பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணை அறிக்கை: சீலிட்ட கவரில் உயர் நீதிமன்றத்தில் வழங்கியது சிபிசிஐடி போலீஸ்

பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணை அறிக்கை: சீலிட்ட கவரில் உயர் நீதிமன்றத்தில் வழங்கியது சிபிசிஐடி போலீஸ்
Updated on
2 min read

பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணை அறிக்கையை சீலிட்ட கவரில் உயர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸார் வழங்கினர். சிபிஐ வழக்குக்கு மாற்ற புதிய அரசாணை எதுவும் வரவில்லை என நீதிமன்றத்தில் சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து புதிய அரசாணையை உடனே அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு (27). அதே பகுதியைச் சேர்ந்த சபரிராஜன் (25), சதீஸ் (28), வசந்தகுமார் (24) ஆகியோருடன் சேர்ந்து சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி இளம் பெண்களை மடக்கி அவர்களைப் பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தி அதனை வீடியோவாக எடுத்துள்ளனர். அதைக் கொண்டு அந்தப் பெண்களை மிரட்டி மீண்டும் மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்ததுடன் அவர்களிடம் இருந்து பணம், நகை ஆகியவற்றை பறிப்பதைத் தொழிலாகச் செய்து வந்தனர்.

தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இளம்பெண்கள், கல்லூரி மாணவிகளின் வாழ்க்கையை சீரழித்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் மணிவண்ணன் என்பவரும் கைது செய்யப்பட்டார். குற்றவாளிகளைத் தப்பிக்க வைக்க போலீஸார் முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

நாளுக்கு நாள் மக்களின் கோபாவேசம் காரணமாக போலீஸ் விசாரணை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. ஆனாலும் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது. மாநிலம் முழுவதும் விசாரணை நியாயமாக நடக்க வேண்டும், மேலும் குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என கோரிக்கை வலுத்தது.

விசாரணை சிபிஐக்கு மாற்றி அரசு பரிந்துரைத்தது. சிபிஐ விசாரணையை ஏற்கும்வரை சிபிசிஐடி விசாரணை தொடரும் என கூறப்பட்டது. வழக்கு விசாரணையின்போது பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரைக் குறிப்பிட்ட போலீஸ் எஸ்பி மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டது.

அரசாணையிலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை குறிப்பிட்டுள்ளதால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் அரசாணையை மாற்றி புதி அரசாணை வெளியிட உத்தரவிடப்பட்டது. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து எஸ்பி மாற்றப்பட்டார்.

இந்நிலையில் சிபிஐ விசாரணைக்கான புதிய அரசாணை இதுவரை பிறப்பிக்காத நிலையில் சிபிசிஐடி போலீஸார் வழக்கு விசாரணையை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் வழக்கறிஞர் புகழேந்தி என்பவர் தொடர்ந்த பொது நலவழக்கில் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அரசாணையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரைக் குறிப்பிட்டுள்ளது இதுபோன்ற பாதிக்கப்படும் பெண்களை தங்கள் பாதிப்பை துணிந்து வெளியில் புகார் அளிக்க வருவதைத் தடுக்கும் செயல் என தெரிவித்து சிபிஐ விசாரணையை உயர் நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி வி.கே.தஹிலரமானி, நீதிபதி எம்.துரைசாமி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. சிபிசிஐடி போலீஸார் நடத்தியுள்ள விசாரணை குறித்த அறிக்கையை சீலிட்ட கவரில் தாக்கல் செய்தனர். சிபிஐ தரப்புக்கு வழக்கு மாற்றப்பட்டதற்கான புதிய அரசாணை தங்களுக்கு இதுவரை வரவில்லை என தெரிவித்தனர்.  

பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் விவரங்கள் நீக்கப்பட்டு புதிய அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது சிபிஐ தரப்பில், புதிய அரசாணை தங்களுக்கு இதுவரை வந்து சேரவில்லை என்றும், தற்போதைய நிலையில் வழக்கில் விளக்கமளிப்பது ஏற்புடையதாக இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை ஏப்ரல் 25-ம் தேதி ஒத்திவைத்த தலைமை நீதிபதி அமர்வு, புதிய அரசாணை நகலை மனுதாரர் புகழேந்தி தரப்புக்கு வழங்க அரசுக்கு அறிவுறுத்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in