இறக்குமதி செய்யப்பட்ட வேட்பாளர்: கனிமொழி பேச்சுக்கு தமிழிசை பதிலடி

இறக்குமதி செய்யப்பட்ட வேட்பாளர்: கனிமொழி பேச்சுக்கு தமிழிசை பதிலடி
Updated on
1 min read

இறக்குமதி செய்யப்பட்ட வேட்பாளர் என்று பிரச்சாரத்தில் கனிமொழி பேசியதற்கு, தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழிசை பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதி கூடுதல் கவனம் ஈர்த்துள்ளது. இதற்கு காரணம் திமுக கூட்டணி சார்பில் கனிமொழியும், அதிமுக கூட்டணி சார்பில் தமிழிசையும் நேரடியாக களத்தில் உள்ளனர். இருவருமே தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

திமுக வேட்பாளர் கனிமொழி பிரச்சாரம் செய்யும் போது, “இந்தத் தொகுதிக்கு தமிழிசை அவர்கள் புதிது. இறக்குமதி செய்யப்பட்டவர். அவர் முதலில் தூத்துக்குடி தொகுதி பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்” என்று தன் பேச்சில் குறிப்பிட்டார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் 'தூத்துக்குடி தொகுதிக்கு யார் இறக்குமதி செய்யப்பட்ட வேட்பாளர்?' என்று வீடியோ பதிவு ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் தமிழிசை சவுந்தரராஜன். அதில் அவர் பேசியிருப்பதாவது:

என்னை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர் கனிமொழி அவர்கள், என்னை இந்தத் தொகுதிக்கு புதிது, இறக்குமதி செய்யப்பட்டவர், தூத்துக்குடிக்கு புதியவர் என்றெல்லாம் சொல்கிறார்கள்.

நான் இந்தத் தூத்துக்குடி தென்பகுதியைச் சார்ந்தவள். இந்த மண்ணின் மகள். அது மட்டுமல்ல, எனது தந்தையும் இந்தப் பகுதியைச் சார்ந்தவர் தான். எனது தாயும் இந்த பகுதியை சார்ந்தவர் தான். ஒன்றுபட்ட மாவட்டமாக இருக்கும் போது, அதுவும் இதே தொகுதி திருச்செந்தூர் பாராளுமன்ற தொகுதியாக இருக்கும் பொழுது என் தாய், தந்தை பிறந்த ஊர் இதே தொகுதிக்குள் தான் வந்தது.

என் தந்தை இந்தத் தொகுதிக்கு உட்பட்டு, இன்று பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ள சாத்தான்குளம் தொகுதியிலிருந்து 2 முறை சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். தனிக்கட்சி நடந்தும் போது அந்த தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். அதுமட்டுமல்ல, நான் 2006-லிலேயே கட்சி வளர்ந்து வருகின்ற சூழ்நிலையில், ஆரம்பத்தில் நான் தென்பகுதியில் தான் சட்டமன்றத்துக்குப் போட்டியிட்டேன்.

ஆக, இந்த தென்பகுதி நெடுநாளையாக புறக்கணிக்கப்பட்டு இருக்கிறது. அதனால், நம்மைப் போன்றவர்கள் வந்து வளர்ச்சிடைய செய்ய வேண்டும் என்ற ஏக்கம் என்னிடம் உண்டு. இன்னும் சொல்லப் போனால், எதிர் போட்டியிடுபவர்களுக்கு தான் இந்தத் தொகுதியில் என்ன உரிமை இருக்கிறது என்று தெரியவில்லை.

யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் போட்டியிடலாம். ஆனால், நான் இந்த மண்ணுக்குச் சொந்தக்காரி என்பதை அழுத்திச் சொல்வேன். இதை வலியுறுத்துவேன். உங்கள் சகோதரியாக உங்களை நோக்கி வருகிறேன். வாக்களியுங்கள் தாமரைக்கு!

இவ்வாறு தமிழிசை சவுந்தராஜன் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் பேசியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in