Published : 15 Apr 2019 11:06 AM
Last Updated : 15 Apr 2019 11:06 AM

அதிமுகவின் ஏஜென்டுகளாக செயல்பட தொடங்கிவிட்டீர்களா? - தேர்தல் அதிகாரிக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி

அதிமுகவின் ஏஜென்டுகளாக செயல்பட தொடங்கிவிட்டீர்களா?, திமுக ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு நீங்கள் ஐஏஎஸ் ஆக எங்காவது பணியாற்ற வேண்டும் அது உங்களுக்கு நினைப்பில் இல்லையா ஞாபகம் இல்லையா?  என, தேர்தல் அதிகாரிக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று (ஞாயிற்றுக்கிழமை), ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

"நான் தரக்குறைவாக விமர்சிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். நான் எப்போதும் யாரையும் தரக் குறைவாக விமர்சிக்க மாட்டேன் ஆதாரத்துடன் விமர்சிப்பேன். ஏனென்றால் அநாகரீகமாக விமர்சனம் செய்ய எங்கள் தலைவர் எங்களுக்கு கற்றுக் கொடுக்கவில்லை.

ஸ்டாலினின் காது ஜவ்வு கிழிந்து விடும் என்று முதல்வர் சொல்கிறார். இது முதல்வர் பேசுகின்ற பேச்சா, ஸ்டாலின் காது ஜவ்வு கிழிந்து விடும் என்று சொல்லும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உங்கள் அரசியல் வாழ்வு ஜவ்வு கிழிந்து போய் விடும் ஜாக்கிரதை. என் காது ஜவ்வு கிழிகின்றதா? உங்கள் அரசியல் வாழ்க்கை கிழிகின்றதா என்று பார்க்கலாம்.

நான் சவாலுக்கெல்லாம் அழைக்கவில்லை. சவாலுக்கு அழைக்கக்கூடிய அளவிற்கு நீங்கள் தகுதி பெற்றவர்களா?

எட்டு வழிச் சாலை விவகாரத்தில் திமுக என்ன சொன்னது? சாலை தேவைதான். ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு சாலையை அபிவிருத்தி செய்தல் அவசியம் தான். ஆனால் அதே நேரத்தில் விவசாயிகள் பாதிக்கப்பட முடியாத நிலையில் அவர்களிடத்தில் கலந்து பேசி, அவர்களை சுமுகமான ஒரு சூழ்நிலைக்கு கொண்டு வந்து அல்லது ஒரு மாற்றுப் பாதையை தேடிக் கண்டுபிடித்து அதன்மூலமாக நிறைவேற்றிட வேண்டும் என்று சொல்லி இருக்கின்றோம். ஆனால் அதைப்பற்றி எல்லாம் அவர்கள் கவலைப்படவில்லை.

உங்கள் அமைச்சரவையில் பல கோமாளிகள் இருக்கின்றார்கள். அதில் ஒரு நல்ல கோமாளி பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. பல கோமாளிகள் அதில் திண்டுக்கல் சீனிவாசன் பற்றி சொல்லவேண்டிய அவசியமில்லை.

தமிழ்நாட்டை பொறுத்தவரையில் தேர்தல் ஐஏஎஸ் அதிகாரி சத்திய பிரதா சாஹூ, நீங்கள் இருக்கின்றீர்களா அல்லது இல்லாமல் அந்த பொறுப்பை ஆட்சியிடம் ஒப்படைத்து விட்டு அமைதியாக உட்கார்ந்து இருக்கின்றீர்களா? இப்படியே இருந்தால் திமுக ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு நீங்கள் ஐஏஎஸ் ஆக எங்காவது பணியாற்ற வேண்டும் அது உங்களுக்கு நினைப்பில் இல்லையா ஞாபகம் இல்லையா?

நான் கேட்கின்றேன். நான் மிரட்டவில்லை, அச்சுறுத்தவில்லை. ஜனநாயகத்தின்படி நடந்துகொள்ளுங்கள். ஜனநாயகத்தின் படி நடக்கவில்லை என்று சொன்னால் நாங்கள் பொறுப்பிற்கு வந்ததற்குப் பிறகு ஜனநாயகத்தை நாங்கள் காப்பாற்ற வேண்டுமா? வேண்டாமா? அதிமுகவின் ஏஜென்டுகளாக செயல்பட துவங்கிவிட்டீர்களா?

அந்த சந்தேகம் தான் இப்பொழுது எங்களுக்கு வந்திருக்கின்றது. யார் உங்களை ஆட்டி வைக்கிறார்கள்? பிரதமரா? இங்கு இருக்கக்கூடிய முதல்வர் எடப்பாடி பழனிசாமியா?"

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x