைவி ஜோதியும், திமுக சார்பில் எஸ்.ஏ. சத்யாவும் போட்டியிடுகிறார்கள். இந்த இரு வேட்பாளர்களுக்குமே கூட்டணி பலம் வலுவாக இருக்கிறது. உங்களது பலம் என்ன?

எனது பலம் ஓசூர் மக்கள் தான். பாலகிருஷ்ண ரெட்டியின் மனைவி ஜோதி கர்நாடகாவை சேர்ந்தவர். எஸ்.ஏ.சத்யா கேரளாவை சேர்ந்தவர். இருவருக்குமே தமிழ் எழுத, படிக்க தெரியாது. தமிழே தெரியாத இவர்கள் எப்படி ஓசூர் மக்களின் பிரச்சினையை சட்டப்பேரவையில் எழுப்புவார்கள்? பாலகிருஷ்ண ரெட்டி அமைச்சராக இருந்த போது ஏராளமானோரின் சொத்துக்களை மிரட்டி பறித்ததாக புகார் உள்ளது. இதனால் அவர் மீது மக்களுக்கு கடுங்கோபம் இருக்கிறது. இதே போல திமுக வேட்பாளர் சத்யா மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. குற்றப்பின்னணி கொண்ட இவர்களுக்கு எவ்வளவு கூட்டணி பலமும் உதவாது. ஆனால் என் மீது எவ்வித புகாரும் இல்லாததால் மக்களும், சமூக நல அமைப்புகளும் தாமாக முன்வந்து ஓட்டு கேட்கிறார்கள். டிடிவி தினகரன் இங்கு வந்த பிரச்சாரம் செய்த போது மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதும், பிரதமர் மோடி மீதும் மக்கள் பெரும் வெறுப்பில் இருக்கிறார்கள். இதே போல திமுகவின் குடும்ப ஆட்சியை நினைத்து இப்போதே பயந்து கிடக்கிறார்கள். எனவே தான் நான் கட்சிகளின் கூட்டணியை ஒரு பொருட்டாக கருதவில்லை.

தன் மனைவிக்கு ஆதரவாக பாலகிருஷ்ண ரெட்டி பிரச்சாரம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடுத்திருக்கிறீர்களே?

பாலகிருஷ்ண ரெட்டி ஒரு வன்முறை சம்பவத் தில் ஈடுபட்டதற்காக நீதிமன்றத்தால் தண்டிக்கப் பட்டு, அமைச்சர் பதவியை இழந்தவர். மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்கீழ் எம்எல்ஏ பதவியையும் இழந்த அவர், எப்படி ஒரு மக்கள் பிரதிநிதிக்காக வாக்கு கேட்க முடியும்? நீதிமன்றத்தால் எம்எல்ஏ பதவி பறிக்கப்பட்ட பாலகிருஷ்ண ரெட்டி, மீண்டும் எம்எல்ஏவாக வலம் வருவதற்காகவே தன் மனைவியை வேட்பாளராக நிறுத்தி இருக்கிறார். இன்னும் சொல்லப் போனால் அவரே வேட்பாள ரைப் போல வலம் வருகிறார். நானே மீண்டும் போட்டியிடுவதாக நினைத்து வாக்களிக்கும்படி மக்களிடம் பேசி வருகிறார். இப்படி இருக்கும் போது நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு என்ன அர்த்தம்? அவரது செயல்பாடு நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக இருப்பதாலே வழக்கு தொடுத்திருக்கிறேன்.

ஓசூர் மக்களிடம் எத்தகைய வாக்குறுதியை சொல்லி, வாக்கு கேட்கிறீர்கள்?

தமிழகத்தில் ஓசூர் மிகவும் தனித்துவமான நகரம். அதனை இங்குள்ள கட்சிகளும், தலைவர் களும் சரியாக புரிந்துகொள்ளவில்லை. தென்னிந் தியாவிலே டிவிஎஸ், டைட்டன், அசோக் லேலண்ட், ஹிந்துஸ்தான் லீவர் என போன்ற பெரிய தொழிற்சாலைகள் இங்குதான் இருக்கின் றன. இதனால் பல மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் இங்கு வசிக் கின்றனர். ஆனால் இங்கு போதுமான அடிப்படை வசதிகள் இல்லை. நெய்வேலி போல டவுன்ஷிப் இல்லை. சாலைகள்,தெருக்கள் சரியாக இல்லை. தொகுதி முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலை விரித்தாடுகிறது. தொழில்வளம் நிறைந்த ஓசூரை ஒளிமயமான நகராக மாற்ற 10 அம்ச கோரிக்கையை முன் வைத்து பிரச்சாரம் செய்துவருகிறேன். எனது வாக்குறுதிகள் ஆக்கப்பூர்வமானவை என்பதால் கட்சி பேதம் கடந்து மக்கள் எனக்கு வாக்களிப்பதாக உறுதியளித்திருக்கிறார்கள்.

ஓசூரில் தமிழ் அல்லாத பிற மொழியினரும்,இடம்பெயர்ந்த தொழிலாளர்களும் அதிகளவில் இருக்கிறார்கள்?அவர்கள் நலனுக்கு ஏதேனும் திட்டம் இருக்கிறதா?

ஓசூர் எல்லையோர பகுதியாக இருப்பதால் தமிழர்கள் மட்டுமல்லாமல் கன்னடர், தெலுங்கர், வட இந்தியர் என பல தரப்பட்ட மக்களும் ஒற்றுமையாக வசிக்கிறார்கள். எனக்கு தமிழ், கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட மொழிகள் சரளமாக தெரியும் என்பதால் அவர்களின் பிரச்சினையை புரிந்துக்கொண்டு உடனடியாக தீர்க்க முடியும். தமிழக அரசிடம் அம்மக்களுக்கான தேவையை பெற்றுத்தர முடியும். கர்நாடகாவில் ஏராளமான அரசியல்வாதிகளின் நட்பு எனக்கு உள்ளதால் அங்கிருந்தும் உதவிகளைப் பெற முடியும். மொழி சிறுபான்மையோர், இடம் பெயர்ந்த தொழிலாளர் ஆகியோரின் உரிமைகளை அனைத்து நிலைகளிலும் நிலைநாட்ட பாடுபடுவேன்.

அமமுக வேட்பாளர்களின் போட்டியால் தமிழகமெங்கும் அதிமுக வாக்குகள் சிதறப் போகின்றன. இதனால் தேர்தல் முடிவுகள் திமுகவுக்கு சாதகமாக மாற வாய்ப்பு உள்ளதாக என கூறப்படுகிறதே?

நாங்கள்தான் உண்மையான அதிமுக என்பதை ஆர்.கே.நகர் தேர்தலிலேயே டிடிவி தினகரன் நிரூபித்துவிட்டார். 90 சதவீதத்துக்கும் அதிகமாக அதிமுக தொண்டர்கள் எங்களோடு இருக்கிறார்கள். அதிகாரம் மட்டுமே எடப்பாடி பழனிசாமி பக்கம் இருக்கிறது.

எங்களைப் பொருத்தவரை இந்த தேர்தலில் எங்களுக்கும் திமுகவுக்கும்தான் நேரடி போட்டி. ஜெயலலிதாவின் ஆசைப்படி நாங்கள்தான் திமுகவை நேருக்கு நேர் எதிர்கொள்கிறோம். ஆனால் எடப்பாடி பழனிசாமியோ ஜெயலலிதாவின் கொள்கைக்கு எதிரான பாஜகவோடு சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்திருக்கிறார். ஜெயலலிதாவையும், அதிமுகவையும் திமுகவை விட மிக கேவலமாக திட்டிய பாமகவை பக்கத்தில் வைத்திருக்கும் எடப்பாடி பழனிசாமி அணிக்கு உண்மையான ஒரு அதிமுக தொண்டன் கூட ஓட்டுப்போட மாட்டான். அப்படி வாக்களிப்போரை ஜெயலலிதாவின் ஆன்மா ஒருபோதும் மன்னிக்காது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x