Published : 02 Apr 2019 05:59 PM
Last Updated : 02 Apr 2019 05:59 PM

உளவுத்துறை உதவியுடன் பணம் வைத்து எதிர்க்கட்சி வேட்பாளர்களை சிக்க வைக்க சதி: ஆளுங்கட்சி மீது டிடிவி தினகரன் காட்டம்

உளவுத்துறை உதவியுடன் பணம் வைத்து எதிர்க்கட்சி வேட்பாளர்களை சிக்க வைக்க சதி நடக்கிறது. இதன் மூலம் தேர்தலை நிறுத்த ஆளுங்கட்சி முயற்சி செய்வதாக அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

நீலகிரி மக்களவைத் தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிடும் எம்.ராமசாமியை ஆதரித்து உதகையில் அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று (செவ்வாய்க்கிழமை) பிரச்சாரம் செய்தார்.

உதகையில் உள்ள ஏடிசி பகுதியில் திறந்தவெளி வாகனத்தில் இருந்து பிரச்சாரம் மேற்கொண்ட அவர், "தமிழகத்தில் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்துள்ளனர். இந்த இடைத் தேர்தலில் அந்தத் தொகுதிகளில் அதிமுக படுதோல்வியைச் சந்திக்கும். இதன் மூலம் இந்த ஆட்சி முடிவுக்கு வரும்.

நாங்கள் வெற்றி பெற்றால், உதகை - மைசூர் சாலையில் இரவு நேரப் போக்குவரத்து அனுமதிக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் பசுந்தேயிலைக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பல்நோக்கு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும். செக்‌ஷன் 17 நிலங்களில் வாழும் மக்களின் பிரச்சினை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்" என தினகரன் கூறினார்.

தொடர்ந்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ''எதிர்க்கட்சிகளை மிரட்டுவதற்காக மத்திய, மாநில அரசுகள் வருமான வரித்துறை அதிகாரிகளைக் கொண்டு ரெய்டு நடத்தி மிரட்டி வருகின்றனர். ஆளுங்கட்சியினர் அனைத்து தொகுதியிலும் பணம் கொடுத்து வெற்றி பெற்றுவிடலாம் என நினைக்கின்றனர். இதற்கு உதாரணம் ஆர்.கே.நகர் தொகுதியே. அங்கு ஓட்டுக்கு ரூ.6 ஆயிரம் கொடுத்தனர். ஆனால், அங்கு தோல்வியடைந்தனர். ஆர்.கே.நகர் போன்று இந்தத் தேர்தலிலும் மக்கள் அவர்களுக்கு பாடம் புகட்டுவார்கள்.

தற்போது வருமான வரித்துறை ரெய்டு மட்டுமின்றி, மற்ற வேட்பாளர்கள் வீட்டில் உளவுத்துறை உதவுயுடன் இவர்களே பணம் வைத்துவிட்டு ரெய்டு நடத்தச் சொல்வார்கள். முதல்வர் மற்றும் அவரது பினாமி வீட்டில் பணம் உள்ளது. இந்தத் தகவலை நாம் கொடுத்தால் தேர்தல் ஆணையம் மற்றும் வரிமான வரித்துறை என்ன சோதனை நடத்தப் போகிறதா? எதிர்க்கட்சிகளை மிரட்டவே இந்தச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எடப்பாடி பழனிசாமி, தங்கமணி, வேலுமணி ஏராளமான பணம் விநியோகம் செய்து வருகின்றனர். எங்கள் கட்சி வேட்பாளர்களை டார்கெட் வைத்து உளவு பார்த்து வருகின்றனர். மதுரை ஆதினம் யார் தூண்டுதலில் என்னைப் பற்றி பேசுகிறார் என்பது தெரியவில்லை. மக்களையும், தொண்டர்களையும் குழப்புவதற்காக அப்படி பேசி வருகிறார். தொடர்ந்து, இதுபோன்று பேசினால் அவர் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும்.

ராகுல் காந்தி கேரளாவில் போட்டியிடுவது அவரது விருப்பம். இந்தத் தேர்தலில் இந்தியாவில் உள்ள தேசியக் கட்சிகளுக்கு பெரும்பான்மை கிடைக்கப் போவதில்லை. மோடி மற்றும் அமித் ஷா மீது எதிர்ப்பு அலையே வீசுகிறது. நீட் தேர்வை தமிழகத்தில் வர விடாமல் ஜெயலலிதா தடுத்தார். ஆனால், அதனை மீறி அவர்கள் நீட் தேர்வு கொண்டு வந்துள்ளனர். இதனால், மக்கள் அவர்கள் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.

மீத்தேன், ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்கள், தமிழகத்தில் விவசாயத்தை அழித்தது. காவிரியில் அணை கட்டுவதற்கும், தமிழகத்தை சோமாலியா போன்று ஆக்க வேண்டும் என பாஜக நினைத்துள்ளது. மேலும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய 13 பேரை சுட்டுக் கொன்றனர். அதற்கு தமிழக முதல்வர் இரங்கல் கூட தெரிவிக்கவில்லை. இதனால், பாஜக, மற்றும் அதிமுக இந்தத் தேர்தலில் படுதோல்வியைச் சந்திக்கும். தற்போது ஜெயலலிதாவைப் பற்றி தரக்குறைவாகப் பேசியவர்களுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளது.

எனவே, இந்தத் தேர்தலில் வெற்றி பெற எந்தச் செயலையும் செய்வார்கள். பொள்ளாச்சி சம்பவம் மிகவும் வருத்தத்திற்குரியது. ஆளுங்கட்சியைச் சேர்ந்த சிலரைக் காப்பாற்றுவதற்கு முயற்சிக்கின்றனர். நாங்கள் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கினோம்.

இதனால், கோவை மண்டலத்தைச் சேர்ந்த தங்கமணி, வேலுமணி போன்றவர்களின் ஆதிக்கம் சற்று அதிகம் உள்ளது. கருத்துக் கணிப்புகள் கருத்துத் திணிப்புகள். எங்களுக்கு வெற்றி வாய்ப்பு இல்லை. ஓட்டு வங்கி இல்லை என்று கூறுகிறார்கள். இதே போன்று தான் ஆர்.கே.நகர் தொகுதியிலும் கூறினார்கள். ஆனால், நான் வெற்றி பெறவில்லையா. மக்கள் எந்த பக்கம் உள்ளார்கள் என்பது எனக்கு தெரியும். எனவே, இந்தத் தேர்தலும் அமமுக பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெறும்" என்றார் டிடிவி தினகரன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x