இந்தத் தேர்தல் 2-வது சுதந்திரப் போர்; இதில் ஜனநாயகம் நிச்சயம் வெல்லும்: வைகோ நம்பிக்கை

இந்தத் தேர்தல் 2-வது சுதந்திரப் போர்; இதில் ஜனநாயகம் நிச்சயம் வெல்லும்: வைகோ நம்பிக்கை
Updated on
1 min read

இந்தத் தேர்தல் 2-வது சுதந்திரப் போர்; இதில் ஜனநாயகம் நிச்சயம் வெல்லும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நம்பிக்கை தெரிவித்தார்.

திமுக கூட்டணியில் மதிமுக இடம்பெற்றுள்ளது. கூட்டணி வேட்பாளர்களுக்காக தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்தார் வைகோ.

இந்நிலையில் இன்று அவர் தனது சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் வாக்களித்தார். கலிங்கப்பட்டி தென்காசி மக்களவை தொகுதிக்கு உட்பட்டது. தென்காசியில் திமுக சார்பில் தனுஷ் எம்.குமார் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, "மக்கள் அனைவரும் மலர்ந்த முகத்துடன் வாக்குச்சாவடிகளுக்குச் செல்கின்றனர்.  சுதந்திரமாக செயல்பட வேண்டிய சுயாதீன அமைப்புகளான ஐபி, சிபிஐ, அமலாக்கப்பிரிவு, வருமான வரித்துறை, தேர்தல் ஆணையம் ஆகியனவற்றை மத்திய அரசு தனது பிடியில் வைத்திருக்கிறது.

தமிழகத்தில் மாநில அரசு, காவல்துறை துணையுடன் அந்த அமைப்புகளை அவ்வப்போது ஏவி அராஜகம் செய்கிறது. எதிர்க்கட்சியினர் வீடுகளில் மட்டும் தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக சோதனை செய்கிறது. வேலூர் தேர்தல் ரத்து செய்ததுபோல் இதற்கு முன்னதாக நடந்ததே இல்லை.

துரைமுருகனுக்கும் அவர் மகன் கதிர் ஆனந்த்துக்கும் இதில் நேரடியாக எவ்விதத் தொடர்பு இல்லை. தேர்தலை ரத்து செய்வது என்றால் தொகுதிக்கு உட்பட்ட ஆம்பூர், குடியாத்த இடைத் தேர்தலையும் சேர்த்தே ரத்து செய்திருக்க வேண்டும். அதுதான் நியாயமான நடவடிக்கையாக இருந்திருக்க வேண்டும். ஆனால் தேர்தல் ஆணையம் நடுநிலை தவறியிருக்கிறது.

அதேபோல், இறுதிநாள் பிரச்சாரம் முடிந்தபோது கனிமொழி வீட்டில் சோதனை நடத்தியது. ஆனால், தேனியில் துணை முதல்வர் ஓபிஎஸ்-ஸின் மகன் ரவீந்திரநாத்துக்கு பணம் வெள்ளமாகப் பாய்ந்தது. ஓட்டுக்கு ரூ.2000-ல் இருந்து ரூ.10,000 வரை வழங்கப்பட்டது. ஆனால் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்தத் தேர்தல் இரண்டாவது சுதந்திரப் போர். இது ஜனநாயகத்துக்கும் பாசிஸத்துக்கும் இடையேயான போர். இதில் நிச்சயம் ஜனநாயகம் வெல்லும்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in