

தமிழகத்தில் பிரச்சாரத்துக்கு 8 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், அங்கும் இங்குமாக ஒருசில சினிமா நட்சத்திரங்கள் தற்போது பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.
தேர்தல் பிரச்சாரத்தில் சினிமா நடிகர், நடிகைகளின் பங்களிப்பு தவிர்க்க முடியாததாகி, பல ஆண்டுகள் ஆகின்றன. திமுகவை அண்ணா தொடங்கியபோது, அக்கட்சியில் சேர்ந்த எம்ஜிஆர் அதன் நட்சத்திரப் பேச்சாளராக இருந்தார். அவரைப் பார்க்கவே ஆயிரக்கணக்கில் மக்கள் கூட்டம் கூடியது.
1971 சட்டப்பேரவைத் தேர்தலில் எம்ஜிஆர் பிரச்சாரம் செய்தபோது, மொத்தம் உள்ள 234 இடங்களில் திமுக 184 இடங்களைப் பிடித்து அமோக வெற்றி பெற்றது சாதனையாகக் கூறப்படுகிறது.
பின்னர் திமுக தலைவர் கருணாநிதியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, எம்ஜிஆர் ‘அதிமுக’ என்ற தனிக்கட்சியைத் தொடங்கி, ஆட்சியைப் பிடித்தார். அக்கட்சியில் நடிகை ஜெயலலிதா இணைந்தார். அப்போது நடந்த தேர்தலில்ஜெயலலிதாவின் பேச்சு, கட்சியினரை வெகுவாகக் கவர்ந்தது. பின்னாளில் ஜெயலலிதா முதல்வரானார். அவர்களது ஆட்சிக் காலங்களில் திரை நட்சத்திரங்கள் பலரும் ஆர்வத்துடன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். திமுகவுக்கும் சினிமா நட்சத்திரங்கள் பிரச்சாரம் செய்தது உண்டு.
பிரச்சாரம் முடிய இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில், இப்போதுதான் அங்கும் இங்குமாக சில சினிமா பிரபலங்கள் பிரச்சாரக் களத்தில் இறங்கியுள்ளனர்.
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன்தனது கட்சி வேட்பாளர்களுக்காக தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரம்செய்து வருகிறார். திமுக வேட்பாளர்களை ஆதரித்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் ஆரம்பம் முதலே தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
நடிகரும், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் அக்கட்சி வேட்பாளர்களுக்காக விறுவிறுப்பாக வாக்கு கேட்டு வருகிறார். தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்த சமக தலைவர் சரத்குமார், பின்னர் அந்த முடிவை மாற்றிக்கொண்டு, அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாகக் கூறியதுடன், தற்போது அக்கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார்.
இந்நிலையில், மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து நடிகை ரோஹிணி பிரச்சாரம் செய்தார். தேனி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளரான நடிகை குஷ்பு உசிலம்பட்டி பகுதியில் வாக்கு கேட்டார்.
கஞ்சா கருப்பு, ஆர்.சுந்தர்ராஜன், அஜய் ரத்னம்,ரவி மரியா ஆகியோரும் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கின்றனர். நடிகர்கள் செந்தில், பப்லு ஆகியோர் அமமுக வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்கின்றனர்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் நட்சத்திர பேச்சாளர்களில் ஸ்ரீபிரியா மட்டும் பிரச்சாரம் செய்து வருகிறார். கோவை சரளா, நாசர், வையாபுரி ஆகியோரும் விரைவில் களம் இறங்குவார்கள் என்று தெரிகிறது.