Published : 30 Apr 2019 08:44 am

Updated : 30 Apr 2019 08:44 am

 

Published : 30 Apr 2019 08:44 AM
Last Updated : 30 Apr 2019 08:44 AM

சினிமா பேனரிலிருந்து தேசிய விருது வரை... `திரைச்சீலை’ நூலாசிரியர் ஓவியர் ஜீவா

தேசிய திரைப்பட விருதுகளில், சிறந்த தமிழ் திரைப்பட குறிப்புகள் நூலுக்கான விருது எப்போதாவதுதான் அளிக்கப்படுவது. 1983-ல் அறந்தை நாராயணனின் ‘தமிழ் சினிமாவின் கதை’ என்ற நூலுக்கு அளிக்கப்பட்ட அந்த விருது 28 ஆண்டுகள் கழித்து 2011-ல் ‘திரைச்சீலை’ என்ற நூலுக்கு வழங்கப்பட்டது. இந்த நூலை எழுதியவர் ஓவியர் ஜீவா என்கிற ஜீவானந்தன் (62).

கோவையில் ஓவியக்கூடம் நடத்தி வரும் இவரது ஓவியங்கள், பல பத்திரிகைகளில் இடம்பெற்றுள்ளன. நவீன ஓவியர்கள் வரிசையில் இடம் பெற்றுள்ள இவர், எம்.ஏ. அரசியலும், சட்டமும் பயின்றுள்ளார். இவர், ஓவியத்துக்குள் வந்ததில் சுவாரஸ்யம் மிகுந்த பின்னணி உண்டு.


“அப்பா வேலாயுதம், குமரி மாவட்டம் பூதப்பாண்டியைச் சேர்ந்த விவசாயக் கூலி. ஆனாலும், அவருக்கு ஓவியத்துல அவ்வளவு நாட்டம். வீட்டுக்கே தெரியாம நாகர்கோயில் ஓவியப் பள்ளிக்கூடத்துல ஓவியம் கத்துருக்கார். கல் உடைக்கறது, கிழங்கு தோண்டறது, நெசவு நெய்யறதுனு கூலி வேலைக்குப் போய், அதுக்கான கட்டணத்தை செலுத்தியிருக்கார். நல்லா வரைஞ்சாலும், ஓவிய வாத்தியார் வேலை கிடைக்கல.

திருச்சி ஸ்ரீரங்கத்தில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், பேனர்கள் வரையும் பட்டறை வச்சிருந்தார். அங்கே போய் சேர்ந்து, சினிமா பேனர் வரைஞ்சிருக்கார். ரெண்டு வருஷத்துக்கு அப்புறம், ஒரு நண்பர் மூலமாக கோவைக்கு வந்து, ராயல் தியேட்டர்ல சினிமா பேனர் வரைய வாய்ப்புக் கேட்டிருக்கார். அந்தகாலத்துல சினிமா பேனர்கள் சென்னையில இருந்துதான் கோவைக்கு வரும். ராயல் தியேட்டர் முதலாளியும், ஆனந்தா பிலிம்ஸ் சினிமா விநியோகஸ்தரும் இவரை ஒரு படம் வரையச் சொல்லியிருக்கிறாங்க. தூக்கு தூக்கி படத்துல வர்ற பாலைய்யா படத்தை தத்ரூபமா வரைஞ்சிருக்கார். அதுல முதலாளிகளுக்கு படுதிருப்தி. அங்கேயே தனியா இடம் ஒதுக்கி, சினிமா பேனர்களை வரைய அனுமதிச்சிருக்காங்க.

ரெண்டு வருஷத்துக்கு அப்புறம், கோவை அஞ்சுமுக்கு பகுதியிலேயே சொந்தமா பட்டறை வச்சு, சினிமா பேனர்களை வரைஞ்சிருக்கார். ஆர்டர்கள் குவிந்தாலும், பணம் பேசினபடி வராது. நாங்க பசங்க நாலுபேர், மூத்தவன் நான். என்னை கலெக்டராக்கணும்னு ஆசைப்பட்டார் அப்பா. கம்யூனிஸ்ட் ஈடுபடு, திராவிட எதிர்ப்பு சிந்தனை காரணமா என்னை தமிழ் படிக்கக் கூடாதுன்னு சொல்லி, இங்கிலீஸ், இந்தியிலயே படிக்க வச்சார். நானாத்தான் தேடித்தேடி தமிழ் படிச்சேன்.

கோவை அரசுக் கல்லூரியில் பி.ஏ., சென்னை மாநிலக் கல்லூரியில் எம்.ஏ. அரசியல். சட்டக் கல்லூரியில் சட்டம் படிச்சேன். திடீர்ன்னு அப்பா நோய்வாய்ப்பட்டு இறந்துட்டார். மூத்த பிள்ளை என்பதால் குடும்பப் பொறுப்பு மொத்தமும் நானே கவனிக்க வேண்டியதாயிற்று.

கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவா, அப்பாவுக்கு மாமா முறை. அதனால, அவரைப் பற்றி நிறைய சொல்லுவாரு. அப்பா கூடவே இருந்ததால, நானும் வரைவேன். பள்ளியிலேயே ஓவியம் வரைஞ்சு, பாராட்டும் பெற்றிருக்கேன்.

சிவாஜி படம் எட்டு தியேட்டர்ல ரிலீஸ் ஆகுதுன்னா, ஒரே மாதிரி பேனர்கள் எல்லா பக்கமும் அனுப்பணும். அதுக்கு, கட்-அவுட், கட்டைகள், மரங்கள் எல்லாம் இங்கேதான் தயாரிக்கணும். பேனர்களுக்கு அப்பா தலை மட்டும் வரைவார். மற்றவங்க, அதுக்கு உடம்பு, கைகால் எல்லாம் வரைவாங்க. நானும் இதையெல்லாம் வரைவேன். முகம் வரைந்து, முழு ஓவியர் ஆகறதுங்கிற கனவு இருந்தது.

`மூன்று முடிச்சு’ ரஜினி

மூன்று முடிச்சு படம் வந்த சமயம், அப்பாகிட்ட அனுமதிகேட்டு ரஜினியை வரைஞ்சேன். அதுதான் நான் வரைஞ்ச முதல் முழு ஓவியம். ரசிகர்கள்கிட்ட அந்த படத்துக்கு நல்ல வரவேற்பு. இப்படி ஓவியத்துல இயல்பா புகுந்த நேரத்துலதான் அப்பா இறந்துட்டாரு. ஓவியப் பட்டறையை திறந்து, எந்தந்த வேலை அரைகுறையா இருந்ததோ, அதையெல்லாம் முடிச்சுக் கொடுத்தேன். புது ஆர்டரும் எடுத்தேன். பத்து வருஷம் வழக்கறிஞரா இருந்துட்டு, இடையில் இதையும் கவனிச்சேன். ஆனா, ஒருகட்டத்துல வழக்கறிஞர் தொழிலை விட்டுட்டு, முழு மூச்சா ஓவியம் வரையறதுல ஈடுபட்டேன்.

சினிமா பேனர் வரையறது மாதிரி, நவீன ஓவியத்துலேயும் ஆர்வம் இருந்தது. 1978-ல் கோவையைச் சேர்ந்த ஓவியர்கள் சேர்ந்து, சித்ர கலா அகடாமினு ஒரு அமைப்பை ஏற்படுத்தினாங்க. அதில் நான் சேர்ந்தேன். அவங்க நடத்தின ஓவியப் போட்டியில் கலந்துகிட்டு, முதன்முறையா ஆறுதல் பரிசு வாங்கினேன். 1979-ல் நடந்த ஓவியக் கண்காட்சியில என்னோட ஓவியத்துக்கு நல்ல வரவேற்பு கிடைச்சது. சித்ர கலா அகாடமியில் இணைச் செயலாளரா பொறுப்பு கொடுத்தாங்க. அடுத்த வருஷம் செயலாளரானேன். 42 வருஷமா அந்த அமைப்புக்கு தலைவரா இருக்கேன். வருஷா வருஷம் கிக்கானி பள்ளியில் 2 நாள் ஓவியப்பட்டறை நடத்தறோம். இதுல பங்கேற்ற நிறைய பேர் சினிமாவில் ஆர்ட் டைரக்டரா இருக்காங்க.

டிஜிட்டல் யுகம்!

1980-களில் மாலன் நடத்தின ‘திசைகள்’ பத்திரிகைக்கு படம் வரைஞ்சேன். கனடாவிலிருந்து வரும் ‘தாய் வீடு’ பத்திரிகையில் தொடர்ந்து ஏழு வருஷம் வரைஞ்சேன். அவங்க என்னை கனடாவுக்கே கூட்டிட்டுப்போய் கெளரவிச்சாங்க. அங்கதான் கம்ப்யூட்டர் மூலம் படம் வரைய கத்துக்கிட்டேன். இதைப் பயன்படுத்தி இப்ப பத்திரிகைகள், பேனர்களுக்கு ஓவியங்கள் வரையறேன்” என்றவரிடம், “டிஜிட்டல் யுகம் உங்களை பாதிக்கவில்லையா?” என்று கேட்டோம்.

“டிஜிட்டல் யுகத்துக்கு தகுந்த மாதிரி, என்னை மாத்திக்கிட்டேன். ஓவியம் வரைவதை கணினிமயமாக்கிவிட்டேன். போட்டோஷாப், கோரல்-ட்ரானு பல மென்பொருள்களை கையாளறேன். முந்தி ஒரு பத்திரிகையில் ஓர் ஓவியம் வரையச்சொல்லி ஆர்டர் கொடுத்தாங்கன்னா, வரைஞ்சிமுடிக்க ஒரு நாள், ரெண்டு நாள்கூட ஆகும். ஆனா, இப்ப அரை மணி நேரத்துல செஞ்சு கொடுத்துட முடியுது” என்றார் ஓவியர் ஜீவா.


Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x