Published : 15 Apr 2019 08:42 AM
Last Updated : 15 Apr 2019 08:42 AM

தேர்தலில் போட்டியிடும் அதிமுக, திமுக வேட்பாளர் அனைவரும் கோடீஸ்வரர்கள்

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக,திமுக வேட்பாளர்கள் அனைவரும் கோடீஸ்வரர்கள் என்று தேர்தல் சீர்திருத்தத்துக்கான இயக்கம் தெரிவித்துள்ளது.

தேர்தல் சீர்திருத்தத்துக்கான இயக்கம் சார்பில் தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து விவரங்கள், நிலுவையில் இருக்கும் வழக்குகள் குறித்தஇரண்டு அறிக்கைகளை நேற்று சென்னையில் வெளியிடப்பட்டது. இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் மூத்த பத்திரிகையாளருமான ஆர்.ரங்கராஜன் அறிக்கைகள் வெளியிட்டார்.

பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் வரும் 18-ம் தேதி நடைபெறுகிறது. ஒவ்வொரு தொகுதியிலும் அதிமுக, திமுக, அமமுக, மக்கள் நீதி மய்யம் கட்சி, நாம் தமிழர் கட்சி ஆகிய 5 கட்சிகளின் வேட்பாளர்கள் வீதம் 39 தொகுதியில் இருந்து மொத்தம் 195 வேட்பாளர்கள் வேட்பு மனுவுடன் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தைக் கொண்டு, அவர்களின் சொத்து விவரங்கள், நிலுவையில் இருக்கும் வழக்குகள் குறித்து அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. சமூக ஊடகங்கள் மூலமாக இந்த அறிக்கைகள் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கப்படும்.

பொதுமக்கள் வேட்பாளர்களை பற்றி முழுமையாக தெரிந்துக் கொண்டு தங்களுடைய ஜனநாயக கடமையாற்ற இந்த அறிக்கைகள் பெரிதும் உதவியாக இருக்கும். தேர்தல் சீர்திருத்தத்துக்கான இயக்கம் சார்பில் அரசியல் கட்சிகள், தேர்தல் ஆணையத்தின் தற்போதைய அதிகாரிகள் மற்றும் முன்னாள் அதிகாரிகளை கலந்தாலோசித்து என்ன மாதிரியான தேர்தல் சீர்திருத்தங்களைச் செய்வது, எப்படி செய்வது போன்ற முயற்சிகள் எடுக்கப்படும். மூத்த பத்திரிகையாளர்களை இயக்கத்தில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

டாப் 5 வேட்பாளர்கள்

கணக்கெடுத்த 5 கட்சிகளில் 192 வேட்பாளர்களில் 52 வேட்பாளர்கள் ரூ.1 கோடிக்கும் குறைவாக சொத்து மதிப்பை காட்டியுள்ளனர். மீதமுள்ள 143 வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள். கன்னியாகுமரியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஹெச்.வசந்தகுமார் ரூ.417.48 கோடி சொத்துகளுடன் முதலிடத்தில் உள்ளார். தென்சென்னையில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா ரூ.237.56 கோடி சொத்துகளுடன் இரண்டாவது இடத்திலும் பொள்ளாச்சியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சி.மகேந்திரன் ரூ.172.32 கோடி சொத்துகளுடன் மூன்றாவது இடத்திலும் கோவையில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் ஆர்.மகேந்திரன் ரூ.131.48 கோடி சொத்துகளுடன் நான்காம் இடத்திலும் வேலூரில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் ரூ.125.83 கோடி சொத்துகளுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர். சில வேட்பாளர்கள் தங்களுடைய சொத்து மதிப்பை ரூ.15 ஆயிரம், ரூ.20 ஆயிரம் என காட்டியுள்ளனர். திமுக, அதிமுக வேட்பாளர்கள் அனைவரும் கோடீஸ்வரர்களாக உள்ளனர்.

வழக்குகள்

இதேபோல் தருமபுரியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் அன்புமணி, அரக்கோணத்தில் போட்டியிடும் பாமக வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி, தேனியில் போட்டியிடும் காங்கிரஸ் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதிமாறன், தூத்துக்குடியில் போட்டியிடும் கனிமொழி, திருவண்ணாமலையில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் மீது வழக்குகள் உள்ளன. இவ்வாறு ஆர்.ரங்கராஜன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x