பிரதமர் அப்துல்- பெயரை மாற்றிக் கூறிய அமைச்சர் சரோஜா: கூட்டத்தில் சிரிப்பலை
பிரச்சாரத்தின்போது அமைச்சர் சரோஜா பிரதமர் பெயரை மாற்றிக் கூறியதால், சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
மக்களவைத் தேர்தலுக்காக அரசியல் தலைவர்கள் தமிழகம் முழுவதும் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக சார்பில் சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா, அதிமுக வேட்பாளர்களுக்காகவும் கூட்டணிக் கட்சிகளுக்காகவும் பரப்புரை மேற்கொள்கிறார்.
அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரச்சாரக் கூட்டம் நேற்று நடைபெற்றது. நாமக்கல் அதிமுக வேட்பாளர் காளியப்பனை ஆதரித்து அமைச்சர் சரோஜா காக்காவிரி பகுதியில் பிரச்சாரம் செய்தார்.
அப்போது பேசிய அவர், ''மறைந்த தமிழக முதல்வர் 'அம்மா' கட்டிக் காத்த வெற்றிச் சின்னத்தில், பாரதப் பிரதமர் அப்துல்..'' என்றார். உடனே சுதாரித்துக்கொண்ட சரோஜா, ''பாரதப் பிரதமர் மோடியின் ஆசிபெற்ற வெற்றி வேட்பாளர் அண்ணன் காளியப்பனுக்கு வாக்களியுங்கள்'' என்றார்.
பாரதப் பிரதமர் அப்துல் என்றபோது பார்வையாளர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது.
