Published : 14 Apr 2019 04:02 PM
Last Updated : 14 Apr 2019 04:02 PM

ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவருமா இடைத்தேர்தல்?ஆட்சி தொடர எத்தனை எம்.எல்.ஏக்கள் தேவை?- யதார்த்த நிலவரம்

மக்களவைத் தேர்தலைவிட சட்டப்பேரவை இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான அதிமுக அதிக கவனம் செலுத்தி வருகிறது.

சவாலாக உள்ள இடைத்தேர்தல்:

17-வது நாடாளுமன்றத் தேர்தல் மத்திய அரசுக்கு ஒரு தேர்வாக உள்ள நிலையில் தமிழகத்தில் திமுக-அதிமுகவுக்கு 22 தொகுதி இடைத்தேர்தல் ஒரு சவாலாக உள்ளது என்பதே உண்மை.

அடைந்தால் மகாதேவி:

‘அடைந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி’ என்பதுபோல் ‘வென்றால் ஆட்சி நீட்டிப்பு வெல்லாவிட்டால் ஆட்சிப் பறிகொடுப்பு’ என்கிற நிலையில் அதிமுகவும், ‘வென்றால் அதிமுகவை வீட்டுக்கு அனுப்புவது கூடுதலாக வென்றால் ஆட்சியை அமைப்பது’ என்கிற நிலையில் திமுகவும் உள்ளது.

வென்றால் மதிப்பு:

டிடிவி தினகரனின் அமமுக ‘வென்றால் வாய்ப்பு, வெல்லாவிட்டாலும் அதிமுகவுக்கு ஆப்பு’ என்கிற ரீதியில் அதிமுக வெல்லக்கூடாது, பலத்த சேதத்தை உண்டுபண்ண வேண்டும் என்கிற ரீதியில் செயல்படுகிறது. இந்த இடைத்தேர்தலில் கணிசமான இடங்களை வென்றாலோ, அல்லது கணிசமான வாக்குகளைப் பெற்றாலோ டிடிவி தினகரன் அணி அங்கீகரிக்கப்படும்.

ஆகவே 3 அணிகளுக்கும் இது வாழ்வா சாவா போராட்டம் என்றால் மிகையல்ல. அதைவிட சேதாரம் அதிகம் இருக்கும் அதிமுகவுக்குத்தான் மிகக்கடுமையான போராட்டமாக இந்த இடைத்தேர்தல் உள்ளது.

இளம் வாக்காளர்களை நம்பும் கமல், சீமான்:

கமலின் மக்கள் நீதி மய்யமும்,  சீமானின் நாம் தமிழர் கட்சியும் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறது.

இவர்களின் இரு அணியும் அதிக அளவில் உள்ள இளம் வாக்காளர்களையும், மாறி மாறி திராவிடக் கட்சிகளுக்கு வாக்களித்து என்னத்த கண்டோம் என்று நினைக்கும் வாக்காளர்களையும் குறிவைத்துப் போட்டியிடுகின்றனர்.

கொள்கை அல்ல வெல்வது ஒன்றே குறிக்கோள்:

அதிமுக எப்படியும் வெல்ல வேண்டும் என்கிற முனைப்பில் பாமக, தேமுதிக, பாஜக என அணியாக இணைத்துப் போட்டியிடுகிறது. 22 தொகுதிகளில் பெரம்பூர், பூந்தமல்லி, திருப்போரூர், சோளிங்கர், ஆம்பூர், குடியாத்தம், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் உள்ளிட்ட தொகுதிகளில் தம்முடைய ஆதரவைப் பெருக்கவே பாமக, தேமுதிகவுடன் கூட்டணி அமைத்துள்ளார்கள் என்றால் மிகையல்ல.

எவ்வளவு தொகுதிகள் அதிமுகவுக்கு வேண்டும். அல்லது ஆட்சியைத் தொடர அதிமுகவுக்கு எத்தனை எம்.எல்.ஏக்கள் உள்ளனர் என்கிற யதார்த்த நிலையையும் கணக்கில் எடுக்க வேண்டும். அப்படிப் பார்த்தால் தற்போது உள்ள நிலையை கணக்கில் கொள்ளவேண்டும்.

தற்போதுள்ள யதார்த்த நிலை என்ன?

அதிமுக கடந்த 2016-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் 136 இடங்களை வென்றது. திமுக கூட்டணியில் திமுக 89 இடங்களிலும், காங்கிரஸ் 8 இடங்களிலும், முஸ்லீம் லீக் ஒரு இடம் என 98 இடங்களில் வென்றது.

இதில் ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுக 135 ஆக குறைந்தது. அந்தத் தொகுதி அமமுக வசம் சென்றது. அதன் பின்னர் 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் காரணமாக அதிமுகவின் பலம் 117 ஆக குறைந்தது. திருப்பரங்குன்றம், சூலூர் எம்.எல்.ஏ மறைவு, ஓசூர் பாலகிருஷ்ண ரெட்டி தகுதியிழப்பு காரணமாக 114 ஆக குறைந்துள்ளது.

யாருக்கு எவ்வளவு தொகுதிகள்:

திமுக திருவாரூர் தொகுதி குறைந்தது காரணமாக 88 ஆக குறைந்து கூட்டணி எண்ணிக்கை 97 ஆக உள்ளது. மொத்தம் உள்ள தொகுதிகளைக் கூட்டினால் 97+114+1= 212 தொகுதிகள். 22 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்க உள்ளது.

தற்போதுள்ள 212 தொகுதிகளில் 107 எம்.எல்.ஏக்கள் இருந்தாலே ஆட்சியைத் தொடரலாம். அதிமுக வசம் 113 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். சட்டப்பேரவை தலைவர் தனி. 22 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்தால் 234 தொகுதிகளுக்கும் எம்.எல்.ஏக்கள் இருப்பார்கள். அப்படி இருந்தால் ஆட்சி தொடர 118 எம்.எல்.ஏக்கள் தேவை.

அதாவது தற்போது அதிமுக 114 தொகுதிகள் வைத்திருப்பதால் கூடுதலாக 4 தொகுதிகள் வெல்ல வேண்டும் என்பதே அனைவரின் கணக்காக உள்ளது. ஆனால் யதார்த்தம் அதுவாக இல்லை.  

அதிமுகவில் உள்ள ஸ்லீப்பர் செல்கள்:

அதிமுகவில் அமமுக ஆதரவாளர்கள் அறந்தாங்கி, விருத்தாசலம், கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏக்கள் 3 பேர் உள்ளனர். அவர்கள் அமமுகவுக்கு பகிரங்க ஆதரவை அளித்துள்ளனர். ஆனாலும், அவர்களை நீக்கினால் தாராளமாக எம்.எல்.ஏ பதவியை இழக்காமல் அமமுகவில் தொடருவார்கள் என்பதால் நீக்காமல் தொடர அனுமதித்துள்ளது அதிமுக.

கருணாஸ், தமீமுன் அன்சாரி, தனியரசு நிலை:

இதனால் அதிமுகவின் உண்மையான பலம் 111. இதுதவிர அதிமுக ஆதரவில் வென்ற தனியரசு, கருணாஸ், தமீமுன் அன்சாரி ஆகியோர் மாற்றுக் கருத்துடன் உள்ளதால் அவர்களும் அதிமுகவிற்கு ஆதரவு அளிப்பார்கள் என்பது உறுதியில்லை. அதனால் அதிமுகவின் பலம் 111-3= 108 ஆக உள்ளது என்பதே நடைமுறை உண்மை. இதில் சட்டப்பேரவை தலைவரைச் சேர்க்காவிட்டால் 107.

ஆகவே 22 தொகுதி இடைத்தேர்தல் நடந்து முடிந்து 234 தொகுதிகளுக்கும் எம்.எல்.ஏக்கள் உள்ள நிலையில் அதிமுக ஆட்சி தொடர மேற்கண்ட யதார்த்த அடிப்படையில் 118 எம்.எல்.ஏக்கள் தேவை என்கிற அடிப்படையில் 11 எம்.எல்.ஏக்கள் தேவை.

எவ்வளவு தொகுதிகள் வென்றாகவேண்டும்?

சட்டப்பேரவை தலைவர் மெஜாரிட்டி இல்லாவிட்டால் வாக்களிக்கலாம் என்கிற விதிப்படி அவரைச் சேர்த்துக்கொண்டால் அதிமுகவுக்கு 10 எம்.எல்.ஏக்கள் கட்டாயம் தேவைப்படுகின்றனர். காரணம் நம்பிக்கை கோரும் தீர்மானம் வந்தால் மேற்கண்ட 6 பேரும் மாறுபட்ட நிலைப்பாடு எடுக்க வாய்ப்புள்ளது என்பதால் கட்டாயம் 10 எம்.எல்.ஏக்களை வென்றாக வேண்டும்.

இதில் இன்னொரு பிரச்சினையும் உள்ளது. அவ்வாறு நம்பிக்கை கோரும் தீர்மானத்தின்போது அதிமுகவுக்குள் ஸ்லீப்பர் செல் எதுவும் இல்லாமல் இருக்கவேண்டும். அது அடுத்த பிரச்சினை என வைத்துக்கொண்டால் தற்போதுள்ள யதார்த்த நிலைப்படி 10 தொகுதிகளை நிச்சயம் வென்றால் மட்டுமே ஆட்சி தொடரும்.

திமுக ஆட்சியைப் பிடிக்குமா?

மறுபுறம் திமுக கூட்டணியில் தற்போது 97 பேர் உள்ளனர். ஒருவேளை 22 தொகுதிகளில் 21 தொகுதிகளை திமுக வென்றால் ஆட்சியையே பிடிக்கலாம். அது எந்த அளவுக்கு நடைமுறைச் சாத்தியம் என்பது தேர்தல் முடிவுகள்தான் தீர்மானிக்கும்.

தினகரன் முன் உள்ள சிக்கல்:

அதிமுகவுக்கு இன்னொரு சாதகமான நிலை உள்ளது. தினகரன் அணியில் வெல்பவர்கள் சுயேச்சைகளாக கருதப்படுவார்கள் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவு காரணமாக அந்த அணியில் வெல்லும் எம்.எல்.ஏக்கள் அதிமுகவுக்குத் தாராளமாக வாக்களிக்கலாம் என்பதால் அவர்கள் வாக்களித்தால் எம்.எல்.ஏ பதவி பறிபோகாது.

கருணாஸ், தனியரசு, தமீமுன் அன்சாரி, மூன்று அமமுக ஆதரவு எம்.எல்.ஏக்கள் மாற்றி வாக்களித்தால் அவர்கள் பதவி பறிபோகுமே என்று வாதம் வைக்கலாம். ஆட்சியே கவிழும் என்கிற நிலையில் பதவி பறிபோவதைப் பற்றி அவர்கள் கவலைப்படுவார்களா? என்பதும் கவனிக்கவேண்டிய விஷயம்.

மலர் பாதை அல்ல முள்பாதை:

கத்தி மேல் நடப்பதுபோன்று அதிமுகவிற்கு இந்த இடைத்தேர்தல் உண்மையிலேயே கடும் சோதனையான ஒன்றுதான். தற்போது போட்டியிடும் 22 தொகுதிகளில் 10 தொகுதிகளைக் கட்டாயம் வென்றாக வேண்டும். அப்படி வென்றால் மட்டுமே 2021 வரை ஆட்சி தொடரும்.

நாடாளுமன்றம் அல்ல இடைத்தேர்தலே குறி:

இத்தகைய இக்கட்டான சூழ்நிலைஉள்ளதால் நாடாளுமன்றத் தேர்தலை விட சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக முக்கிய கவனத்தைச் செலுத்துகிறது.

தொகுதியில் மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள் சட்டப்பேரவை இடைத்தேர்தலை கவனிக்க உத்தரவிடப்பட்டுள்ளதால் சட்டப்பேரவை தொகுதிகளில் பிரச்சாரம் மற்ற விவகாரங்கள் சூடுபிடித்துள்ளன. இதே நிலையில் உள்ள திமுகவும் அமமுகவும் ஆளுங்கட்சிக்கு வேண்டிய தொகுதிகளைப் பெறவிடாமல் தடுக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகின்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x