Last Updated : 11 Apr, 2019 12:00 AM

 

Published : 11 Apr 2019 12:00 AM
Last Updated : 11 Apr 2019 12:00 AM

தகுதி இழப்பு, கை நழுவிய சின்னம், பாலியல் வழக்கு: தொடர் பிரச்சினைகளால் தடுமாறும் அமமுக வேட்பாளர்

தகுதி இழப்பு, கை நழுவிய சின்னம் என பல்வேறு சிரமங்களை எதிர் கொண்ட நிலையில் தற்போது பாலியல் வழக்குப்பதிவு அமமுக வேட்பாளருக்கு மேலும் சிக்கலை உருவாக்கி உள்ளது. பெரியகுளம் சட்டப்பேரவைத் தொகுதி அமமுக வேட்பாளர் கே. கதிர்காமு மீதான பாலியல் குற்றச் சாட்டு பிரச்சாரக் களத்தை மேலும் பரபரப்பாக்கி உள்ளது.

பெரியகுளம் சரத்துப்பட்டியைச் சேர்ந்த பெண், தேனி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், வேட்பாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கதிர்காமு பெரியகுளம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக கடந்த முறை போட்டியிட்டு வெற்றி பெற்றவர். அதிருப்தி காரணமாக டிடிவி. தினகரன் அணியில் சேர்ந்ததால் தகுதி நீக்கம் செய்யப் பட்டார். மீண்டும் இதே தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிடுகிறார். பாலியல் வழக்கு பின்னணியில் அதிமுகதான் உள்ளதாக அவர் செய்தியாளர் களிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், 4 ஆண்டுகளுக்கு முன்பு என் மீதான ஆதாரமற்ற குற்றச்சாட்டை தூசி தட்டி எடுத்து, தற்போது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதை சட்டப்படி எதிர்கொள்வேன் என்றார்.

இதனைத் தொடர்ந்து முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளை யில் கதிர்காமு நேற்று மனு தாக்கல் செய்தார். இதுகுறித்து அமமுகவினர் கூறியதாவது: அதிமுக இரண்டு அணிகளாக தற்போது களமிறங்குவதால் வாக்குகள் பிரியும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இதனால் அதிமுக எங்கள் மீது கோபமாக உள்ளது. வாக்காளர்களைக் குழப் பவும், பிரச்சாரத்தை முடக்கவும் இது போன்ற செயலில் ஈடுபட்டுள் ளனர். துடிப்புடன் களப்பணி ஆற்றுவோம் என்றனர்.அதிமுக தரப்பில் கேட்டபோது, அமமுக எங்களுக்குப் போட்டியே அல்ல. களப்பணியும், பிரச்சாரமும் மும்முரமாக நடக்கிறது. தேவையற்ற குற்றச்சாட்டுகளை எங்கள் மீது கூறி வருகின்றனர் என்றனர்.

இந்நிலையில், வேட்பாளர் மீதான முதல் தகவல்அறிக்கை விவரங்கள் சமூக வலைத் தளங்களில் வெளியாகி உள்ளன. அதில் சம்பந்தப்பட்ட பெண், தன்னை வேட்பாளர் கதிர்காமு பாலியல் பலாத்காரம் செய்து அதை கேமராவிலும் பதிவு செய்து மிரட்டுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தேனி தொகுதியின் அரசியல்களம் மேலும் சூடுபிடித் துள்ளது. வழக்குப் பதிவு செய்யப் பட்டதால் கைது நடவடிக்கை இருக் கலாம். முன்ஜாமீன் கிடைக்காவிட்டால், பிரச்சாரத்தில் தடை ஏற்படும். மக்களிடம் அதிருப்தி ஏற்படலாம் என்பது உள்ளிட்ட பல பிரச்சினைகள் அமமுகவுக்கு ஏற்பட்டுள்ளது. பிரச்சாரத்தில் இதுவரை நேரடியாக களம் கண்டு வந்த கட்சிகள், தற்போது உள்ளடி வேலைகளையும் தொடங்கி உள்ளன. அமமுகவும் சில ரகசியங்களை வெளியிடுவோம் என்று தெரிவித்து வருவதால் தேனி மக்களவைத் தேர்தலில் அதிகபட்ச பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x