

எல்லா இடங்கிலும் மோடிக்கு எதிர்ப்பு அலை வீசுகிறது என்று நடிகர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
அரக்கோணம் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகனை ஆதரித்து, காட்பாடியில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசும்போது, ‘‘தமிழகம் முழுவதும் வரும் 18-ம் தேதி மோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று மக்கள் முடிவு செய்துவிட்டனர்.
எல்லா இடங்களிலும் மோடிக்கு எதிர்ப்பு அலை வீசுகிறது. திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ஆதரவு அலை வீசுகிறது. திமுக தனது தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு ரத்து, விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்டவற்றை குறிப்பிட்டுள்ளது. கருணாநிதி சொல்வதைத்தான் செய்வார். செய்வதைத்தான் சொல்வார். அவர் வழியில் வந்த ஸ்டாலின் சொல்வதைத்தான் செய்வார்.
மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் ஏழை குடும்பங்களுக்கு ரூ.72 ஆயிரம் வழங்கப்படும் என ராகுல் கூறியுள்ளார். இப்படிப்பட்ட தேர்தல் அறிக்கையைத்தான் கதாநாயகன் என்று சொல்லி வருகின்றனர். எனவே, கதாநாயகனுக்கு வில்லனாக மோடி இருக்கிறார். அவரது அடியாட்களாக இபிஎஸ், ஓபிஎஸ் இருக்கின்றனர்.
அவர்கள் இரண்டு பேரையும் விரட்ட வேண்டும். இரண்டு ஆண்டுகளாக என்ன செய்தீர்கள் என்று கேட்டால், ‘25 ஆயிரம் போராட்டங்களை பார்த்துள்ளேன். எந்த ஆட்சியிலும் இதுபோன்ற போராட்டங்கள் நடந்ததில்லை. என்னுடைய ஆட்சியில்தான் நடந்துள்ளது’ என்கிறார். இதெல்லாம் சாதனையா? மக்களுக்கு பிரச்சினை என்றால் போராட்டம் நடத்துவார்கள். இதுகூட தெரியாத முதலமைச்சராக இருக்கிறார்.
நீங்கள் உதயசூரியனுக்கு வாக்களிப்பதன் மூலம் மோடியை மட்டும் வீட்டுக்கு அனுப்பப்போவது இல்லை. அவரது அடிமைகள் 2 பேரையும் வீட்டுக்கு அனுப்பப் போகிறீர்கள். அடுத்த மாதம் 19-ம் தேதி 4 சட்டப்பேரவைக்கு இடைத் தேர்தல்கள் நடைபெற உள்ளன.
இந்த 22 தொகுதிகளில் வெற்றிபெற்றால் ஜூன் 3-ம் தேதி கருணாநிதி பிறந்த நாளில் ஸ்டாலின் முதல்வர் நாற்காலியில் அமருவதற்கான வாய்ப்பு இருக்கிறது’’ என்றார்.