Published : 14 Apr 2019 11:00 AM
Last Updated : 14 Apr 2019 11:00 AM

குட்டிக்கரணம் போட்டு உருண்டு வந்தால் கூட தாமரை மலர வாய்ப்பில்லை: ஸ்டாலின் விமர்சனம்

குட்டிக்கரணம் போட்டு உருண்டு வந்தால் கூட தாமரை மலருவதற்கு வாய்ப்பில்லை என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை நாமக்கல்லில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:

"நாடாளுமன்றத்தின் தேர்தலோடு சேர்த்து சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறப் போகின்றது. ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கப் போகின்றோம்.

உடம்பில் உருவாகும் கெடுதலை விளைவிக்கக் கூடிய இரண்டு கட்டிகளாக, நோய்க் கிருமிகளாக இருந்து இந்த நாட்டை குட்டிச் சுவராக்கி கொண்டிருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமியையும் மோடியையும் அகற்ற வேண்டிய அவசியத்திற்கு நாம் வந்திருக்கின்றோம்.

நாட்டையே குட்டிச் சுவராக்கி கொண்டிருக்கக்கூடிய மோடியின் ஆட்சி தொடரலாமா? சர்வாதிகார மனப்பான்மையோடு ஆட்சி நடத்திக் கொண்டிருக்கக்கூடிய மோடியின் ஆட்சி தொடரலாமா? அந்த ஆட்சிக்கு உதவியாக இருக்கக்கூடிய எடப்பாடியின் உதவாக்கரை ஆட்சி தொடரலாமா?

நான் உதவாக்கரை என்று சொல்வதற்கு காரணம் ஏதோ அரசியல் நாகரிகத்தை கடந்து நான் பேசுகிறேன் என்று யாரும் கருத வேண்டிய அவசியமில்லை. எதற்கும் உதவாமல் இருப்பதைத்தான் நான் உதவாக்கரை என்று சொல்கின்றேன். மோடி ஆட்சியில் பலனடைந்து இருக்கக்கூடியவர்கள் ஒன்றிரண்டு கார்ப்பரேட் கம்பெனிகள் தான். மற்ற யாருக்கும் எந்தப் பயனும் கிடையாது.

ஒற்றைத்தன்மை கொண்ட நாடாக மாற்ற நினைக்கிறார் மோடி. அதேபோல் தான் ஊழலையும் ஒரே இடத்தில் குவிக்க வேண்டும் என்கின்ற மனப்பான்மையோடு ஒரு ஹிட்லரைப் போல மோடி செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

உலக அளவில் பிரபலமான வாரப் பத்திரிகையொன்றில், சமீபத்தில், 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் 650 கோடி ரூபாய் கொடுத்து சட்டப்பேரவை தேர்தலை அதிமுக விலைக்கு வாங்கி இருக்கின்றது என கட்டுரை வெளியிட்டுள்ளது.

அன்புநாதன் வீட்டில் செய்யாதுரை வீட்டில் இப்படி பல இடங்களில் சில நிறுவனங்களில், அதிலும் குறிப்பாக எஸ்.ஆர்.எஸ்.மைனிங் கம்பெனி அங்கு வருமான வரித்துறை சோதனை செய்த போது சில ஆவணங்களை எடுத்திருக்கின்றார்கள். அவற்றையெல்லாம் வைத்துதான் பிரதமரிடம் கடந்த தேர்தலின் போது வருமான வரித்துறை ரிப்போர்ட் கொடுத்துள்ளது. கடந்த தேர்தலில் நாம் தோற்கவில்லை, தோற்கடிக்கப்பட்டோம்.

அக்கட்டுரையில், அதிமுக வேட்பாளர்களுக்கும், வாக்காளர்களுக்கும் தமிழகம் முழுவதும் மூன்று அமைச்சர்களை நியமித்து விநியோகம் செய்த ஆதாரங்களை வருமான வரித்துறை ரெய்டில் சிக்கியிருக்கின்றது. மூவர் கூட்டணியில் இருந்த மூன்று அமைச்சர்கள், நத்தம் விஸ்வநாதன், வைத்தியலிங்கம், துணை முதல்வர் ஓபிஎஸ்.

எஸ்.ஆர்.எஸ் மைனிங் கம்பெனி மூலம் அதிமுக வேட்பாளர்களுக்கு ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதியிலும் 70 சதவிகித வாக்காளர்களுக்கும் பணம் கொடுத்து இருக்கும் ஆதாரங்கள் அனைத்தும் 2017 ஆம் ஆண்டிலிருந்து அந்த ஆவணங்கள், பதிவுகள், ஆதாரங்கள், அத்தனையும் பிரதமரின் அலுவலகத்தில் இருக்கின்றது. அந்த வாரப் பத்திரிகையும் வருமான வரித்துறையும் கொடுத்திருக்கக்கூடிய செய்திகளில் இருந்து எடுத்து வெளியிட்டு இருக்கின்றார்கள். எனவே இதையெல்லாம் மோடி கையில் வைத்துக்கொண்டு இங்கு இருக்கக்கூடிய ஆட்சியை மிரட்டிக் கொண்டிருக்கிறார். அதன் விளைவுதான் இப்போது அமைந்திருக்கக்கூடிய கூட்டணி.

பாஜகவினர் தாமரை மலரும் – மலரும் - மலரும் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். அது குட்டிக்கரணம் போட்டு உருண்டு வந்தால் கூட மலருவதற்கு வாய்ப்பில்லை.

அதனால் ஆளும் கட்சியாக இருக்கக்கூடியவர்களில் அக்கிரமங்கள், அநியாயங்கள், வருமான வரித் துறையின் மூலம் சிக்கி இருக்கின்றது அதை வைத்து பயமுறுத்தி, அச்சுறுத்தி, அவர்களை அடக்கி வேறு வழியில்லாமல் இவர்கள் சேர்ந்திருக்கின்றார்கள்".

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x