Published : 16 Apr 2019 04:45 PM
Last Updated : 16 Apr 2019 04:45 PM

அரக்கோணம் இறுதிக்கட்ட கள நிலவரம்: வன்னியர் சமூக வாக்குகளை குறி வைக்கும் ஜெகத்ரட்சகன்; நெருக்கடியில் ஏ.கே.மூர்த்தி

அரக்கோணத்தில் வன்னியர் சமூக வாக்குகளைக் குறி வைத்து திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் களமிறங்கி வேலை செய்து வருவதால் பாமகவை கடும் நெருக்கடிக்கு ஆளாக்கியுள்ளது.

தமிழகத்தில் நட்சத்திர வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் அரக்கோணம் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. திமுக சார்பில் ஜெகத்ரட்சகனும், பாமக சார்பில் ஏ.கே. மூர்த்தியும் இங்கு போட்டியிடுகின்றனர். அமமுக வேட்பாளராக பார்த்திபன் போட்டியிடுகிறார்.

கடந்த 2014-ம் ஆண்டு அரக்கோணம் மக்களவைத் தேர்தலில் 10 லட்சத்து 89 ஆயிரத்து 52 வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில், அதிமுக வேட்பாளர் கோ.ஹரி 4 லட்சத்து 93 ஆயிரத்து 534 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் என்.ஆர்.இளங்கோ 2 லட்சத்து 52 ஆயிரத்து 768 வாக்குகள் பெற்றார். பாஜக கூட்டணியில் இடம் பெற்ற பாமக, அரக்கோணம் தொகுதியில் முன்னாள் ரயில்வே இணையமைச்சர் ஆர்.வேலு போட்டியிட்டு 2 லட்சத்து 33 ஆயிரத்து 762 வாக்குகள் பெற்று மூன்றாமிடம் பிடித்தார்.

திமுக வேட்பாளராக இங்கு போட்டியிடும்  ஜெகத்ரட்சகன் ஏற்கெனவே இரண்டு முறை  வென்ற தொகுதி இது. வலிமையான வாக்கு வங்கியும், தொகுதியில் நன்கு அறிமுகமானவர் என்பதும், ஆன்மீகம் சார்ந்து பல சமூகத்தினருக்கும் பல பணிகளைச் செய்துள்ளார் என்பதும் அவருக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.

பாமகவின் வலிமையான வாக்கு வங்கியையுடன், அதிமுகவின் செல்வாக்கையும் நம்பி களமிறங்கியுள்ளார் பாமக வேட்பாளர் ஏ.கே. மூர்த்தி. ஆனால் வன்னியர் சமூக வாக்குகளை குறி வைத்து ஜெகத்ரட்சகன் பணியாற்றி வருவது ஏ.கே.மூர்த்தியை கலக்கமடையச் செய்துள்ளது.

திமுகவின் கணிசமான வாக்குகளுடன் காங்கிரஸ் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் கூட்டணியில் இருப்பதால் பட்டியலின மக்களின் வாக்குகள், இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவர்களின் வாக்குகளும் திமுக வேட்பாளருக்குக் கிடைக்கும் என்பது கூடுதல் பலம்.

வேலை வாய்ப்புகள் இல்லாதது, ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் மூடப்பட்ட சிறு, குறு நிறுவனங்கள் பாதிக்கப்பட்ட காரணங்களுடன் ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவுக் கடன் ரத்து, கல்விக் கடன் தள்ளுபடி போன்ற திமுக தேர்தல் அறிக்கையை முன்வைத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வன்னியர்களின் வாக்குகள் ஏ.கே.மூர்த்தி, ஜெகத்ரட்சகன் என இருவரில் யாருக்கு விழும் என்ற கணக்கில் களப்பணி நடந்து வருகிறது.

பாமக வாக்குகளைப் போலவே, அதிமுகவின் வாக்குகளும் தனக்கு கூடுதல் பலத்தை தரும் என ஏ.கே.மூர்த்தி நம்புகிறார். ஆனால், அமமுகவின் பார்த்திபன் (முன்னாள் எம்.பி. கோபால் மகன்) அதிமுகவின் வாக்குகளை கணிசமாகப் பிரிக்கும் அளவுக்கு பணியாற்றி வருகிறார். இதனால் அதிமுக கூட்டணியின் வாக்குகளை திமுகவும், அமமுகவும் பிரிக்கும் சூழ்நிலை நிலவுகிறது. இதனால் ஜெகத்ரட்சகனுடன் கடுமையான போட்டியை எதிர்கொள்ளும் நிலைக்கு ஏ.கே.மூர்த்தி தள்ளப்பட்டுள்ளார்.

இதனிடையே நாளை மறுதினம் தேர்தல் நடைபெறும் நிலையில் தொகுதியில் ஆங்காங்கே பணப் பட்டுவாடா நடைபெறுவதாக கூறப்படுகிறது. இதுவும் தேர்தல் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x