

திருவல்லிக்கேணி லாயிட்ஸ் காலனி அருகே சாலையில் சென்ற 3 சிறுவர்களை ஒரு கும்பல் கத்தியால் தாக்கி செல்போனைப் பறித்துச் சென்றது. காயமடைந்த சிறுவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
சென்னை திருவல்லிக்கேணி ராகவன் தோட்டத்தைச் சேர்ந்தவர் பிரபு (16) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் நேற்றிரவு 9 மணி அளவில் தனது நண்பர்கள் இருவருடன் லாயிட்ஸ் காலனி அருகே நடந்து வந்தார்.
அப்போது சுமார் 20 வயது மதிக்கத்தக்க ஐந்து நபர்கள், பிரபு உள்ளிட்ட மூன்று சிறுவர்களையும் மடக்கி கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளனர். பின்னர் கத்திமுனையில் அவர்கள் மூவரையும் லாயிட்ஸ் காலணி பிள்ளையார் கோயில் பின்புறம் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று செல்போன் கேட்டுள்ளனர்.
அப்போது 3 சிறுவர்களும் செல்போனைக் கொடுக்க மறுக்கவே அவர்களை மிரட்ட பிரபுவின் வலதுகை மற்றும் விலா பகுதியில் கீறியுள்ளனர். இதனால் பிரபு அலறினார். செல்போனைக் கொடுக்காவிட்டால் அனைவரையும் வெட்டுவோம் என அந்தக் கும்பல் மிரட்டவே 3 பேரும் பயந்துபோய் தங்களிடமிருந்த செல்போனைக் கொடுத்துள்ளனர்.
பின்னர் அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. காயம்பட்ட பிரபு உள்ளிட்ட 3 பேரும் உடனே காவல் நிலையம் சென்று புகார் அளித்துவிட்டு அங்கிருந்து அரசு ராயப்பேட்டை மருத்துவமனைக்குச் சென்று புறநோயாளியாக சிகிச்சை பெற்று சென்றனர். சிறுவர்கள் புகாரின் பேரில் ஐஸ் ஹவுஸ் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.