Published : 30 Sep 2014 12:06 PM
Last Updated : 30 Sep 2014 12:06 PM

மண் வாசனையுடன் ஒரு சுவை

கிராமம் என்றால் விடுமுறை காலத்தில் சென்று நல்ல காற்று, சுவையான உணவு ஆகியவற்றை அனுபவித்து வருவது அந்தக் கால வழக்கம். கிராமத்து உணவு வகைகள் சுவையிலும் ஊட்டச்சத்திலும் வித்தியாசமாக இருக்கும்.

நாம் மறந்துவிட்ட பாரம்பரிய உணவு வகைகள்தான் அவை. அது போன்ற மண் வாசனை மிகுந்த, ரசாயனமற்ற பொருட்களைத் தருவது ‘கிராமியம் இயற்கை அங்காடி’யின் சிறப்பு.

சென்னை அசோக் நகரில் அமைந்திருக்கும் இந்த இயற்கை அங்காடியில் உள்ள அனைத்துப் பொருட்களும், மாதிரிக்கு சுவைத்துப் பார்க்கப்பட்ட பின்னரே விற்பனை செய்யப்படுவது புதுமை. அரிசி,சிறுதானியங்கள் போன்ற அனைத்துப் பொருட்களும் கிடைப்பது மட்டுமில்லாமல், அவற்றைச் சுவையான முறையில் சமைத்துச் சாப்பிடத் தேவையான மண்பாண்டங்களும் கிடைக்கின்றன. அந்த வகையில் ஒரு முழுமையான கிராமத்து உணவை நகரத்தில் உள்ளவர்களுக்கும் கொண்டுவருகிறது கிராமியம் இயற்கை அங்காடி.

பாரம்பரிய மறுபிறப்பு

"திருநெல்வேலி தோணித்துறையில் பிறந்து வளர்ந்ததால் இயற்கையாகவே விவசாயத்தைப் பற்றி எனக்குக் கொஞ்சம் தெரிந்திருந்தது.

சாப்பாடு எப்படி விஷமாக மாறிவருகிறது என்பது புரிந்த பிறகு, இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் வானகத்தில் பயிற்சி எடுத்துக்கொண்டேன்.

எல்லா மக்களுக்கும் அந்தக் கருத்து சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில் கிராமியம் அங்காடியைத் தொடங்கினேன்.

இங்கே பாரம்பரிய விதைகளையும் மக்களுக்கு வழங்கி வருகிறோம். இதுபோன்ற பாரம்பரிய முறைகள் நம் கண் முன்னே மறுபிறப்பு எடுப்பது சந்தோஷத்தைத் தருகிறது" என்கிறார் கடையின் உரிமையாளர் தாமோதர கண்ணன்.

புதுமைப் பொருட்கள்

இங்குக் கிடைக்கும் பனையோலைப் பெட்டிகள் சிறு வயது ஞாபகங்களுக்கு அழைத்துச் செல்கின்றன. வித்தியாசமான பொருட்களின் வரிசையில் துணிகளைப் பாதுகாப்பான முறையில் சலவை செய்ய சலவைப் பொடி , பெண்களுக்குச் சணல் பை, சிறுதானிய லட்டு போன்றவை கிடைக்கின்றன.

பிளாஸ்டிக் , காகிதப் பைகளை மறுசுழற்சியும் செய்கின்றனர். இது மட்டுமல்லாமல் சிறுதானிய உணவு வகைகளின் செய்முறைகளையும் கற்றுக்கொடுக்கின்றனர்.

"விவசாயம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தும் நிலத்துக்கு என்ன செய்வது என்று யோசிப்பவர்களுக்கு எங்களுடைய திருநெல்வேலி, ஆரணி விவசாய நிலங்களில் உதவி செய்ய அழைக்கிறோம்" என்கிறார் தாமோதர கண்ணன்.

சிறப்பான பொருட்கள்: பதினைந்து அரிசி வகைகள்

தொடர்புக்கு: 097 90 905559/ https://www.facebook.com/gramiyam/info
-பார்க்கவி பாலசுப்பிரமணியன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x