Published : 26 Apr 2019 06:14 PM
Last Updated : 26 Apr 2019 06:14 PM

சாலையில் கல்லை வைத்து செயற்கை விபத்து: தந்தையின் உயிரிழப்பால் தகர்ந்துப்போன மகனின் மருத்துவ கனவு: கொடூர நபர் கைது

மதுரையில் நெடுஞ்சாலையில் கல்லை போட்டுவைத்து விபத்து ஏற்படுத்தி கொள்ளை அடிக்கும் நபரின் செயலால் அநியாயமாக ஒரு குடும்பத்தலைவர் உயிரிழக்க அவரது மகனின் மருத்துவப்படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.

மதுரை திருநகரை அடுத்த பாண்டியன் நகரில் வசித்தவர் பாஸ்கர் (48). மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள தனியார் ஸ்கேன் சென்டரில் லேப் டெக்னீசியனாக வேலை செய்துவந்தார். இவரது மனைவி ஸ்ரீதேவி (42), தனியார் பள்ளியில் ஆசிரியராக உள்ளார். இவர்களுக்கு பிளஸ்டூ முடித்த மகன், 5-ம் வகுப்பு படிக்கும் ஒரு மகள் உள்ளனர்.

நான்கு நாட்களுக்கு முன் பாஸ்கர் வேலைமுடிந்து செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 1 மணிக்கு தனது இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். திருப்பரங்குன்றம் பூங்கா  பேருந்து நிலையம் பகுதியில் நெடுஞ்சாலையில் வழுக்கி விழுந்தவர் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

போலீஸார் அதை சாதாரண விபத்து வழக்காக கரிமேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் பதிவு செய்தனர். ஆனால் அவரது செல்போனும் தோளில் மாட்டி வந்த பையும் காணாமல் போயிருந்தது. இதனால் குடும்பத்தார் சந்தேகம் அடைந்தனர்.

போலீஸாரிடம் கேட்டபோது விபத்து நடந்த இடத்தில் பல வாகனங்கள் சென்றிருக்கும் அதில் யாராவது விஷமிகள் எடுத்துச் சென்றிருப்பார்கள் செல்போன் எண்ணை கொடுங்கள் பிடித்துவிடலாம் என்று கூறியுள்ளனர்.

ஆனால் பாஸ்கரன் அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுபவர் அல்ல, விபத்து நடந்த நேரத்தில் வேறு எந்த வாகனத்தின் மீதும் மோதவில்லை, பின்னர் எப்படி விபத்து நடந்தது என போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டதால் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை கைப்பற்றி சோதித்தனர்.

அப்போது அவர்களுக்கு பலத்த அதிர்ச்சி காத்திருந்தது. பாஸ்கர் விபத்தில் இறக்கவில்லை, அவர் செயற்கையான விபத்தினால் கொல்லப்பட்டிருக்கிறார் என்பது தெரியவந்தது. சிசிடிவி காட்சியில் ஒரு நபர் சாலையின் நடுவில் மூன்று பெரிய கற்களை வைத்துவிட்டு பக்கத்தில் உள்ள சுவற்றில் சென்று படுத்துக்கொள்கிறார்.

சாலையில் வரும் வாகனங்கள் பெரிய கல்லைப்பார்த்து அதில் ஏறாமல் கஷ்டப்பட்டு அதைத்தாண்டி செல்கின்றன. அப்போது ஒரு வேன் ஓட்டுனர் இதைப்பார்த்து வேனை நிறுத்திவிட்டு இறங்கிவந்து கற்களை அப்புறப்படுத்த வருகிறார். அப்போது சுவற்றில் படுத்துக்கிடக்கும் அந்த நபர் எழுந்து அந்த வேன் டிரைவரை அடிக்கப்போகிறார்.

உன் வேலையைப் பார்த்துக்கொண்டு போ என மிரட்டுகிறார். இதனால் பயந்துபோன வேன் ஓட்டுநர் வேனை எடுத்துக்கொண்டு சென்று விடுகிறார். அந்த நபர் மீண்டும் குட்டைச் சுவற்றின்மீது படுத்துக்கொண்டு யாராவது இரு சக்கர வாகன ஓட்டி அந்த கல்லின்மீது மோதி விபத்தில் சிக்குகிறார்களா என கண்காணித்தப்படி இருக்கிறார்.

அவர் நினைத்தப்படி ஒரு மோட்டார் சைக்கிள் கல்லின்மீது மோதி நிலைகுலைந்து ஓட்டிவந்தவர் சாலையின் இடதுபுறமும், மோட்டார் சைக்கிள் சாலையின் இடதுபுறமும் விழுகின்றனர். அப்போதும் அந்த நபர் சாதாரணமாக சுவற்றின்மீது படுத்துக்கிடக்கிறார். சாலையில் விழுந்தவர் துடித்து மயங்கி விடுகிறார்.

அவ்வழியாக செல்லும் சில வாகனங்கள் சாதாரணமாக விபத்தைப் பார்த்துவிட்டு கடக்கின்றன. பின்னர் சிறிது நேரம் கழித்து மினி பிக்கப்வேன் ஒன்று எதிர் திசையில் வருகிறது. வேன் ஓட்டுநர் விபத்தைப்பார்த்து நிறுத்திவிட்டு கீழே இறங்குகிறார்.

அந்த நேரம் அந்த நபரும் சடாரென்று எழுந்து சென்று அந்த நபரிடம் ஏதோ சொல்கிறார். வேன் ஓட்டுநர் தனது போனை எடுக்க வேன் அருகில் செல்கிறார். அந்த நேரத்தில் அந்த நபர் கீழே மயக்கமுற்று கிடக்கும் நபர் அருகில் சென்று அவரது செல்போனை எடுத்து தனது பாக்கெட்டுக்குள் வைத்துக்கொள்கிறார்.

வேன் ஓட்டுநர் ஆம்புலன்ஸை அழைக்கும் நேரத்தில், சிறிது தூரத்தில் கிடக்கும் விபத்தில் சிக்கியவரின் பையையும் எடுத்து சாமர்த்தியமாக சுவற்றின் மறுபக்கத்தில் வீசி விடுகிறார். விபத்து ஏற்படுத்த தான் சாலையில் போட்டுவைத்த கற்களையும் அப்புறப்படுத்திவிடுகிறார்.

பின்னர் அங்கிருந்து கிளம்பிச் சென்று விடுகிறார். பின்னர் ஆம்புலன்ஸ் வருகிறது. போக்குவரத்து புலனாய்வு போலீஸார் வருகிறார்கள். ஆம்புலன்ஸில் அவரை காயமுற்றவரை ஏற்றி ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றனர்.

அவர் ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்த பாஸ்கர். இதைப்பார்த்து போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். சாதாரணமாக சாலையில் கல்லை வைத்து விபத்தை ஏற்படுத்தும் கொடூர மனம் கொண்ட அந்த நபர் விபத்து நடந்தவுடன் வெகு சாதாரணமாக செல்போனை எடுப்பதும், பையை எடுத்து ஒளித்து வைப்பதும் அவர் முதன்முறை குற்றம் புரிந்தவர்போன்று தெரியவில்லை.

வெகு நாட்களாக இந்த வேலையை செய்து விபத்து ஏற்படுத்தி அதன்மூலம் பணம், நகைகளை கொள்ளை அடிக்கும் நபராக தெரிகிறது. அந்த நபரை போலீஸார் துப்புத்துலக்கி பிடித்தனர்.

சிசிடிவி-யில் சிக்கிய அந்த கொடூர நபர் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த ராஜா என்பது தெரியவந்தது. இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீஸார், அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த கோடூரமான நபர் செய்தது கொலைக்குற்றத்துக்கு ஈடானது. ஆகவே இதை விபத்து வழக்காக பதிவு செய்யக்கூடாது என்பது பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கையாக உள்ளது. உயிரிழந்த பாஸ்கரின் மகன் சமீபத்தில் பிளஸ்டூவில் அதிக மதிப்பெண்களுடன் தேர்வாகியுள்ளார்.

இதை கேள்விப்பட்டு சந்தோஷத்தில் குதித்த பாஸ்கர் தனது மகனை மருத்துவப்படிப்பில் சேர்க்க முயற்சி எடுத்து வந்த நிலையில் செயற்கை விபத்தில் கொல்லப்பட்டுள்ளார். இதனால் அவரது மகனின் மருத்துவ கனவு தகர்ந்துபோனது.

கொடூர விபத்தை ஏற்படுத்திய ராஜா தேர்வு செய்த இடம், அருகிலேயே படுத்துக்கொண்டு கண்காணிக்க சுவர் உள்ள இடம். இதை வைத்து பார்க்கும்போது அவர் பலதடவை இதுபோன்ற செயலில் ஈடுபட்டவர் என்பது தெரிய வருகிறது. இதற்கு முன்னரும் இதேபோன்று அந்த நபர் விபத்தை ஏற்படுத்தி கொள்ளையடித்திருக்கலாம். போலீஸார் அதை அலட்சியமாக கையாண்டு விபத்து வழக்காக முடித்திருக்க வாய்ப்புள்ளது.

காரணம் இந்த வழக்கிலும் குடிபோதையில் லிப்ட் தராததால் அவர் இவ்வாறு செய்தார் என போலீஸ் தரப்பில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதுபோன்ற நபர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால் பாஸ்கர்போன்ற குடும்பத்தலைவர்கள் உயிரிழப்பும், அவரது மகனின் மருத்துவ படிப்பு பாதிக்கப்பட்டதுபோன்ற நிகழ்வும் நடக்க வாய்ப்புள்ளது.

இருசக்கர வாகன ஓட்டிகள் இரவில் நெடுஞ்சாலையில் பயணத்தை தவிர்க்கவும், அவ்வாறு பயணம் செய்ய நேர்ந்தால் மித வேகத்தில் ஜாக்கிரதையாக பயணம் செய்யவும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x