சீமானை மறைமுகமாக சாடிய கரு.பழனியப்பன்

சீமானை மறைமுகமாக சாடிய கரு.பழனியப்பன்
Updated on
1 min read

மக்களவைத் தேர்தலில் இம்முறை பல்வேறு புதுமுகங்கள் பிரச்சாரக் களத்துக்கு வந்துள்ளனர்.  பொது நிகழ்ச்சிகளில் தீவிரமான அரசியல் கருத்துகளை எடுத்துவைக்கும் இயக்குநர் கரு.பழனியப்பன், இம்முறை திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகிறார்.

இதில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மதுரை மக்களவை தொகுதியில் போட்டியிடும். சு.வெங்கடேசனுக்கு ஆதரவாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் 'கலைஞர்களின் சங்கமம்' என்ற கூட்டம் மதுரையில் நடைபெற்றது. இதில் நடிகையும் சமூக செயற்பாட்டாளருமான ரோகிணி, இயக்குநர் கரு. பழனியப்பன், இயக்குநர் ராஜூமுருகன்,இயக்குநர் கோபி நயினார், இயக்குநர் லெனின் பாரதி, மருத்துவர் கு.சிவராமன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.

இக்கூட்டத்தில் அதிமுக கூட்டணியையும், பாஜகவையும் கடுமையாக தாக்கிப் பேசினார் கரு.பழனியப்பன். மேலும் பணமதிப்பு நீக்கம், வர்தா புயலின் போது பிரதமர் மோடி தமிழகம் வராதது என பல விஷயங்களை தன்னுடைய பேச்சில் குறிப்பிட்டார். அக்கூட்டத்தில் இயக்குநர் கரு. பழனியப்பன் பேசியதாவது:

இது மிகவும் முக்கியமான தேர்தல். இந்தியாவில் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் நாம்தான் உண்மையான இந்தியர்கள். தேர்தல் பிரச்சாரத்தின் தமிழக முதல்வர் எடப்பாடி என்று சொன்னாலே மக்கள் சிரிக்கிறார்கள். தமிழக முதல்வர் பதவி இப்படி சிரிப்பாய் சிரிப்பது இதுவே முதல்முறை.

எல்லாவற்றையும் மேலே இருப்பவன் பார்த்துக் கொள்வான் என்ற தைரியத்தில் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். இப்போது மேலே இருப்பவரையே கீழே இறக்கப்போகிறோம். இது போன்ற சூழலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் இந்த தேர்தலில் பெருவெற்றி அடைய வேண்டும். ஏன் சொல்கிறேன் என்றால் நானும் தமிழன்ன் என்று சொல்வது பெரிது இல்லை.

அப்படி சொல்பவர்கள் சு.வெங்கடேசன் எழுதிய வேள்பாரி புத்தகத்தில் இருப்பதை போல ஒரே ஒரு பக்கத்தை எழுதி காட்டட்டும். பிறகு சொல்லட்டும் தமிழன் என்று. ஒரு பக்கம் இலக்கிய நடையாகக் கூட எழுத வேண்டாம். ஒரு பக்கம் பிழையில்லாமல் எழுதட்டும். அனைவரும் எழுத்தில் தான் பிழைகள் பண்ணுவார்கள், ஆனால் அதிமுகவினரோ பேச்சிலேயே பிழைகள் பண்ணுகிறார்கள்

இவ்வாறு கரு. பழனியப்பன் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in