

நடக்கவுள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் டிடிவி தலைமையிலான அமமுகவிற்கு பரிசுப்பெட்டி சின்னத்தை ஒதுக்கியுள்ளது தேர்தல் ஆணையம்.
பொதுத்தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் அமமுக அணிக்கு டிடிவி தினகரன் தலைமையிலான அணி வேட்பாளர்கள் 59 பேருக்கும் பொதுவான சின்னம் ஒதுக்கீடு செய்யவேண்டும் என ஏற்கெனவே உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அந்த அடிப்படையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தல், பாண்டிச்சேரியில் 2 தொகுதிகளுக்கும் பரிசுப்பெட்டி சின்னம் தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கப்பட்டது.
தற்போது இதுகுறித்து டிடிவி அணி சார்பில், நடக்கவுள்ள அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்கின்றம் ஆகிய நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் அதே சின்னத்தை ஒதுக்க கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் இன்று மாலை டிடிவி அணிக்கு பரிசுப்பெட்டகம் சின்னத்தை வழங்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இதுகுறித்து டிடிவி தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஏற்கெனவே பொதுத்தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் தலைமையிலான அணி வேட்பாளர்கள் 59 பேருக்கும் பொதுவான சின்னம் ஒதுக்கீடு செய்யவேண்டும் என ஏற்கெனவே உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதேபோன்று தற்போது நடைபெற உள்ள அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்கின்றம் ஆகிய நான்கு தொகுதிகளுக்கும் ஏற்கெனவே உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட அடிப்படையில் பரிசுப்பெட்டிச் சின்னம் வழங்கவேண்டும் என டிடிவி தினகரன் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் மூலம் வேண்டுகோள் வைத்திருந்தார்.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்தவேண்டும் என்கிற நோக்கத்துடன் தேர்தல் ஆணையம் மேற்சொன்ன 4 தொகுதிகளில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்களுக்கு ஒரே சின்னமான பரிசுப்பெட்டி சின்னத்தை ஒதுக்குவதாக அறிவித்துள்ளது அதை வரவேற்கிறோம்” இவ்வாறு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்தார்.