Published : 11 Apr 2019 03:34 PM
Last Updated : 11 Apr 2019 03:34 PM

ரஃபேல் விவகாரம்: நிர்மலா சீதாராமன் உள்ளிட்டவர்கள் இப்போது என்ன கூறுவார்கள்? - வீரமணி விமர்சனம்

ரஃபேல் விவகாரம் மோடி அரசுக்கு சரியான பின்னடைவு என, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக கி.வீரமணி இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "உச்ச நீதிமன்றம் ரஃபேல் ஊழல் பற்றிய வழக்கில் மத்திய அரசு கோரிக்கையை நிராகரித்து வழங்கிய ஆணை, மோடியின் தலைமையிலான பாஜக அரசுக்கு சரியான பின்னடைவு ஆகும்.

"உண்மை ஒரு நாள் வெளியாகும் - பொய்யும், புரட்டும் பலியாகும்!"

ரஃபேல் ஊழல்பற்றி மறுசீராய்வு மனு போட்டு, பேட்டி கொடுத்தவர்கள் பாஜக ஆட்சியில் முக்கிய மந்திரிகளாக இருந்தவர்கள் என்பது சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒன்றாகும். முன்னாள் பாஜக நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, பொதுத் துறை பங்குகளை விற்ற முன்னாள் அமைச்சர் அருண்ஷோரி, பிரபல மூத்த வழக்கறிஞர்கள் பிரசாந்த் பூஷன் போன்றோர்கள் என்பது கவனிக்கத்தக்கது.

'தி இந்து' நாளிதழின் ஆதாரப்பூர்வக் கட்டுரை

புலனாய்வு செய்திக் கட்டுரையாக 'தி இந்து' நாளிதழ் குழுமத்தின் தலைவர் என்.ராம் பல முக்கிய ஆவணங்களை ஆதாரப்பூர்வமாக வெளியிட்டு கட்டுரை எழுதினார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், நாடாளுமன்றத்தில் கம்யூனிஸ்ட்டுகளும், திமுகவும் எடுத்து வைத்த வாதங்களுக்கு வரிந்து கட்டிக்கொண்டு பதில் கூறி சமாளித்த ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன், அருண் ஜேட்லி, பாஜக தலைவர் அமித் ஷா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தின் நிராகரிப்பு நிலைப்பாட்டுக்கு என்ன பதில் கூறுவார்கள்?

தமிழ்நாட்டின் கொத்தடிமை ஆட்சி!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 10 ஆயிரம் கோடி ரூபாயை 8 வழிச்சாலை என்ற ஒரு திட்டத்திற்குக் கொட்டி, அவசர அவசரமாக நிலங்களைக் கையகப்படுத்தி, காவல்துறையை ஏவல் துறையாக்கி, தானடித்த மூப்பாக தர்பார் நடத்தியதைக் கண்டித்து, எட்டுவழிச் சாலைத் திட்டம் சட்ட நடைமுறைகளைப் பின்பற்றி கையகப்படுத்தாததால் செல்லாது என்று நல்ல தீர்ப்பு வழங்கி, தமிழக அரசின் முதுகெலும்பை முறித்து, ஏழை விவசாயிகள் அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரைத் துடைத்து, அவர்கள் கண்களில் ஆனந்தக் கண்ணீரைப் பெருக்கியதே - இது ஒன்று போதாதா - வாக்காளர்கள் அந்த டில்லியின் கொத்தடிமை ஆட்சிக்கு விடை கொடுத்து அனுப்பும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதற்கு?

எட்டு வழிச்சாலையில் தமிழக அரசின் அதிதீவிர ஆர்வம் காட்டியது என்பது உலகறிந்த ஒன்று.

காலே இல்லாத 'மிஸ்டு கால்' கட்சி!

தனது கையில் உள்ள வருமான வரித்துறை, சிபிஐ போன்றவற்றை ஏவிவிட்டு, அச்சுறுத்தி, நிபந்தனையற்ற அடிமைகளாக்கி, கூட்டணி போட்டு, சமுக நீதி மண்ணான பெரியாரின் திராவிட பூமியில் காலூன்றலாம் என்று காலே இல்லாத, 'மிஸ்டு கால்' கட்சியினர் செய்த கூட்டு முயற்சிகளுக்கு, உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் பூட்டு போடும் அளவுக்குச் சிறந்த மக்கள் நல நீதித் தீர்ப்புகள் - வரலாற்றுப் பெருமை வாய்ந்த இரு தீர்ப்புகளை வழங்கிவிட்டன!

மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் 8 வழிச்சாலைத் தீர்ப்புக்கு மேல்முறையீடு செய்யவிருக்கிறதாம் தமிழக அரசு. இதை வாக்களிக்கும் முன்பு நினைவில் கொள்ள வேண்டும். தற்கொலை செய்துகொண்ட பல்லாயிரக்கணக்கான விவசாயிகளின் உருவம் தெரிய வேண்டும்.

உண்மையான வீர வணக்கம் எது?

இவ்விரு மக்கள் விரோத மத்திய - மாநில அரசுகளைத் தோற்கடிப்பதுதான் அவர்களுக்கு செலுத்தும் வீர வணக்கம்" என கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x