Published : 03 Apr 2019 12:56 PM
Last Updated : 03 Apr 2019 12:56 PM

நீட் குறித்த அறிவிப்பு: மாநில உரிமையை மதிக்கும் உணர்வை காங்கிரஸ் வெளிப்படுத்தியுள்ளது; கி.வீரமணி பாராட்டு

'நீட்' குறித்த அறிவிப்பின் மூலம், மாநில உரிமையை மதிக்கும் உணர்வைக் காங்கிரஸ் வெளிப்படுத்திக் கொண்டது என, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கி.வீரமணி இன்று (புதன்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "நீட் தேர்வைப் பொறுத்தவரையில் திராவிடர் கழகம் தொடக்கம் முதலே தனது எதிர்ப்பை பல வடிவங்களிலும் வெளிப்படுத்தியுள்ளது. திமுக, இடதுசாரிகள் - பல்வேறு  சமுக அமைப்புகளுடன் இணைந்தும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு இருந்து வந்ததை மத்திய பாஜக அமைச்சர்களே ஒப்புக்கொண்டார்கள்.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கொடுத்த வாக்குறுதி?

இந்நிலையில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் 'நீட்' விலக்கு கோரி தமிழக அரசு சார்பில் ஓர் அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டால், அதனை மத்திய அரசு கண்டிப்பாகப் பரிசீலிக்கும் என்று உத்தரவாதம் அளித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் இரு சட்டங்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவையிலும், அனைத்துக் கட்சிகளின் ஒப்புதலோடு ஒருமனதாக இரு சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அவசரச் சட்டத்தில் மேலும் பல தகவல்கள் தேவை என்று மத்திய அரசு கேட்டுக்கொண்ட நிலையில், தேவையான தகவல்களையும் தமிழக அரசு அனுப்பியும் வைத்தது. இந்தப் பிரச்சினையில் சட்டச் சிக்கல்கள் உண்டா என்பது குறித்து ஆராய்ந்து அறிக்கையளிக்க மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, பிரதமர் அலுவலக விவகாரங்கள் துறை அமைச்சர் ஜித்தேந்தர் சிங், மத்திய வர்த்தகத் துறை இணையமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமன் ஆகியோர் அடங்கிய குழுவும் அமைக்கப்பட்டு, கருத்தும் பெறப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு என்ன கூறியது?

இந்த நிலையில், 'நீட்' தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது (17.8.2017) அத்தேர்வை நாங்கள் ஆதரிக்கவில்லை என்று மத்திய அரசு சார்பில் சொல்லப்படவில்லை. மத்திய அரசின் சார்பில் வாதாடிய துஷார் மேத்தா 'நீட்' தேர்வுக்கு எதிராகவே பேசினார். சட்டச் சிக்கல் ஏதுமில்லாத நிலையில், அவசரச் சட்டத்திற்குத் தடை விதிக்க முடியாது என்றும் கூறினார். மாநில அரசின் சார்பிலும் அவ்வாறே கூறப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஒரு கருத்தினைத் தெரிவித்தனர். 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் 'நீட்' தேர்வால் பாதிக்கப்பட்டவர்கள் என இரு தரப்பினரும் பாதிப்படையாமல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதற்கான ஒரு திட்டத்தோடு வருமாறு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறினர்.

நம்பவைத்துக் கழுத்தறுத்த மத்திய அரசு

நல்லது நடக்கும் என்ற எண்ணம் பொதுமக்கள் மத்தியிலும், சமுக நீதியில் அக்கறை கொண்டவர்கள் மத்தியிலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சற்றும் எதிர்பாராத வகையில் அதிர்ச்சியூட்டும் ஒரு கீழிறக்கச் சிந்தனையோடு மத்திய அரசு நம்ப வைத்து கழுத்தை அறுத்துவிட்டது. மிகவும் கண்டனத்துக்கும், காலாகாலத்திற்கும் ஒடுக்கப்பட்ட மக்களால் சமுகநீதியாளர்களால் வெறுக்கப்படக் கூடிய வகையில் மத்திய பாஜக அரசு நடந்துகொண்டது.

உச்ச நீதிமன்றம் நடந்துகொண்டது சரிதானா?

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு வந்த அன்று (22.8.2017) மத்திய அரசு சார்பில் ஏற்கெனவே ஒப்புக்கொண்ட - உறுதியளித்ததற்கு முற்றிலும் மாறாக, தமிழக அரசின் அவசரச் சட்டத்துக்கு மத்திய அரசின் ஒப்புதல் இல்லை என்று கூறப்பட்ட அந்த நிலையிலேயே, தமிழக அரசின் சார்பில் பங்கேற்ற வழக்கறிஞரின் கருத்தினையும்கூடக் கேட்காமலேயே, மத்திய அரசின் முடிவை ஏற்றுக்கொண்டு உச்ச நீதிமன்றம் வழக்கினை முடித்து வைத்தது - அதைவிடப் பெரும் அதிர்ச்சியாகும்.

அரசு என்ற முறையில் மத்திய பாஜக அரசு நடந்துகொண்டதும், நீதிமன்றம் என்ற முறையில் உச்ச நீதிமன்றம் நடந்துகொண்ட முறையும் அதற்கு முன் எப்பொழுதும் நடந்திராத அசாதாரணச் செயல்பாடாகும். தமிழக அரசு அதன்மீது மேல்முறையீடு செய்யாமல் மத்திய அரசின் கண்ணசைவுக்கு அடங்கிவிட்டது.

திமுக கொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றம் கூறியது என்ன?

இதே உச்ச நீதிமன்றம் திமுக தொடர்ந்த வழக்கில் 2013-ல் கூறியது என்ன? தலைமை நீதிபதி அல்தாமஸ் கபீர் தலைமையில் நீதிபதி விக்ரமஜித் சென் மற்றும் ஏ.ஆர்.தவே அடங்கிய அமர்வில், ஏ.ஆர்.தவேவைத் தவிர்த்துப் பெரும்பான்மை நீதிபதிகள் கூறிய தீர்ப்பு மிகவும் முக்கியமானது. இந்திய அரசமைப்புச் சட்டம் 19, 15, 26, 29, 30 ஆகிய பிரிவுகளின்படி இந்திய மருத்துவக் கவுன்சிலுக்குத் தேர்வு நடத்தும் அதிகாரம் இல்லை என்று கூறி, 'நீட்' தேர்வை ரத்து செய்தது.

காங்கிரஸ் ஆட்சிக்கு அடுத்து, மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த நிலையில்தான் இந்தத் தீர்ப்புக்கு மேல் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது என்பது கவனிக்கத்தக்கதாகும். எந்த நீதிபதி ஏ.ஆர்.தவே 'நீட்' வழக்கில் மாறுபட்ட தீர்ப்பினை வழங்கினாரோ, அந்த நீதிபதி தலைமையிலேயே 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு உச்ச நீதிமன்றத்தில் அமைக்கப்பட்டு, 'நீட்' தேர்வு செல்லும் என்ற தீர்ப்பு (16.3.2016) பெறப்பட்டது.

இதுதான் நண்டைச் சுட்டு நரியைக் காவல் வைப்பதாகும்! இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வலியுறுத்தப்பட்ட சமுக நீதி என்பது ஆளும் அதிகார வர்க்க உயர்சாதிப் பிரிவினரால் சித்திரவதை செய்யப்பட்டு வருகிறது.

இடங்களை அள்ளிச் சென்றது சிபிஎஸ்இ மாணவர்கள்!

அதன் விளைவுதான் அரியலூர் அனிதா, பெரம்பலூர் பிரதீபா, திருச்சி சுபஸ்ரீக்களின் தற்கொலைகள்! திருத்துறைப்பூண்டி கிருஷ்ணன், சிங்கம்புணரி கண்ணன் ஆகிய தந்தையர் மரணங்களும் ஆகும். 'நீட்' தேர்வு எழுதிய 75,000 தமிழக மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் கிடைத்த இடங்கள் வெறும் 300 மட்டுமே.

ஆனால், சிபிஎஸ்இ வழியில் படித்த மாணவர்கள் 9,000 பேர் எழுதியதில், 4,500 மாணவர்களுக்கு இடம் கிடைத்துவிட்டது. ஏனெனில், 'நீட்' தேர்வு கேள்வி என்பது - சிபிஎஸ்இ கல்வி அடிப்படையில் தான் தயாரிக்கப்படுகிறது. இதிலிருந்து இதன் பின்னணியில் உள்ள சூழ்ச்சிகளை நன்கு அறியலாம்.

காங்கிரஸின் தேர்தல் அறிக்கையும் - 'நீட்' தேர்வு ரத்தும்!

இந்நிலையில், நம்பிக்கை நட்சத்திரமாக காங்கிரஸ் தன் தேர்தல் அறிக்கையில் 'நீட்' தேர்வு விரும்பாத மாநிலங்களில் 'நீட்' தேர்வு இருக்காது என்ற உத்தரவாதத்தினை அளித்துள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களின் வயிற்றில் பால்வார்க்கும் இந்த அரும்பெரும் அறிவிப்புக்காக - சமுக நீதிச் சிந்தனைக்காகக் கோடானு கோடி ஒடுக்கப்பட்ட மக்கள், சிறுபான்மை மக்களின் சார்பாக நன்றியறிதலோடு கூடிய பாராட்டினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அதோடு, நாம் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்த கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கைக்குக் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை பச்சைக் கொடி காட்டியது மேலும் பாராட்டுக்கும், வரவேற்புக்கும் உரியதாகும். இதன்மூலம் மாநில உரிமையை மதிக்கும் உணர்வைக் காங்கிரஸ் வெளிப்படுத்தியுள்ளது. பள்ளிக் கல்வி மட்டுமல்லாது ஒட்டுமொத்தமாகக் கல்வி மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருவதும் அவசியமாகும்.

காலத்துக்கேற்ற வகையில் காங்கிரஸின் மாற்றம் வரவேற்கத்தக்கது

காலத்துக்கேற்ற மாறுதலுக்குக் காங்கிரஸ் தன்னை உட்படுத்திக் கொண்டு இருக்கிறது - அதன் இளம் தலைவர் ராகுல் காந்தி தலைமையேற்றுள்ள இந்தக் காலகட்டத்தில் என்பது இதன்மூலம் பெறப்படுகிறது.

காங்கிரஸ் அணி வெல்லட்டும்!

தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், சிறுபான்மையினர்தான் இந்த நாட்டின் பெரும்பான்மை மக்கள் - பலவகைகளிலும் உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களுக்காக திட்டங்களை வகுப்பதிலும், சட்டங்களை வகுப்பதிலும், அவற்றைச் செயல்படுத்துவதிலும் காங்கிரஸ் தலைமையில் அமைந்துள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிப் பொறுப்பை அமைக்கச் செய்வதில் இந்த வெகுமக்களுக்குக் கூடுதல் பொறுப்பும், கடமையும் நிச்சயம் இருக்கிறது.

பாசிசம் ஒழியட்டும் - பாஜக தலைமையிலான கூட்டணி வீழட்டும்! 17-ம் மக்களவைத் தேர்தலில் இந்த வெகுமக்கள் கண்ணும் கருத்துமாக இருந்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு வெற்றி சங்கு முழங்கிட, பாடுபட உறுதியேற்போம்" என கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x