

மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால், அரசியல் கட்சிகள் சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. நகரம், கிராமம் என இண்டு இடுக்குகளுக்கெல்லாம் சென்று கட்சித் தொண்டர்கள் பரப்புரை செய்துவருகின்றனர்.
மத்திய சென்னை தொகுதியில் திமுக சார்பில் தயாநிதி மாறன் போட்டியிடுகிறார். அதேபோல அதிமுக கூட்டணியில் பாமக வேட்பாளர் சாம் பால் களத்தில் உள்ளார். மத்திய சென்னைக்கு உட்பட்டு சிந்தாதிரிப்பேட்டை உள்ளது. இங்குள்ள கிறிஸ்தவர்கள் சீயோன் தேவாலயத்துக்கு ஞாயிற்றுக்கிழமை செல்வது வழக்கம்.
அந்த வகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை ப்ரேயர் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அவர்களைக் கவரும் வகையில் திமுகவினரும் பாமகவினரும் வாக்கு சேகரிக்கும் வகையில், சர்ச் வாசலில் பிரார்த்தனை முடித்துத் திரும்புவோருக்காகக் காத்திருந்தனர்.
இதுகுறித்துப் பேசிய பாமக தொண்டர் ஜெரோம், ”அனைத்து மதத்தினரையும் அரவணைத்துச் செல்லும் கட்சி எங்களுடையது. அதனால் கிறிஸ்தவர்களிடம் வாக்குக் கேட்பதற்காகக் காத்திருக்கிறோம்'' என்றார்.
அந்த வழியாகச் சென்ற மக்கள், காத்திருந்த கட்சியினரைத் திரும்பிப் பார்த்துக்கொண்டே சென்றனர்.