தைரியம் இருந்தால் என் மீது வழக்குப் போடுங்கள்; முதல்வர் பழனிசாமிக்கு ஸ்டாலின் சவால்

தைரியம் இருந்தால் என் மீது வழக்குப் போடுங்கள்; முதல்வர் பழனிசாமிக்கு ஸ்டாலின் சவால்
Updated on
1 min read

அண்ணா நகர் ரமேஷ் தற்கொலை விவகாரத்தில், வழக்குப் போட தயாரா என, முதல்வர் பழனிசாமிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று கோவையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அதன் விவரம்:

"தூத்துக்குடி பிரச்சாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்னை மையப்படுத்தி பேசியிருக்கின்றார். காரணம் அவருடைய கோடநாட்டு விவகாரத்தை நான் சொல்கின்றேன்.

பொள்ளாச்சி விஷயத்தை வெளிப்படையாக மக்களிடத்தில் பிரச்சாரம் செய்கின்றோம். அந்த ஆத்திரம் தாங்க முடியாமல், என் மீது பல வழக்குகள் இருக்கின்றது. அண்ணா நகர் ரமேஷ் என்ற என்னுடைய நண்பர் ஒருவர் இருந்தார். அவர் 2001-ல் தன்னுடைய குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்டார்.

அந்த நேரத்தில் இதைப்பற்றி ஜெயலலிதா சட்டப்பேரவையில், எதிர்க்கட்சியாக இருந்தபொழுது கேட்டார். நான் உடனடியாக எழுந்து என் மீது எந்தக் குற்றமும் கிடையாது. வேண்டுமென்றால் எந்த விசாரணையும் வையுங்கள். அதை சந்திக்க தயார் என்று அன்றைக்கே நான் சொன்னேன்.

இப்பொழுது முதல்வர் பழனிசாமி பிரச்சாரத்தில் அந்த விவகாரத்தை எடுப்பேன் உள்ளே தள்ளுவேன் என்கின்றீர்கள். 2011-ல் அதிமுக ஆட்சி தான். அவர் மறைந்து விட்ட காரணத்தினால் இப்பொழுது எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இருக்கின்றார். 2011-ல் இருந்து 8 வருடமாக அதிமுக தான் ஆட்சியில் இருக்கிறது. நான் தவறு செய்திருந்தால் அப்பொழுது ஏன் என் மீது நடவடிக்கை எடுக்கவில்லை?

நான் இப்போதும் சொல்கின்றேன். ஆட்சி கையில் இருக்கின்ற முதல்வர் பழனிசாமிக்கு தைரியம் இருந்தால் என் மீது வழக்குப் போடட்டும். எந்த நீதிமன்றத்திற்கு வர வேண்டும்? வருவதற்கு நான் தயார். நான் பனங்காட்டு நரி எந்த சலசலப்புக்கும் திமுக அஞ்சிடாது. செய்வதெல்லாம் செய்துவிட்டு ஒரு கொலையை செய்துவிட்டு கொள்ளை அடித்துவிட்டு இன்றைக்கு முதல்வர் பழனிசாமி மக்களிடத்தில் வந்து ஓட்டு கேட்கின்றார். மக்கள் தெளிவாக இருக்கின்றனர். ஒரு நல்ல முடிவை எடுப்பதற்கு காத்திருக்கின்றனர்"

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in