

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மகப்பேறு மருத்துவமனைகளில் கர்ப்பிணிகளுக்கான இலவச யோகா பயிற்சி புதன்கிழமை தொடங்கப்பட்டது.
சென்னை மாநகராட்சியின் 2014-15 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனை களுக்கு வரும் கர்ப்பிணிகளுக்கு இலவச யோகா பயிற்சி வழங்கப் படும் என்று அறிவிக்கப்பட்டிருந் தது. இதைத்தொடர்ந்து மாநக ராட்சியில் உள்ள அனைத்து 24 மணிநேர மகப்பேறு மருத்துவ மனைகளிலும் இலவச யோகா பயிற்சி நேற்று தொடங்கப்பட்டது.
வடபழனியில் உள்ள 24 மணி நேர மகப்பேறு மருத்துவமனை யில் நடந்த விழாவில் மேயர் சைதை துரைசாமி கலந்துகொண்டு இந்த பயிற்சித் திட்டத்தை தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர், துணை ஆணையர் (சுகாதாரம்) ஆனந்த், துணை மேயர் பெஞ்சமின் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இத்திட்டம் குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
கர்ப்பிணிகள் சுகப்பிரசவத்தின் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் நிலையை உருவாக்கும் பொருட்டு இந்த யோகா பயிற்சி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் எளிய யோகா மற்றும் மூச்சுப் பயிற்சிகள் அவர்க ளுக்கு கற்றுக் கொடுக்கப்பட உள்ளன.
இப்பயிற்சியின் மூலம் அவர்களின் இடுப்பெலும்பு தசைகள் வலுப்பெறுவதுடன் சுகப்பிரசவம் நடைபெற ஏதுவாக அமைகிறது. இதனால் அதிக அளவில் சுகப்பிரசவங்கள் நடைபெறும் வாய்ப்புள்ளது.
இந்த இலவச யோகா பயிற்சியை பெற விரும்புபவர்கள் அந்தந்த மண்டலங்களில் உள்ள 24 மணிநேர மகப்பேறு மருத்துவ அலுவலரை அணுகி தங்கள் பெயர்களை பதிவு செய்துகொள்ளலாம்.
வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் காலை 10 முதல் 12 மணி வரை யோகா பயிற்சி வழங்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.