

சிறுபான்மையினரின் பாதுகாவலன் என்னும் தங்களின் பேச்சு எடுபடாததால், இந்துக்களுக்கு நாங்கள் எதிரி அல்ல என்று திமுகவினர் கூறி வருவதாக அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். அப்போது அவர் ஸ்டாலின் குரலில் பேசிக்காட்டியதால், தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர்.
தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் அமமுக சார்பில், முருகேசன் போட்டியிடுகிறார். மக்களவைத் தேர்தல் தேதி நெருங்கிவிட்ட சூழலில், தஞ்சாவூரின் ஒரத்தநாடு பகுதியில் முருகேசனை ஆதரித்து டிடிவி தினகரன் நேற்று மாலை பிரச்சாரம் மேற்கொண்டார். தங்கள் கட்சியின் சின்னமான பரிசுப் பெட்டியை அறிமுகப்படுத்திப் பேசினார் டிடிவி.
அப்போது திமுகவை விமர்சித்த அவர், ''இப்போது நிலைமை எப்படிப் போய்க்கொண்டிருக்கிறது தெரியுமா? நாங்கள் சிறுபான்மையினரின் காவலர்கள் என்று ஏமாற்றியது எடுபடவில்லை. உடனே, ''நாங்கள் இந்துக்களின் எதிரி அல்ல'' என்கின்றனர். நான் ஓர் இந்து. நானே எனது மதத்துக்கு எதிரி இல்லை என்று சொல்லும் அளவுக்கு மதத்துக்கு எதிராக வேலை பார்த்திருக்கிறேன் என்றுதானே அர்த்தம்?
''எனது குடும்பத்தில் எல்லோரும் கோயிலுக்குச் செல்வார்கள்'' - இது மற்றவர்களுக்குத் தெரியாதா? இது பெரிய சாதனையா? பாஜக மதத்தைப் பற்றிப் பேசுகிறது என்றால் நீங்களும் (திமுக) அதைத்தானே செய்கிறீர்கள்? நீங்கள் (திமுக) தமிழ்நாட்டில் பாஜகவின் பி டீம்'' என்றார் தினகரன்.
அப்போது ஸ்டாலின் பேசுவதுபோல, ''நாங்கள் இந்துக்களின் எதிரி அல்ல'' என்று ஸ்டாலின் குரலில் பேசிக்காட்டினார் தினகரன். அதைக் கேட்ட தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர்.