நெற்றி நிறைய விபூதியுடன் வாக்கு சேகரித்த திருமாவளவன்: கார்ட்டூன் மூலம் கிண்டல் செய்யும் பாஜக

நெற்றி நிறைய விபூதியுடன் வாக்கு சேகரித்த திருமாவளவன்: கார்ட்டூன் மூலம் கிண்டல் செய்யும் பாஜக
Updated on
1 min read

நெற்றி நிறைய விபூதியுடன் வாக்கு சேகரித்த திருமாவளவனை, கார்ட்டூன் ஒன்றை வெளியிட்டு கிண்டல் செய்துள்ளது தமிழக பாஜக

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் கடந்த சில நாட்களாக தொகுதியில் முகாமிட்டு பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

அப்போது சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வந்த திருமாவளவனுக்கு கோயில் தீட்சிதர்கள் சால்வை அணிவித்து வரவேற்றனர். இதைத் தொடர்ந்து, அங்குள்ள கோவிந்தராஜப் பெருமாள் சன்னதியில் அவர் சுவாமி தரிசனம் செய்தார். பின்பு கோயில் நடைமுறைப்படி, சட்டையைக் கழற்றிவிட்டு சித்சபைக்கு சென்ற அவர், நடராஜரையும் தரிசனம் செய்தார். கோயில் வளாகத்தில் உள்ள பொது தீட்சிதர்கள் நிர்வாக அலுவலகத்தில் சிறிது நேரம் அமர்ந்த திருமாவளவன், அங்கிருந்த தீட்சிதர்களிடம் உரையாடி வாக்கு கேட்டார்.

இச்சம்பவத்தின் போது நெற்றி நிறைய விபூதியுடன் திருமாவளவன் இருந்தார். இப்புகைப்படங்கள் இணையத்தில் வெளியான போது, பெரும் கிண்டலுக்கு ஆளானது.

தற்போது, இப்புகைப்படங்களை முன்வைத்து தமிழக பாஜக ட்விட்டர் கணக்கில், "சனாதனத்தை ஒழிப்போம் - அன்று;  இந்துக்கள் ஓட்டு வேண்டும் - இன்று; யார் அவர்?" என்று ட்வீட் செய்து கார்ட்டூன் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், “அன்று: சனாதனத்தை ஒழிக்க நாட்டில் உள்ள அனைத்து இந்து கோவில்களையும் இடித்து அகற்ற வேண்டும்

இன்று: ஐயா இந்துக்களே! உங்க ஓட்ட எனக்கு போட்டு என்ன காப்பாத்துங்க. ஐயா காப்பாத்துங்க” என்று வடிவமைக்கப்பட்டு திருமாவளவனை கிண்டல் செய்யும் தொனியில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in