Last Updated : 25 Apr, 2019 10:53 AM

 

Published : 25 Apr 2019 10:53 AM
Last Updated : 25 Apr 2019 10:53 AM

வாய்க்கு பூட்டு போடும் முனியப்பன் சாமி!

கிடா மீசை, உருண்டு,  சிவந்த விழிகள், வெட்டரிவாளுடன் குதிரை மீது அமர்ந்து காவல் காக்கும் முனியப்பனின் பிரம்மாண்ட சிலைகளை பல ஊர்களில் காணலாம். காவல் தெய்வமான முனியப்பனின் பின்னணி கதைகள் ஒவ்வொன்றும் சுவாரஸ்யமாகவும், ஆச்சர்யமாகவும் இருக்கும்.

சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில், ஏற்காடு அடிவாரம் செல்லும் சாலையில் அய்யந்திருமாளிகை பகுதியில்  அமைந்துள்ளது ஆலங்குட்டை பூட்டு முனியப்பன் கோயில். சேலம் மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்களும் இந்தக் கோயிலுக்கு வந்து வேண்டிச் செல்கின்றனர்.  இங்குதான் அந்த ஆச்சரியத்தைக் காணலாம். பொதுவாக, வீடோ, கோயிலோ ஒன்று அல்லது இரண்டு பூட்டுகள்தான் இருக்கும். ஆனால், இந்தக் கோயிலைச் சுற்றிலும் ஏராளமான பூட்டுகள் குவியல் குவியலாய் தொங்கிக்கொண்டிருக்கும்.

இந்த பூட்டு முனியப்பன் கோயில், கடந்த 150 ஆண்டுகளாக இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆரம்பத்தில் ஆலங்குட்டை முனியப்பன் கோயில் என்றே இது அழைக்கப்படது. பல ஆண்டுகளுக்கு முன் கோயில் பூசாரி, முனியப்பன் சன்னதியில் ஒரு பூட்டை பூட்டிவைத்து,  தனது பிரச்சினைக்கு  தீர்வுகாண வேண்டுமென வேண்டியுள்ளார். ஒரு மாதத்தில் பூசாரியின் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது. தனது வேண்டுகோளை முனியப்பன் ஏற்று, தீர்த்து வைத்ததாக பூசாரி நம்பினார். இதையடுத்து, ஏராளமான பக்தர்கள் பல்வேறு கோரிக்கைகளுக்காக இக்கோயிலில் பூட்டை மாட்டி, வேண்டிக் கொள்கினறனர். பக்தர்கள் பலரின் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைப்பதாக நம்பிக்கை நிலவுகிறது.

பெரும்பாலும் பெண்கள், மாணவ, மாணவிகள் அதிக அளவில் இங்கு வருகின்றனர். மாமியார்-மருமகளிடையே வாக்குவாதம், சண்டை ஏற்பட்டால்கூட, இக்கோயிலில் பூட்டை மாட்டி,  முனியப்பனிடம்  வேண்டிச்  செல்கின்றனர். “முனியப்பனிடம் மாமியார் வேண்டியிருந்தால், மருமகள் மவுனமாகிவிடுவதும், மருமகள் வேண்டினால் மாமியார் மவுனமாகிவிடுவதும் நடக்கிறது. இதன் மூலம் குடும்பத்தில் பிரச்சினை நீங்கி, மகிழ்ச்சி நிலவுகிறது” என்கின்றனர் முனியப்பன் பக்தர்கள் சிலர்.

இதேபோல, பல குடும்பத் தகராறுகளுக்கும் தீர்வளிக்கும் காவல் தெய்வமாக ‘பூட்டு முனியப்பனை’ பக்தர்கள் போற்றி வணங்குகின்றனர். 10-ம் வகுப்பு, பிளஸ் 2  மாணவ, மாணவிகள், தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமென முனியப்பனை வேண்டிக்கொண்டு, இக்கோயிலில் பூட்டு பூட்டிவைக்கின்றனர். இதேபோல, எத்தனையோ கோரிக்கைகளை முன்வைத்து, கோயிலில் பூட்டு பூட்டுகின்றனர்.

வேண்டுகோள் நிறைவேறியதும் இந்தக்  கோயிலுக்கு வந்து, தங்கள் பெயரை எழுதி, கட்டித்  தொங்க விட்ட பூட்டைத் திறந்து, கோயில் வளாகத்தில் உள்ள தொட்டிக்குள் அந்தப் பூட்டை போட்டுச் செல்கின்றனர். இங்கு நேர்த்திக் கடனுக்காக ஆயிரக்கணக்கான பூட்டுகள் தொங்கவிடப்பட்டுள்ளன. அதேபோல, வேண்டுதல் நிறைவேறியவர்கள்,  பூட்டைத் திறந்து தொட்டியில் போட்ட பூட்டுகளும் குவியல் குவியலாக காட்சியளிக்கின்றன.

காணிக்கை செலுத்துதல், அலகு குத்துதல், தீ மிதித்தல், துலாபாரம் செலுத்துதல் என எத்தனையோ வேண்டுதல்களுக்கு மத்தியில், கோயிலில் பூட்டு போடும் இந்த விநோத வேண்டுதலும், வழிபாடும் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x