பெரியகுளம் அமமுக வேட்பாளர் கதிர்காமு மீது பாலியல் புகார்: போலீஸ் வழக்குப்பதிவு

பெரியகுளம் அமமுக வேட்பாளர் கதிர்காமு மீது பாலியல் புகார்: போலீஸ் வழக்குப்பதிவு
Updated on
1 min read

பெரியகுளம் அமமுக வேட்பாளர் கதிர்காமு மீது பெண் ஒருவர் அளித்த புகாரின்பேரில் போலீஸார் பாலியல் வன்கொடுமை கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

பெரியகுளம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக 2016-ம் ஆண்டு போட்டியிட்டு தேர்வு செய்யப்பட்டவர் டாக்டர். கதிர்காமு. இவர் அதிமுக அணிகள் பிரிந்தபோது டிடிவி தினகரன் அணிக்கு தாவினார். தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களில் இவரும் ஒருவர்.

பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் அமமுக வேட்பாளராக தற்போது போட்டியிடுகிறார். இவர் மீது பாலியல் புகார் உள்ளதாக கடந்த சில நாட்களாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 5-ம் தேதி தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் டாக்டர் கதிர்காமு மீது பெரியகுளத்தைச் சேர்ந்த 36 வயது திருமணமான பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 14-ம் தேதி  பெரியகுளத்தில் உள்ள கதிர்காமு மருத்துவமனையில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து பின்னர் வீடியோ படம் எடுத்து அதை வைத்து தன்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக அப்பெண் புகார் அளித்துள்ளதாக போலீஸ் தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.  

அப்பெண்ணின் புகாரின்பேரில் டாக்டர் கதிர்காமு மீது ஐபிசி 417 (ஏமாற்றுதல்), 376 (பாலியல் பலாத்காரம்), 506(1) கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேற்கண்ட பிரிவுகள் ஜாமீனில் வெளிவரமுடியாத பிரிவுகள் என்பதால் கதிர்காமு கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதற்கிடையே கதிர்காமு சம்பந்தப்பட்ட காணொலியும் வெலியாகியுள்ளதாக கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in