Published : 06 Apr 2019 18:55 pm

Updated : 06 Apr 2019 19:10 pm

 

Published : 06 Apr 2019 06:55 PM
Last Updated : 06 Apr 2019 07:10 PM

போலி வாட்ஸ் அப் தகவல்களால் பாதிக்கப்படும் வடமாநில இளைஞர்கள்: வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை; போலீஸார் எச்சரிக்கை

குழந்தை கடத்தல் நபர்கள் என வடமாநில இளைஞர்களின் படத்தைப் போட்டு தங்கள் இஷ்டத்திற்கு போலியான தகவல்களை சிலர் வாட்ஸ் அப்பில் பரப்புவதால் வடமாநில அப்பாவி இளைஞர்கள் தாக்கப்படுகின்றனர். இவ்வாறு செய்வோர்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.

ஒரு தகவலை அடுத்தவருக்குச் சொல்லிவிடவேண்டும் என்கிற வேட்கையும், எது வந்தாலும் அதை நம்பும் மனோபாவமும் பலருக்கும் உண்டு. எதையாவது வாட்ஸ் அப்பில் பேசி அதைப் பரப்பி விடவேண்டும் என்கிற நவீன ‘ஆன்லைன் மனநோயாளிகள்’ சமீப காலமாக அதிகரித்து வருகின்றனர்.


இவர்கள் எதையாவது பேசுவார்கள். அதைப் பதிவு செய்து 10 குழுக்களுக்கு அனுப்பி வைப்பார்கள். அதைப் படிக்கும் பலரும் அதன் பின்னணி குறித்து ஆராயாமல் அப்படியே காப்பி செய்து அடுத்து பல குரூப்களில் பேஸ்ட் செய்துவிட்டு அவரது வேலையை பார்க்கப் போய்விடுவர்.

இன்னும் சிலர் உண்மையான இந்தியனாக இருந்தால், உண்மையான தமிழனாக இருந்தால், பெண்ணைப் பெற்ற தகப்பனாக இருந்தால் என மிரட்டியே மெசேஜை அடுத்த குரூப்களுக்கு ஷேர் செய்யச் சொல்வார்கள். இவர்களுக்கெல்லாம் பின்விளைவு காரணமாக ஏற்படும் துன்பங்கள் பற்றித் தெரியாது.

சமீபத்தில் வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைதளங்களில் பரவும் ஒரு புகைப்படம் மற்றும் அதனுடன் இணைந்துள்ள வாய்ஸ் மெசேஜ் போலீஸாரைத் திடுக்கிட வைத்துள்ளது. தங்கள் மனம்போன போக்கில் வாய்ஸ் மெசேஜைப் பதிவு செய்து அனுப்பியுள்ளனர்.

அதில், ''ஹாய் ஃப்ரண்ட்ஸ். இந்தப் படத்தில் உள்ளவரை போலீஸார் பிடித்துள்ளனர். இவர்களைப் போல் 400 இளைஞர்கள் வடமாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்துள்ளனர். இவர்கள் குழந்தைகளைக் கடத்துபவர்கள்.இவர்களில் 10 பேரை போலீஸார் பிடித்துவிட்டனர். ஆனாலும் 390 பேர் உள்ளனர் என போலீஸாரிடம் சவால் விட்டுள்ளனர்'' என்று பேசி அனுப்பியுள்ளனர்.

இவ்வாறு வாட்ஸ் அப்பில் பேசிய ஒரு தகவலும் உண்மையில்லை. அந்தப் படத்தில் இருப்பது சில மாதங்களுக்கு முன் ஏடிஎம் திருட்டில் கைதான ஒரு கொள்ளையன். பேசியவருக்கும் அதுபற்றி கவலை இல்லை. அவர்கள் ஒருவித மனநோய் பாதித்ததுபோல் பதிவு செய்யும் மெசேஜ்கள் வாட்ஸ் அப்பில் உலா வருவதால் என்ன நடக்கிறது?

நம் கண்ணில் படும் அப்பாவி வடமாநில இளைஞர்கள் எல்லோரும் பிள்ளை பிடிப்பவர்களாகத் தெரிகிறார்கள். மொழி ஒரு பிரச்சினை, கும்பல் சேர்ந்தவுடன் தாக்கினால் தப்பில்லை என்கிற குழு மனப்பான்மையில் தாக்குவது. சில இடங்களில் மன நோயாளிகளைப் பிடித்து தாக்கிக் கொல்வது நடக்கிறது.

இதுபோன்ற மெசேஜ்களால் பாதிக்கப்பட்டு கொல்லப்பட்ட அப்பாவிகள் விவரம் ஒரு பார்வை:

* கடந்த ஆண்டு மே மாதம் பழவேற்காடு, புலிகேட்டில் தங்குமிடமின்றி பாலத்தின் மீது படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த 45 வயது ஆணை அடித்து உதைத்து அந்தப் பாலத்தில் தொங்கவிட்டனர். இது தொடர்பாக 16 பேரை போலீஸார் கைது செய்தனர்.

* பல்லாவரத்தைச் சேர்ந்தவர் ருக்குமணி என்ற 65 வயது மூதாட்டி. இவர் மலேசியாவிலிருந்து வந்த தமது உறவினர்களுடன் திருவண்ணாமலை மாவட்டம் போளூர், அத்திமூர் முத்துமாரியம்மன் கோயிலுக்கு காரில் வந்தார். அப்போது காரை நிறுத்தி ஒரு நபரிடம் வழிகேட்க அவர் வழி சொன்னார். கார் கிளம்பும்போது அங்கு விளையாடிக்கொண்டிருந்த அந்த நபரின் மகளைல் கொஞ்சிய மூதாட்டி ருக்மணி மலேசிய சாக்லெட்டைக் கொடுத்தார்.

அவ்வளவுதான் பிள்ளை பிடிக்கும் கும்பல் என கிராமத்தார் துரத்தினர். காரை மடக்கி, கவிழ்த்து, அதில் வந்தவர்களை ஊரே கூடி அடித்து உதைத்தனர். அதில் ருக்மணி (65) கொல்லப்பட்டார். படுகாயமடைந்த அவரது மகன் சில மாதம் தொடர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

* வேலூரை அடுத்த சிங்கிரிகோயில் என்ற இடத்தில் கடந்த ஆண்டு மே மாதம் 9-ம் தேதி அன்று மாலையில் சாலையில் நடந்த சென்ற 30 வயது மதிக்கத்தக்க ஒரு வட-இந்திய இளைஞரை, குழந்தையைக் கடத்த வந்தவர் என நினைத்து, அடித்து உதைத்ததில் அவர் உயிரிழந்தார்.

* கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள காட்டுமயிலூர் கிராமத்தில் அதேநாளில் சுற்றித்திரிந்த வடமாநிலப் பெண் ஒருவரை, குழந்தை கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர் என கருதி கிராம மக்கள் தாக்கினர்.

போலீஸார் வந்து மீட்டு மனநலக் காப்பகத்தில் அனுமதித்த வட மாநிலத்தவர் மீது மனதின் அடி ஆழத்தில் உள்ள கோபத்தால் அவர்களுக்கு எதிராக வாட்ஸ்-அப தகவல்களை தவறாகப் பரப்புவதால் இவ்வாறான தாக்குதல்கள் நடக்கின்றன என போலீஸ் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் மீண்டும் இதுபோன்ற வாட்ஸ் அப் மெசேஜ்கள் மறுபடியும் தலை தூக்கத் துவங்கியுள்ளது. பொதுமக்கள் செய்யவேண்டியது முதலில் இதுபோன்ற தகவலை தாங்கள் இருக்கும் வாட்ஸ் அப் குரூப்பில் பதிவு செய்யும் நபரை அதன் உண்மைத்தன்மையைக்கேட்க வேண்டும். காப்பி பேஸ்ட் செய்வதைக் கண்டிக்க வேண்டும். மற்றவர்களையும் இதை ஷேர் செய்யாதீர்கள் என தடுக்கவேண்டும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

மீறி இதுபோன்ற தவறான தகவல்களை போட்டோவுடன் போட்டு வாய்ஸ் மெசேஜ் போட்டு பதற்றத்தை பரப்பும் மெசேஜை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் எச்சரிக்கின்றனர்.

முன்புபோல் இல்லை. வாட்ஸ் அப்பில் ஒரு தவறான மெசேஜை யார் அனுப்பினார் என்பதைக் கண்டுபிடிக்கும் டெக்னாலஜி வந்துவிட்டது. போலி மெசேஜ்களைப் பரப்பும் நபர்கள் கவனத்தில் வைக்கவும்.

தவறவிடாதீர்!


    தவறான வதந்திகள்வாட்ஸ் அப் மெசேஜ்கள் பாதிக்கும் வட மாநில இளைஞர்கள்மன நோயாளிகள் போலீஸ் எச்சரிக்கை

    Sign up to receive our newsletter in your inbox every day!

    You May Like

    More From This Category

    More From this Author