Published : 29 Sep 2014 10:30 AM
Last Updated : 29 Sep 2014 10:30 AM

தமிழகம் முழுவதும் ரோந்துப் பணி தீவிரம்: வன்முறையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை - போலீஸார் எச்சரிக்கை

தமிழகத்தில் வன்முறை சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் அதிமுகவினர் போராட்டத்தில் குதித்தனர். பல இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. பஸ்கள், கடைகள் மீது கல்வீசி தாக்கினர். காஞ்சிபுரம், விருதுநகரில் அரசு பஸ்களும், நாகப்பட்டினத்தில் ஒரு காரும் எரிக்கப்பட்டன.

நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் ரயில் மற்றும் சாலை மறியல் போராட் டங்கள் நடந்தன. கடைகள் அடித்து உடைக்கப்பட்டன. பதற்றம் அதிகரித்ததால் கடைகள், வர்த்தக நிறுவனங்கள், தனியார் அலுவலங் கள் அனைத்தும் மூடப்பட்டன. பல இடங்களில் வலுக்கட்டாயமாக கடைகள் மூட வைக்கப்பட்டன.

திமுக தலைவர் கருணாநிதி, அவரது மகன் ஸ்டாலின் மற்றும் பாஜக மூத்த தலைவர் சுப்பிர மணியன் சுவாமி ஆகியோரின் வீடுகளில் சிலர் கற்களை வீசி தாக்கினர். பல இடங்களில் திமுகவினரின் வீடுகள் தாக்கப் பட்டன. வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

இதுபோன்ற வன்முறைச் சம்பவங்களால், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நேற்று முன்தினம் பிற்பகல் 3 மணி முதல் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. குழந்தைகளுக்கு பால் வாங்கக் கூட முடியாமல் மக்கள் கடும் அவதிப்பட்டனர். மருந்துக் கடைகளும் மூடப்பட்டதால் அவசர சிகிச்சைக்கு மருந்து கிடைக் காமல் நோயாளிகள் திண்டாடினர். அரசு மற்றும் தனியார் பஸ் போக்குவரத்து முழுவ தும் நிறுத்தப்பட்டது. வெளியூர் செல்லும் பஸ்களும் இயக்கப் படவில்லை. இதனால், பயணி கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

பலர் நடந்தே வீடு களுக்கு சென்றனர். வன்முறைச் சம்பவங் களை தடுக்காமல் போலீஸார் வேடிக்கை பார்த்தனர்.இதையடுத்து, தமிழக தலைமைச் செயலாளர், டிஜிபி, சென்னை மாநகர போலீஸ் ஆணையர் ஆகியோரை அழைத்து ஆளுநர் ரோசய்யா ஆலோசனை நடத்தினார். சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆளுநர் உத்தரவிட்டார். அதன்பின்னரே வன்முறை சம்பவங்களை தடுக்கும் நடவடிக்கையில் போலீஸார் இறங்கினர். நேற்று பிற்பகல் முதல் பல இடங்களில் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது.

கடை வீதிகளில் போலீஸார் ரோந்துப் பணிகளில் ஈடுபட்ட னர். கூட்டமாக நின்று பேசிக் கொண்டிருந்தவர்களை கலைத்த னர். பஸ் போக்குவரத்தும் சரிசெய்யப்பட்டது. சட்டம் -ஒழுங்கை சரிசெய்ய போலீஸ் அதிகாரி களுக்கு டிஜிபி ராமானுஜம் உத்தரவிட்டுள்ளார். வன்முறைச் சம்வங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தமிழகம் முழுவதும் போலீஸார் உஷார் நிலையில் உள்ளனர். முக்கிய சாலைகள், பிரச்சினைக்குரிய இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அதே நேரத்தில் சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பை எதிர்த்து தமிழகத்தின் பல பகுதிகளில் அதிமுகவினர் நேற்று 2-வது நாளாக உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x