Published : 02 Apr 2019 07:57 AM
Last Updated : 02 Apr 2019 07:57 AM

தினகரனை அதிமுகவில் சேர்க்க பேச்சுவார்த்தை நடக்கிறது: மதுரை ஆதீனம் தகவல்

தினகரனை அதிமுகவில் சேர்க்க மறை முகமாகப் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. அவர் நிச்சயம் அதிமுக வில் இணைவார் என்று மதுரை ஆதீனம் தெரிவித்தார்.

மதுரை ஆதீனம் நேற்று தனது 75-வது பிறந்த நாளை தெற்காவணி மூல வீதியில் உள்ள ஆதீனம் மடத்தில் கொண்டாடினார். அமைச்சர் செல்லூர் ராஜூ, அதிமுக வேட்பாளர் ராஜ் சத்யன் ஆகியோர் உட்பட ஏராளமானோர் அவரிடம் ஆசி பெற்றனர்.

பின்னர் ஆதீனம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மக்களவைத் தேர்தலிலும், இடைத்தேர்தலிலும் பாஜக, அதிமுக கூட்டணி வெற்றிபெறும். தமிழகத்தில் அதிமுக தலைமையில் பலமான கூட்டணி அமைந்துள்ளது. தினகரன் அதிமுகவோடு இணைவார் என்று கூறினேன். அதற்கு அவர் மறுப்புத் தெரிவித்தார். அப்படியானால், அதிமுகவுக்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தினகரன் சொல்வாரா?தேர்தலின்போது வேண்டுமானால் சேராமல் இருக்கலாம். ஆனால் நிச்சயமாக ஒருநாள் அதிமுகவோடு அமமுக இணைவது உறுதி என்பதை ஆணித்தரமாகச் சொல்கிறேன்.  அவருடன் யார் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள் எனச் சொல்ல முடியாது. அதிமுக வலுப்பெற வேண்டுமானால் அவர் இங்கு இணைந்து செயல்பட்டால்தான் நல்லது. அவருக்கும் அதுதான் நல்லது என்றார்.

இதுகுறித்து அமமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரன் எம்எல்ஏ நேற்று வெளியிட்ட அறிக்கை:

தினகரன் எச்சரிக்கை

ஆதீனத்தின் கருத்தை நான் ஏற்கெனவே நாகரீகமாக மறுத்திருந்தேன். அதிலிருந்தே அவர் உண்மை நிலையைப் புரிந்து கொண்டிருக்க வேண்டும்.

ஆனால், அவர் தனது பழைய பணியான தமிழரசு பத்திரிகையின் மக்கள் தொடர்பு அலுவலர் வேலையை இன்னமும் மறக்கவில்லை. எங்களுக்கே தெரியாமல் இணைப்புப் பேச்சு நடப்பதாக அவர் தொடர்ந்து பொய் சொல்வதைப் பார்த்தால், யாருக்கோ ஏஜெண்டாக இருக்கிறார். யாருக்கோ உதவுவதற்காக இப்படி பொய் செய்திகளை தொடர்ந்து பரப்பினால், மதுரை ஆதீன மடத்தின் பெயரைக் காக்கவாவது, அருணகிரி ஆதீனம் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தினகரன் எச்சரித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x